2021 டி-20 உலகக்கோப்பை தொடரில் க்ரூப்:2 சுற்று போட்டிகள் நேற்று தொடங்கின. இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய முதல் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் போட்டியை வென்று பாகிஸ்தான் அணி  வரலாற்று வெற்றியை பதிவு செய்தது. இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இந்த தோல்வி பெரிதும் ஏமாற்றத்தை அளித்திருந்தாலும் அடுத்தடுத்த போட்டிகளில் இந்திய அணி கம்-பேக் தரும் என்ற நம்பிக்கை இருக்கின்றது. இந்நிலையில், போட்டிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த கேப்டன் விராட் கோலி, செய்தியாளர்களின் கேள்விகளுக்கு சில ‘நச்’ பதில்களை பதிவு செய்தார். 


நேற்று நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான், ஃபீல்டிங் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய இந்திய அணிக்கு ரோஹித் டக்-அவுட்டானபோதே பீதி ஆரம்பாகிவிட்டது. ரோஹித்தை அடுத்து, ராகுலும் 3 ரன்களுக்கு வெளியேறினார். பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் ஷாயின் அஃப்ரிதியின் இந்த அட்டாக் இந்தியாவின் வெற்றியை முதல் இன்னிங்ஸிலேயே பறிக்க ஆரம்பித்தது. 


டி-20 உலகக்கோப்பை தொடங்கி இந்திய அணி விளையாடி இருக்கும் முதல் போட்டி இது. முதல் போட்டியில் ரோஹித் சொதப்பி இருக்கிறார், இந்தியா தோல்வியைச் சந்தித்துள்ளது. இதனால், செய்தியாளர் சந்திப்பின்போது, ரோஹித் ஷர்மாவுக்கு பதிலாக இஷான் கிஷன் களமிறக்கப்படுவாரா என்று கோலியிடம் கேட்கப்பட்டது. இந்த கேள்வியை கேட்டவுன் நமட்டு சிரிப்பை சிரித்து கொண்டே பதிலளித்தார் கோலி. 


"ரோஹித் ஷர்மாவை டி-20 போட்டிகளில் இருந்து நீக்க வேண்டுமா? இந்த போட்டிக்கு முன்பு கடைசியாக இந்திய அணி விளையாடிய போட்டியில் ரோஹித்தின் ஆட்டத்தை பார்த்தீர்களா?” என பதிலளித்து சில நொடிகளுக்கு பிறகு மீண்டும் தொடர்ந்த கோலி, “நம்ப முடியவில்லை. சர்ச்சையை கிளப்ப வேண்டுமென்ற எண்ணத்தில் நீங்கள் கேள்வி கேட்க விரும்பினால், முன்கூட்டியே என்னிடம் சொல்லிவிடுங்கள். அதற்கு ஏற்பது போல பதில் சொல்லிவிடுகிறேன்” என கடுகடுத்தார். 


Also Read: 2016ல் நியூசிலாந்து; 2021ல் பாக்..- டி20 உலகக் கோப்பை முதல் போட்டியும் இந்தியாவின் மோசமான தோல்வியும் !


வீடியோவை காண:



தொடர்ந்து கேட்கப்பட்ட மற்ற கேள்விகளுக்கு பொறுமையாக பதிலளித்த விராட், “பாகிஸ்தான் அணியின் ஆட்டம் எங்களை விஞ்சி இருந்தது. அதனால்தான் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நான் இதை ஒப்புக் கொள்கிறேன். இப்போதுதான் டி-20 உலகக்கோப்பை தொடர் தொடங்கியுள்ளது. ஒரு போட்டியில் தோல்வி அடைந்ததால் இந்திய அணி பயணம் முடிந்துவிட போவதில்லை. இந்திய கிரிக்கெட் அணி எந்த அணியையும் சாதாரணமாக எண்ணிவிடாது. நாங்கள் எதிர்த்து போட்டியிடும் ஒவ்வொரு அணியும் எங்களுக்கு முக்கியமான அணிதான். இதில் பாகுபாடு ஏதுமில்லை. நாங்கள் கிரிக்கெட்டை மதிக்கின்றோம், கிரிக்கெட்டை நேசிக்கின்றோம்” என பேசினார். 


அடுத்து, அக்டோபர் 31-ம் தேதி நடக்கும் போட்டியில், இந்திய அணி நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள உள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண