இந்திய கிரிக்கெட் அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு பிறகு இங்கிலாந்து அணியுடன் டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடர்தான் இரண்டாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி பங்கேற்க உள்ள முதல் தொடர்  என்பதால் பெரிய எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. இத்தொடரில் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் இன்று மதியம் 3.30 மணிக்கு ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து முதல் ஓவரிலேயே அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் பெர்ன்ஸ் ரன் எதுவும் எடுக்காமல் பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 


இதைத் தொடர்ந்து சிப்ளி மற்றும் க்ராளி ஆகிய இருவரும் ஒரளவு ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இருவரும் 2ஆவது விக்கெட்டிற்கு 42 ரன்கள் எடுத்தனர். ஆட்டத்தின் 20ஆவது ஓவரில் முகமது சிராஜ் வீசிய பந்தில் க்ராளி பண்ட் இடம் கேட்ச் கொடுத்தார். ஆனால் நடுவர் அதை அவுட் இல்லை என கூறினார். இதைத் தொடர்ந்து நீண்ட ஆலோசனைக்குக்கு பிறகு கேப்டன் விராட் கோலி ரிவ்யூ எடுத்தார். அந்த ரிவ்யூவில் பந்து பேட்டில் பட்டது தெளிவாக தெரிந்தது. இதனால் நடுவரின் தீர்ப்பு மாற்றப்பட்டது. இந்திய அணி இரண்டாவது விக்கெட்டை வீழ்த்தியது. அதன்பின்னர் சிப்ளியும் 18 ரன்களுக்கு ஷமி பந்துவீச்சில் ராகுலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதனால் இங்கிலாந்து அணி 66 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்து தவித்தது. 




அதன்பின்னர் நான்கவது விக்கெட்டிற்கு  இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் மற்றும் பேர்ஸ்டோவ் ஆகிய இருவரும் ஜோடி சேர்ந்தனர். இருவரும் நிதானமாக ஆடினர். இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் அரைசதம் கடந்து அசத்தினார். பேர்ஸ்டோவ் 29 ரன்கள் எடுத்திருந்த போது ஷமி பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். அப்போதும் நடுவரின் தீர்ப்பை ரிவ்யூ செய்து இந்திய அணி பேர்ஸ்டோவ் விக்கெட்டை பெற்றது. தேநீர் இடைவேளையின் போது இங்கிலாந்து அணி 138 ரன்களுக்கு 4 விக்கெட் எடுத்திருந்தது. 




தேநீர் இடைவேளைக்கு பிறகு இங்கிலாந்து அணியின் வீரர்கள் வரிசையாக சீட்டு கட்டு போல் சரிந்தனர். பட்லர் ரன் எதுவும் எடுக்காமல் பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். சிறப்பாக விளையாடி வந்த கேப்டன் ஜோ ரூட் ஷர்தல் தாக்கூர் பந்துவீச்சில் 64 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார். ராபின்சனும் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். அதைத் தொடர்ந்து பிராட் 4 ரன்களில் பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இறுதியில் இங்கிலாந்து அணி  183  ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து முதல் இன்னிங்ஸை முடித்தது. இந்தியா சார்பில் பும்ரா 4 விக்கெட் எடுத்தார். முகமது ஷமி  3 விக்கெட் எடுத்தனர்.  ஷர்தல் தாக்கூர்  2 விக்கெட்களும், சிராஜ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். 


மேலும் படிக்க:”நல்ல நண்பன் வேண்டுமென்று” : இங்கிலாந்து - இந்தியா மேட்சில் இறந்தவருக்கு டிக்கெட் வாங்கிய நண்பர்கள்..