இந்திய கிரிக்கெட் அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு பிறகு இங்கிலாந்து அணியுடன் டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. இந்த தொடர்தான் இரண்டாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி பங்கேற்க உள்ள முதல் தொடர் என்பதால் பெரிய எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. இத்தொடரில் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் இன்று மதியம் 3.30 மணிக்கு ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து முதல் ஓவரிலேயே அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் பெர்ன்ஸ் ரன் எதுவும் எடுக்காமல் பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
தேநீர் இடைவேளை வரை அந்த அணி 4 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்திருந்தது. இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் அரைசதம் கடந்து களத்தில் இருந்தார். மைதானத்தில் இந்தப் போட்டியில் இன்று ஒரு உருக்கமான நிகழ்வு நடந்துள்ளது. அதாவது ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் போட்டிகள் அனைத்தையும் ஒன்றுவிடாமல் ஜான் கிளார்க் என்ற நபர் பார்த்து வந்துள்ளார். அவருடைய நண்பர்களுடம் சேர்ந்து அவர் தொடர்ச்சியாக அனைத்து போட்டிகளையும் நேரில் பார்த்து ரசித்து வந்துள்ளார். சமீபத்தில் ஜான் கிளார்க் உடல்நல குறைவால் இயற்கை எய்தியுள்ளார். இதனால் அவர் இல்லாமல் அவருடைய நண்பர்கள் இம்முறை முதல் முறையாக இங்கிலாந்து அணியின் டெஸ்ட் போட்டியை ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் காணும் நிலை ஏற்பட்டது.
இந்தச் சூழலில் இன்றைய போட்டிக்கு ஜான் கிளார்கின் நண்பர்கள் அவருடைய நினைவாக ஒரு டிக்கெட்டை கூடுதலாக வாங்கியுள்ளனர். அத்துடன் அவர்கள் அமர்ந்திருக்கும் இடத்தில் ஒரு இருக்கையையும் காலியாக விட்டுள்ளனர். அவர்களின் இந்தச் செயல் மிகவும் மனம் நெகிழும் வகையில் அமைந்தது. இந்த விஷயம் தொடர்பாக ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரின் அந்தப் பதிவு பலரிடம் தற்போது பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
தேநீர் இடைவேளை முடிந்து தற்போது இங்கிலாந்து அணி 145 ரன்களுக்கு 6 விக்கெட் இழந்து விளையாடி வருகிறது. கேப்டன் ஜோ ரூட் 59 ரன்களுடனும், சாம் கரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர். இந்தியா சார்பில் வேகப்பந்து வீச்சாளர் ஷமி 3 விக்கெட்களை எடுத்துள்ளார். பும்ரா 2 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
மேலும் படிக்க: ஒலிம்பிக் மல்யுத்தம் : இந்தியாவிற்கு 4-வது பதக்கத்தை உறுதி செய்தார் ரவிக்குமார் தாஹியா..!