இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை, ரன் மெஷின் விராட் கோலி பேட்டிங் களமிறங்கினால் சரவெடிதான். ஆனால் இப்போது, டெஸ்ட், ஒரு நாள், டி-20 என அனைத்து கிரிக்கெட் ஃபார்மேட்களிலும் கோலி செஞ்சுரி அடித்து ஒன்றரை வருடங்கள் ஆகிவிட்டது என ஸ்டாட்ஸ் சொல்கின்றது. 


லீட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கிய இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங் செய்தது. இந்திய பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுக்க முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 78 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கேப்டன் கோலி 7 ரன்களுக்கு வெளியேறினார். 


ஏற்கனவே ஆண்டர்சன் பந்துவீச்சில் ராகுலும், புஜாராவும் அவுட்டாகி இருந்தனர். 4-2 என இந்திய அணி தத்தளிக்க அரம்பித்தபோது கேப்டன் கோலியிடம் இருந்து பொறுப்பான ஆட்டத்தை எதிர்பார்த்திருந்தனர் ரசிகர்கள். ஆனால், மீண்டும் தனது தவறான ஷாட் செலக்‌ஷனால் ஆண்டர்சனின் வலையில் சிக்கினார் கோலி. 17 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட கோலி, வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார். இது ரசிகர்கள் மத்தியிலும், கிரிக்கெட் விமர்சகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றமாக அமைந்தது. 









Also Read: தங்கத்திலும் சேமிக்கலாம்.. லலிதா ஜூவல்லரியின் நகை முன்பதிவுத் திட்டம்!


கடைசியாக, 2019-ம் ஆண்டு வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கோலி சதம் அடித்திருந்தார். கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், கோலி சதம் அடிக்க தடுமாறிக் கொண்டிருக்கிறார். தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில், 4 இன்னிங்ஸில் மொத்தம் 69 ரன்கள் அடித்துள்ளார், அதிகபட்சமாக 42 ரன்கள். 


கோலி அவுட்டாவதுதான் வருத்தம் அளிக்கிறது என்றால், ஒரே டிசைனில் அவுட்டாவதுதான் ரசிகர்களை இன்னும் ஏமாற்றம் அடையச் செய்கிறது, கோலியின் மீதான நம்பிக்கையை தகர்த்து வருகிறது. ஒரே டிசைனில், தவறான ஷாட்டால் விக்கெட் கீப்பர் அல்லது ஸ்லிப்பில் இருப்பவர்களிடம் கேட்ச் கொடுத்து அவுட்டாகி வருகிறார் கோலி. 



சமீபத்தில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில், நியூசிலாந்திடம் தோல்வியடைந்த இந்திய அணியின் மீதும், கோலியின் கேப்டன்சி மீதும் விமர்சனம் வைக்கப்பட்டது. அதில், பேட்ஸ்மேன் கோலிக்கும், அவர் பதிவு செய்து வந்த ரெக்கார்டுகளும் தடைப்பட்டுவிட கூடாது என்பதிலும், இன்னும் பல பேட்டிங் அதிரடிகளை அவர் படைக்க வேண்டும் என்பதற்காகவும், கேப்டன்சியை விட்டு பேட்டிங்கில் கவனம் செலுத்த வேண்டும் என விமர்சங்கள் முன்வைக்கப்பட்டது. ஆனால், கேப்டன்சியால் மட்டும்தான் கோலியால் சிறப்பாக செயல்பட முடியவில்லையா? அல்லது கோலியின் ஃபார்ம், ஷாட் செலக்‌ஷன்கள்தான் காரணமா? எதுவாக இருந்தாலும், கோலி தனது பேட்டிங்கில் மாற்றங்கள் கொண்டு வந்தால் மட்டுமே, ரன் மெஷின் கோலி திரும்ப களம் இறங்க முடியும். 


Also Read: ப்ளாஷ்பேக்: தடுமாறிய விஜயசாந்தி... தத்தளித்த மணிவண்ணன்...ஈரத்தில் சிக்கிய கல்லுக்குள் ஈரம்!