டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் ஒரு வெள்ளிப்பதக்கம் மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கத்துடன் இந்தியா பதக்கப்பட்டியலில் 65வது இடத்தில் உள்ளது.
32 தங்கம் 22 வெள்ளி மற்றும் 16 வெண்கலம் உட்பட 70 பதக்கங்களுடன் சீனா முதலிடத்திலும்
25 தங்கம் 30 வெள்ளி 22 வெண்கலம் உட்பட 77 பதக்கங்களுடன் அமெரிக்கா இரண்டாவது இடத்திலும்
21 தங்கம் 7வெள்ளி 12வெண்கலம் உட்பட 40 பதக்கங்களுடன் ஜப்பான் மூன்றாவது இடத்திலும் உள்ளது.
இன்றைய போட்டிகளில் இந்தியா:
இந்தியாவுக்கான மூன்றாவது பதக்கத்தை உறுதி செய்த லவ்லினா போர்கெய்ன்
மகளிர் குத்துச்சண்டையில் உலகின் நம்பர் 1 இடத்தில் உள்ள துருக்கி வீராங்கனை சர்மெனெல்லி பஸ்னாஸை எதிர்த்து லோவ்லினா விளையாடினார். இந்த போட்டியில், 10-9 புள்ளிக்கணக்கில் துருக்கி வீராங்கனை முதல் கேமை வென்றார். அதனை தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது ரவுண்டிலும் அவரே ஆதிக்கம் செலுத்தினார். இதனால், இரண்டாவது கேமிலும் லோவ்லினா தோற்றார். அடுத்து நடைபெற்ற மூன்றாவது கேமையும் இழந்த அவர், போட்டியை இழந்தார். ஆனால், வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.
ஈட்டி எறிதலில் அரையிறுதிக்கு முன்னேறிய நீரஜ் சோப்ரா
நீரஜ் சோப்ரா பங்கேற்கும் முதல் ஒலிம்பிக் போட்டி இது. முதல் வாய்ப்பிலேயே, 86.65 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து, இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். தனது முதல் ஒலிம்பிக் தொடரிலேயே, சிறப்பாக விளையாடி இருக்கும் நீரஜ் சோப்ரா, இறுதி போட்டிக்கு முன்னேறி பதக்க வாய்ப்பை தக்க வைத்துள்ளார்.
இந்தியாவிற்கு 4-வது பதக்கத்தை உறுதி செய்தார் ரவிக்குமார் தாஹியா
அரையிறுதிப் போட்டியில் ரவிக்குமார் தாஹியா கஜகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த நூருளிஸ்லாம் சனாயேவை எதிர்த்து விளையாடினார். முதல் ரவுண்டில் தொடக்கத்தில் ரவிக்குமார் தாஹியா சற்று தடுப்பு ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதன்பின்னர் அந்த ரவுண்டின் இறுதியில் 2 புள்ளிகள் எடுத்தார். இதனால் முதல் ரவுண்டின் முடிவில் ரவிக்குமார் தாஹியா 2-1 என இருந்தார். இதனைத் தொடர்ந்து இரண்டாவது ரவுண்டில் கஜகிஸ்தான் வீரர் சுதாரித்து கொண்டு வேகமாக 8 புள்ளிகளை எடுத்தார். இறுதியில் கஜகிஸ்தான் வீரரை பின் முறையில் தோற்கடித்து ரவிக்குமார் தாஹியா வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். அத்துடன் இந்தியாவிற்கு தங்கம் அல்லது வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்தார்.
வெண்கலப் பதக்கத்துக்குப் போட்டியிடும் தீபக் புனியா
அரையிறுதிப் போட்டியில் தீபக் புனியா அமெரிக்காவைச் சேர்ந்த டெய்லரை எதிர்த்து விளையாடினார். மிகவும் பலம் வாய்ந்த அமெரிக்க வீரரை எதிர்த்து புனியா விளையாட இருந்ததால் இந்தப் போட்டியில் அதிக விறுவிறுப்பு ஏற்பட்டது. இந்தப் போட்டியில் முதல் ரவுண்டில் அமெரிக்க வீரர் சிறப்பாக செயல்பட்டு 10-0 என்ற கணக்கில் தீபக் புனியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். தீபக் புனியா நாளை நடைபெற உள்ள வெண்கலப்பதக்க போட்டியில் பங்கேற்க உள்ளார்.
அரையிறுதியில் இந்தியா தோல்வி..வெண்கலத்துக்கு வாய்ப்பு
அரையிறுதியில் இந்திய மகளிர் அணி அர்ஜெண்டினா அணியை எதிர்த்து விளையாடியது. இந்தப் போட்டியில் முதல் கால்பாதியில் இரண்டாவது நிமிடத்திலேயே இந்தியாவிற்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. அதை இந்திய வீராங்கனை குர்ஜித் கவுர் சரியாக பயன்படுத்தி கோலாக மாற்றினார். இதனால் இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றது. ஆனால் அதற்கடுத்த நிமிடங்களில் 2 கோல்களை அடித்து அர்ஜெண்டினா அணி வெற்றிபெற்றது. ஆனால் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியா மோத உள்ளது.