டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய கேப்டன் விராட் கோலி 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார், அதே நேரம் ரோஹித் சர்மா & ரிஷப் பந்த் ஆகியோர் ஒரே புள்ளியில் அதே 6-வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர். டெஸ்ட் போட்டிகளில் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது அதில் இந்திய பேட்ஸ்மேன் மூவர் முதல் 10 இடத்தில் உள்ளனர். ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் ஸ்மித் 891 ரேட்டிங் புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்துள்ளார். மேலும் சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்தி வரும் டேவான் கான்வே இரண்டே டெஸ்ட் போட்டிகளில் 61வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இந்த வாரத்திற்கான புதிய டெஸ்ட் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது ஐசிசி. அதில் நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் 886 ரேட்டிங் புள்ளிகளுடன் 2-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார், மற்றொரு ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் labuschagne 878 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், இந்திய கேப்டன் விராட் கோஹ்லி 814 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும், இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் 797 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும் உள்ளனர்.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா & விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் ஆகிய இருவரும் 747 புள்ளிகளுடன் 6-வது இடத்தை பகிர்ந்துகொண்டுள்ளனர்.
பேட்டிங்கில் இப்படி இந்திய வீரர்கள் மூவர் டாப் 10-இல் உள்ள நிலையில் பந்துவீச்சில் இந்திய அணி வீரர் ஒருவர் மட்டுமே டாப் 10 தரவரிசையில் உள்ளார். தமிழகத்தை சேர்ந்த இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 850 ரேட்டிங் புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார். அதேநேரம் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் பேட் கம்மின்ஸ் 908 புள்ளிகளுடன் தொடர்ந்து முதல் இடத்தில் நீடித்துவருகிறார்.
அண்மையில் இங்கிலாந்து அணியுடன் நடந்த டெஸ்ட் போட்டியில் சிறப்பாக பந்துவீசிய நியூசிலாந்து அணியின் பந்துவீச்சாளர் டிம் சவூதி 3-வது இடத்தில 830 புள்ளிகளுடன் நீடிக்கிறார். ஆஸ்திரேலிய வீரர் ஜோஷ் ஹாஸல்வூட் 816 புள்ளிகள், நியூசிலாந்து வீரர் நீல் வாக்னர் 815 புள்ளிகளுடன் 4-வது மற்றும் 5-வது இடத்தில் நீடிக்கின்றனர். ஆல் ரவுண்டர் தரவரிசையில் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் ஜேசன் ஹோல்டர் 412 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா 386 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், ரவிச்சந்திரன் அஸ்வின் 353 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும் உள்ளனர்.