இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 78 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனைத் தொடர்ந்து, தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா, கே.எல்.ராகுல் ஆகியோர் களமிறங்கினார்கள். ஜேம்ஸ் ஆண்டர்சன் வீசிய முதல் ஓவரிலேயே ராகுல் டக் அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தார். ராகுல் கொடுத்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் புஜாரா 1, கோலி 7 ரன்களுடன் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 21 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை பறிகொடுத்து இந்தியா தடுமாறிய நிலையில், ரோகித் சர்மா, ரஹானே ஆகியோர் அணியை சரிவில் மீட்க வேண்டும் என்ற எண்ணத்துடன் விளையாடினார்கள். 25.5 ஓவரில் ராபின்சன் பந்தில் ரஹானே 18 ரன்களுக்கு ஆட்டமிழந்த சிறிது நிமிடத்தில் உணவு இடைவேளை வந்தபோது, இந்திய 4 விக்கெட்டுகளுக்கு 56 ரன்களுக்கு சேர்த்திருந்தது.
சமீபகாலமாக டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நம்பிக்கை நாயகனாக விளங்கும் ரிஷப் பண்ட், இக்கட்டான நேரத்தில் இருக்கும் அணிக்காக நன்றாக ஆடுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், அவரும் 2 ரன்களுக்கு தனது விக்கெட்டை கொடுத்து அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார். ஆல்ரவுண்டர் ஜடேஜாவும், ஓபனிங்கில் இருந்து தனது விக்கெட்டை இழக்காமல் பொறுமையாக விளையாடி வந்த ரோகித்தும் ஒவ்வொரு ரன்னாக சேர்த்த நிலையில், ஓவர்டன், ரோகித் சர்மா, அடுத்த பந்திலேயே ஷமியையும் தூக்கினார். அடுத்த ஓவரை வீசிய சாம் கரண் ஜடேஜாவையும், பும்ராவையும் அடுத்தடுத்து வீழ்த்தினார். அப்போது 9 விக்கெட்டுகளை இழந்து 67 ரன்கள் இந்தியா எடுத்திருந்தது. இஷாந்த் சர்மா, சிராஜ் சிறிது நேரம் நிலைத்து நிற்க இறுதியாக இந்தியா 40.4 ஓவரில் 78 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ரோகித், ரஹானேவை தவிர்த்து மற்ற இந்திய வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் தங்களது விக்கெட்டை இழந்தனர்.
இந்திய அணியில் அதிகபட்சமாக ரோகித் சர்மா 19, ரஹானே 18 ரன்கள் எடுத்தனர். இஷாந்த சர்மா அவுட்டாகாமல் 8 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து அணி தரப்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஓவர்டன் தலா 3 விக்கெட்டுகளையும், ராபின்சன், சாம் கரண் தலா 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.
இதனைத்தொடர்ந்து, தனது முதல் இன்னிங்ஸை விளையாடி வரும் இங்கிலாந்து அணி தேநீர் இடைவேளைக்கு பிறகு விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்துள்ளது. ரோரி பர்ன்ஸ் 3, ஹமீத் 15 ரன்களுடன் விளையாடி வருகின்றனர்.