புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் - பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமைக்கப்பட்ட பிறகு, கடந்த வியாழக்கிழமை முதல் சட்டசபைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.


புதிய அரசின் முதல் கூட்டத்தில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உரையாற்றினார். அதன்பின் அன்று மாலை 2021-22-ம் நிதியாண்டிற்கான முழு பட்ஜெட்டை நிதி துறை பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து மானியக் கோரிக்கைகளில் நடைபெற்று வருகிறது. புதுவை சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தில்  சட்டமன்ற உறுப்பினர்கள் பேசினர்.



இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் ரங்கசாமி பதிலளித்து பேசியதாவது:-


மத்திய அரசு பட்ஜெட்டில் 1.5 சதவீதம் கூடுதலாக நிதி அளித்துள்ளது. கடந்த ஜனவரி மாதமே பட்ஜெட்டை மத்திய அரசு தாக்கல் செய்தது. மே மாதம்தான் நாம் ஆட்சிக்கு வந்துள்ளோம். இதனால் உடனடியாக கூடுதல் நிதி தரவில்லை. இருப்பினும் மத்திய அரசு கூடுதல் நிதி தரும் என்ற நம்பிக்கை உள்ளது. ஏற்கனவே பிரதமரிடம் கூடுதலாக ரூ.500 கோடி நிதி கேட்டுள்ளோம். இதை மீண்டும் வலியுறுத்தி பெறுவோம். அதிக நிதி பெற வேண்டும் என்பதே அரசின் எண்ணம். மத்திய அரசும் நமக்கு ஒத்துழைப்பு அளிக்கும்.


மாநில அந்தஸ்து பெறுவோம் என்றுதான் கட்சியே தொடங்கினோம். எப்போதும் மாநில அந்தஸ்து கேட்போம். நீண்டநாட்களாக முதல்-அமைச்சராக இருந்த அனுபவத்தில் மாநில அந்தஸ்து இல்லாமல் எவ்வளவு கஷ்டம் என எனக்கு தெரியும். இதுதொடர்பாக பிரதமரிடம் ஏற்கனவே கேட்டுள்ளேன். மத்திய அரசு ஒரு முடிவு எடுத்துள்ளது.


 




இந்த கூட்டத்தொடரில் ஒரு தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்புவோம். நேரில் சென்றும் மாநில அந்தஸ்து கோரிக்கையை வலியுறுத்துவேன். புதுவைக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. விவசாயிகளுக்கு பாசிக், பாப்ஸ்கோ போன்ற நிறுவனங்கள் எவ்வளவு உறுதுணையாக இருந்தது? என இப்போதுதான் தெரிகிறது.


விற்கப்பட்ட வீட்டு மனைகள், பிரிக்கப்பட்ட வீட்டு மனைகளை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். தியாகிகள் பென்‌ஷன் தற்போது ரூ.9 ஆயிரம் வழங்கப்படுகிறது. இத்தொகை ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்படும்.


பாட்கோவில் கல்விக் கடனை தள்ளுபடி செய்துள்ளோம். பிற்படுத்தப்பட்டோர் கழகம் மூலம் பெற்ற கல்விக் கடனும் முற்றிலும் ரத்து செய்யப்படும். சுற்றுலாவை மேம்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். அரசின் காலி பணியிடங்கள் நிரப்பப்படும்.


தாழ்த்தப்பட்டோர் வீடு கட்ட இப்போது ரூ.5 லட்சம் வழங்கப்படுகிறது. இது ரூ.5.50 லட்சமாக உயர்த்தப்படும். தாழ்த்தப்பட்ட முதியோர் பெறும் ஓய்வூதிய தொகையை ரூ.500 உயர்த்தப்படும். தாழ்த்தப்பட்டோர் இறுதிச்சடங்கு செலவுக்கு வழங்கப்படும் ரூ.15 ஆயிரம், ரூ.25 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். அம்பேத்கர் மணிமண்டபத்தின் பின்புறம் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்காக ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம் அமைக்கப்படும். சென்டாக் மூலம் தேர்வு செய்யப்படும் அனைத்து மாணவர்களுக்கும் கல்வி கட்டணத்தை அரசே முழுமையாக ஏற்கும்.


 



புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூபாய் 10 ஆயிரம் வழங்கப்படும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்த பத்திரிக்கையாளர்களு ரூ.10 லட்சம் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.


புதிய தொழிற்சாலைகளை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே அரசு கையகப்படுத்திய நிலங்களில் மத்தியஅரசு அனுமதி பெற்று தொழிற்சாலைகளை அமைப்போம்  என  முதல்வர் ரங்கசாமி கூறினார்.