இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டம் இந்தியாவுக்கு சாதகமாக நகர்ந்தது. இந்த போட்டியில், ஓப்பனிங் பேட்ஸ்மேன் ரோஹித் ஷர்மா சதம் கடந்து அசத்தியுள்ளார். இதன் மூலம், ஓவர்சீஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தனது முதல் சதத்தை பதிவு செய்துள்ளார். 1 சிக்சர், 12 பவுண்டரிகள் என 205 பந்துகளில் சதம் கடந்து அசத்தியுள்ளார் ஹிட்-மேன் ரோஹித். மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில், இந்தியா 171 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி ஸ்கோர்: 270/3
முன்னதாக, இந்தியாவின் இரண்டாவது இன்னிங்ஸில், ஓப்பனிங் களமிறங்கிய ராகுல் - ரோஹித் இணை நிதானமாக ரன் சேர்த்தது. 46 ரன்கள் எடுத்திருந்தபோது ஆண்டர்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து களமிறங்கிய புஜாரா ரோஹித்தோடு பார்ட்னர்ஷிப் அமைத்து ரன் சேர்த்தார். இந்த இணை 153 ரன்களுக்கு களத்தில் நின்றது.
இதுவரை, டெஸ்ட் கிரிக்கெட்டில் உள்ளூர் மைதானங்களில் மட்டும் 7 சதங்களை அடித்துள்ள ரோஹித், முதல் முறையாக ஓவர்சீஸ் சதத்தை இன்று பதிவு செய்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில், அதிகபட்சமாக கடந்த 2019-ம் ஆண்டு ராஞ்சியில் நடைபெற்ற தென்னாப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் ரோஹித் 212 ரன்கள் எடுத்திருந்தார்.
இங்கிலாந்துக்கு எதிரான போட்டிகளைப் பொருத்தவரை, இந்த ஆண்டு சென்னையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக சதம் அடித்துள்ளார் ரோஹித். இந்த தொடரில் அடுத்தடுத்த டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து மூன்று அரை சதம் கடந்த ரோஹித் ஷர்மா, இந்த போட்டியில் அடித்த அரை சதத்தை சதமாக மாற்றி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதுமட்டுமின்றி இரண்டாம் நாள் ஆட்டத்தின்போது, ரோஹித் ஷர்மா சர்வதேச கிரிக்கெட்டில் 15,000 ரன்களை கடந்தார்.
போட்டியின் 81வது ஓவரில், ரோஹித் 127 ரன்கள் எடுத்திருந்தபோது ராபின்சன் பந்துவீச்சில் ரோஹித் கேட்ச் கொடுத்து அவுட்டானார். நியூ பால் எடுத்தது இங்கிலாந்துக்கு பலன் அளித்தது. அவரைத் தொடர்ந்து, அதே ஓவரில் அரை சதம் கடந்திருந்த புஜாராவும் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். இங்கிலாந்துக்கு ஒரே ஓவரில் ப்ரேக்-த்ரூ கொடுத்து இந்தியாவின் நிதான ஆட்டத்துக்கு முட்டுக்கட்டை போட்டுள்ளார் ராபின்சன். இப்போது கேப்டன் கோலியும் - ஜடேஜாவும் களத்தில் இருக்கின்றனர்.