செங்கல்பட்டு மாவட்டம். மகேந்திரா வேர்ல்ட் சிட்டியில் BMW சொகுசு கார் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகின்றது. இத்தொழிற்சாலையில் 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிசெய்து வருகின்றனர். இத்தொழிற்சாலையில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு ஒப்பந்தம் மேற்கொள்வது வழக்கம். கடந்த 17 மாதங்களாக ஊதிய உயர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படாமல் உள்ளது. இதனைத் தொடர்ந்து தொழிலாளர் நலத்துறை துணை ஆணையர் விமலநாதன் தலைமையில் கடந்த  மாதத்திலிருந்து இதுவரை 3 பேச்சுவார்த்தை கூட்டங்கள் நடைபெற்றுள்ளது.



 

தொழிலாளர் நலத்துறை துணை அணையரின் அறிவுரையை ஏற்று வேலை நிறுத்தம் செய்யமால் தொடர்ந்து தொழிலாளர்கள் பணி செய்து வருகின்றனர். இந்நிலையில் தொழிற்சாலையில் பணி செய்திடும் தொழிற்சங்க தலைவர்கள் 9 பேருக்கு ஆலை நிர்வாகம் கட்டாய பணி விடுப்பு வழங்கியுள்ளது. இதனை கண்டித்தும் கட்டாய விடுப்பு வழங்கிய தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு மீண்டும் பணி வழங்கிட வலியுறுத்தியும் நேற்றைய தினம் மதிய உணவை புறக்கணித்து தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.



 

இந்நிலையில் இன்று காலை பணிக்கு வந்த தொழிலாளர்களிடம் ஆலை நிர்வாகம் ஒரு உறுதி மொழி படிவத்தில் கையொப்பம் போட வேண்டும் எனவும் கையெழுத்து போட்ட பின்னரே ஆலைக்குள் செல்ல வேண்டும் எனவும் நிர்பந்தித்துள்ளனர். கையெழுத்து போடதவர்கள் ஆலைக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால்  ஆலைக்கு வெளியே பணி கேட்டு  தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

இதுகுறித்து  சிஐடியு தொழிற்சங்கத்தை சேர்ந்த மாநில துணைப் பொதுச் செயலாளர் எஸ்.கண்ணன்,  மாவட்டத் தலைவர் கே.சேஷாத்திரி மற்றும் BMW தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலை நிர்வாகத்திடம் கொடுத்துள்ள மனுவில் நிறுவனத்தில் 11 அண்டுகளுக்கு மேலாக  பணியாற்றிவரும்  தொழிலாளர்களை நிர்வாகம் திடீரென ஆலை வாயிலில் நிறுத்தி  உறுதி மொழி  படிவத்தில் கையெழுத்து  கேட்டது. அதை படித்த பார்த்த போது  வழக்கமான நிலையாணைகளின் சரத்துகள்  என்பதை  தொழிற்சங்கம்  புரிந்து கொண்டது. 11 ஆண்டுகளில் நிர்வாகம் இதுபோன்று எப்போதும் நடந்து கொண்டது கிடையாது. இது  தொழிலாளர்களுக்கு அதிர்ச்சி அளிக்கின்றது.

 


 

தொழிற்சாலை பேருந்தில் வழக்கம் போல் பணிக்கு வந்த தொழிலாளர்களை வெளியில் காத்திருக்க வைத்திருப்பதும் பணிக்கு அனுமதிக்காமல் உணவு வழங்காமல் இருப்பதும் தொழிற்சங்கத்தை பழிவாங்கும் விதத்தில் நிறுவனம் நடந்து கொள்வதாக  உள்ளது. தொழிற்சங்கம்  கடந்த மாதம் 21 ஆம் தேதி அளித்த  வேலை நிறுத்த  அறிவிப்பு  குறித்து தொழிலாளர் நல துணை ஆணையர் முன்னிலையில் மூன்று கட்டமாக பேச்சு வார்த்தை நடந்துள்ள நிலையில் தொழிலாளர் துணை ஆணையர் விமலநாதன் அளித்த அறிவுரையின் படி  வேலை நிறுத்தம்  நடத்த கூடாது  என தொழிற்சங்கம்  பின்பற்றிவருகின்றது.



 

இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் இமெயில் மூலம்  தொழிற்சங்க நிர்வாகிகள் 9 பேருக்கு கட்டாய விடுப்பு நிர்வாகம் வழங்கியுள்ளது. இதை அறிந்த தொழிற்சங்கம் நிர்வாகத்திற்கு இழப்பு ஏற்படுத்தக் கூடாது என்ற அடிப்படையில்  முன்னறிவிப்பு செய்தோம்.  இந்நிலையில் பணிக்கு வந்த  தொழிலாளர்களிடம் உறுதி மொழி படிவத்டதில் கையெழுத்து கேட்டு நிர்பந்தித்தது நியாயமற்றது. மேலும் நிர்வாகம் பணி நியமனம் ஏற்பாட்டில் இறங்கியிருப்பது  கூடுதல் அதிர்ச்சியளிக்கின்றது.  தற்போது புதியதாக பணியமர்த்துவது  நிரந்த தொழிலாளர்களை வெளியல் நிறுத்தி  வேலை மறுப்பதற்கு சமம். நிர்வாகம் வேலையை மறுக்கும் செயலை கைவிட்டு  தொழிலாளர்கள் அனைவரையும் வழக்கம் போல் பணி செய்திட அனுமதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். ஊழியர்களின் தொடர் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.