ஐக்கிய அரபு அமீரகத்தில் டி20 உலககோப்பை போட்டி வரும் அக்டோபர் மாதம் 17-ந் தேதி தொடங்க உள்ளது. இதில் பாகிஸ்தான் அணி இந்தியா அங்கம் வகிக்கும் குரூப் 2ல் இடம்பெற்றுள்ளது. முதல் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. இந்த நிலையில், உலககோப்பையில் பங்கேற்க உள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கான வீரர்கள் பட்டியலை அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று வெளியிட்டுள்ளது.
இதன்படி, உலககோப்பை தொடருக்கு பாபர் ஆசாம் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக ஷதாப்கான் நியமிக்கப்பட்டுள்ளார். முகமது ரிஸ்வான் மற்றும் அசாம் கான் விக்கெட் கீப்பர்களாக இடம்பெற்றுள்ளனர். ஆசிப் அலி, குஷ்தில் ஷா, முகமது ஹபீஸ், சொகைப் மகசூத், இமாம் வாசிம், முகமது நவாஸ், முகமது வாசிம், ஹரிஷ் ரவுப், ஹசன் அலி, முகமது ஹஸ்னைன், ஷகின்சா அப்ரிடி ஆகியோர் 15 பேர் கொண்ட அணியில் இடம்பெற்றுள்ளனர். மாற்று வீரர்களாக பகர் ஜமாம், உஸ்மான் காதிர், ஷாநவாஸ் தஹானி இடம்பிடித்துள்ளனர்.
இந்த தொடருக்காக பாகிஸ்தான் அணியில் முழுக்க, முழுக்க இளம் வீரர்களே இடம்பெற்றுள்ளனர். மூத்த வீரர்கள் மற்றும் முன்னாள் கேப்டன்களான சோயிப் மாலிக், சர்ப்ராஸ் அகமது, வஹாப் ரியாஸ் ஆகியோருக்கு இந்த முறை வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. அவர்கள் மட்டுமின்றி தொடக்க வீரரான சர்ஜூல் கான், ஆல்ரவுண்டர் பஹீம் அஷ்ரம் ஆகியோரும் இடம்பிடிக்கவில்லை.
பாகிஸ்தான் அணி உலககோப்பை தொடரில் ஆடுவதற்கு முன்னதாக பாகிஸ்தானில் நடைபெற உள்ள நியூசிலாந்து அணிக்கு எதிரான உள்நாட்டு டி20 போட்டித் தொடரில் பங்கேற்க உள்ளது. இந்த போட்டித் தொடர் வரும் 25-ந் தேதி லாகூரில் தொடங்க உள்ளது. இதையடுத்து, பாகிஸ்தான் அணி இங்கிலாந்துக்கு எதிராக அக்டோபர் மாதம் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் டி20 போட்டிகளில் ஆட உள்ளது. இதே கிரிக்கெட் வீரர்கள்தான் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் ஆட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கடைசியாக ஆடிய 20 டி20 போட்டிகளில் 10 டி20 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 7 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. 3 போட்டிகளில் முடிவு கிடைக்கவில்லை. இந்த 20 ஆட்டங்களும் வெளிநாட்டில் நடைபெற்ற போட்டிகள் என்பது குறிப்பிடத்தக்கது. 2009ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலககோப்பையை சோயிப் மாலிக் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.