செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கேளம்பாக்கத்திற்கு அருகே உள்ள தனியார் சர்வதேச உண்டு உறைவிடப் பள்ளி சுஷில் ஹரி பள்ளி. சிவசங்கர் தன்னை கிருஷ்ணரின் அவதாரம் என்றும், வாழும் கடவுள் என்றும் கூறிக்கொண்டு, மக்களுக்கு ஆசி வழங்கி வருவதால் அவரை சிவசங்கர் பாபா என்று அழைக்கின்றனர். இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர்மீது அந்த பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவிகள், இவர் பாலியல் தொல்லை அளித்ததாக குற்றம் சாட்டினர்.



இதையடுத்து, அந்த மாணவிகளின் புகாரை அடிப்படையாக கொண்டு, அந்த தனியார் பள்ளியில் தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தினரும், காவல்துறையினரும் சோதனை நடத்தினர். ஆனால், அப்போது அங்கு சிவசங்கர் பாபா இல்லை என்று பள்ளி நிர்வாகம் சார்பில் கூறப்பட்டது. இதையடுத்து, கடந்த 11-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று சிவசங்கர் பாபா, பள்ளியின் தாளாளர், பள்ளியின் தலைமை ஆசிரியர் உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் சிவசங்கர் பாபா நேரில் ஆஜராகவில்லை. அவர் சார்பில் ஆஜரான அவரது வழக்கறிஞர் சிவசங்கர் பாபாவிற்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளதாகவும், அவர் டேராடூனில் சிகிச்சை பெற்று வருவதாகவும் விளக்கம் அளித்தார். இதையடுத்து, ஆஜரான பிற நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு, வாக்குமூலம் பெறப்பட்டது.



இந்த நிலையில், சிவசங்கர் பாபா மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி வசமும் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று சிவசங்கர் பாபா டெல்லியில் சிபிசிஐடி போலீசார் டெல்லியில் கைது செய்தனர்.

 

இதனைத் தொடர்ந்து இன்று காலை சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியில் சிவசங்கர் பாபா கைது செய்ததை தொடர்ந்து சிபிசிஐடி காவல்துறையினர் 5 பேர் கொண்ட குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்களிடம் அவர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

 


தற்போது அவர்களிடம் விசாரணை நடத்தி முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளனர் அதில் குறிப்பாக 4 லேப்டாப், 2 கணினி பறிமுதல் செய்துள்ளனர். இந்நிலையில், இன்று வண்டலூர் தாசில்தார் தலைமையிலான அதிகாரிகள் பள்ளி ஏரி நிலத்தில் கட்டப்பட்டுள்ள என்பது குறித்த ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். 64 ஏக்கர் கொண்ட இந்த பள்ளி மீது நீண்ட காலமாகவே ஏரி நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துவந்த நிலையில் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர் .மேலும் 5 மணி நேரமாக ஆசிரியர்களிடம் சிபிசிஐடி போலீசார் தனியாக விசாரணை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.