தமிழ்நாட்டில் கொரோனா  கட்டுப்பாடுகள் காரணமாக திருவிழாக்களில் கலந்து கொள்வதற்கும் திருவிழா நாட்களில் சுவாமி தரிசனம் செய்வதற்கும் பக்தர்களுக்கு  தடை விதிக்கப்பட்டிருந்தது.  இந்த நிலையில் நேற்றுடன்   திருவிழா நிறைவு பெற்றதை அடுத்து இன்று முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.





அறுபடை வீடுகளுள் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெறக்கூடிய முக்கிய விழாக்களில் ஒன்றான ஆவணித் திருவிழா கடந்த மாதம் இருபத்தி ஏழாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற்றது. 

வழக்கம்போல் தமிழகத்தின்  பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்திருந்த பக்தர்கள் கட்டுப்பாடு கொரோனா  நெறிமுறைகளை கடைப்பிடித்து சுவாமி தரிசனம் செய்து  வேண்டுதல்களை நிறைவேற்றி வருகின்றனர். திருச்செந்தூர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கடலில் புனித நீராடிய பின்னர் நாழிக்கிணற்றில் நீராடுவது பாரம்பரியமான நடைமுறை, ஆனால் தற்போது கடலில் புனித நீராட பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்தாலும் நாழிக்கிணற்றில் புனித நீராட தடை விதிக்கப்பட்டு உள்ளது



தமிழகத்தில்  இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களில் பக்தர்கள் முடி காணிக்கை செலுத்த கட்டணம் கிடையாது என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறநிலையத்துறை மானியக் கோரிக்கையில் சட்டசபையில் தெரிவித்திருந்தார். இதனையடுத்து இன்று முதல் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயிலில் பக்தர்கள் முடி காணிக்கை செலுத்த கட்டணம் வாங்கப்படவில்லை. 



மேலும் முடி காணிக்கை செலுத்த வரும் பக்தர்களுக்கு கட்டணம் கிடையாது என எழுதப்பட்டிருந்த ரசீது வழங்கப்பட்டது. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து வந்த பக்தர்கள் மகிழ்ச்சியுடன்  முடி காணிக்கை செலுத்தி கடலில் புனித நீராடி தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றி வருகின்றனர். 




 



 



 





வேண்டுல்களுக்காக  இலவசமாக முடிகாணிக்கை செய்ய அறிவிப்பு செய்த  தமிழக அரசுக்கும் அறநிலைத் துறை அமைச்சருக்கும் பக்தர்கள் நன்றியை தெரிவித்தனர்.