உத்தரபிரதேசம் மாநிலம் பஜர்திகாவில் நடந்த வால்மீகி ஜெயந்தி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மௌரியா, "ஒரு பெண் அதிகாரியும், ஒரு சப்-இன்ஸ்பெக்டரும் காவல் நிலையத்தில் அமர்ந்திருக்கிறார்கள். மாலை 5 மணிக்கு மேல், இருட்டிய பிறகு காவல் நிலையத்திற்கு செல்ல வேண்டாம். அடுத்தநாள் காலையில் கூட செல்லலாம், மிகவும் அவசியமென்றால் உங்கள் சகோதரர், கணவர் அல்லது தந்தையை அழைத்துச் செல்லுங்கள். " என்று கூறியிருந்தார். பெண்களின் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டிற்காக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்ற அவர் பெண்களுக்காக பல சட்ட திருத்தங்களை கொண்டு வரப்பட்டுள்ளன என்றார். அதிகாரிகள் யாரும் தங்களுக்குச் செவிசாய்க்கவில்லை என்றால் மாவட்ட ஆட்சியர் அல்லது முதல்வரிடம் புகார் அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.



ஒரு உதாரணத்தை மேற்கோள் காட்டி, சமீபத்தில் ஒரு விவசாயி தனக்கு உரம் கிடைக்கவில்லை என்று புகார் செய்ய அவரை அழைத்ததாக கூறினார். “சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் நான் மொபைலில் பேசி, பிரச்சினையைத் தீர்க்கச் சொன்ன பிறகு, அந்த அதிகாரி உடனடியாக விஷயம் தீர்க்கப்படும் என்றார். இருப்பினும், அடுத்த நாள் அவர் விவசாயிக்கு உரம் கொடுக்க மறுத்தார்,” என்று அவர் கூறினார். ஐந்து மணிக்குமேல் காவல் நிலையத்திற்கு செல்ல கூடாது என்று கூறிய அவரது கூற்று பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் போன்ற பிற கட்சிகளும் மௌரியாவை கடுமையாக சாடின. எம்பி குன்வர் டேனிஷ் அலி அவர் பேசிய விடியோவை ட்விட்டரில் பகிர்ந்து "யோகி ஆதித்யநாத் அரசின் கீழ் காவல் நிலையங்கள் கூட பாதுகாப்பானதாக இல்லை என்று அவர்கள் கட்சி மூத்த தலைவரே ஒத்துக்கொள்கிறார்" என்று பதிவிட்டிருந்தார்.



இந்த அறிக்கையை அடுத்து, மவுரியாவின் கருத்துக்கு எதிர்க்கட்சிகள் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வந்தனர். பரவலான விமர்சனங்களுக்குப் பிறகு, எதிர்க்கட்சிகளின் கூக்குரலுக்குப் பதிலளித்த மௌரியா, செய்தியாளர்களிடம், "வால்மீகி ஜெயந்தியையொட்டி நான் சமீபத்தில் பனாரஸில் ஒரு தலித் குடியிருப்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசினேன். அந்த நிகழ்ச்சியில் தலித் சகோதரிகள் மற்றும் முஸ்லீம் சகோதரிகளும் இருந்தனர். நான் அவர்களுக்கு முதல்வர் யோகி மற்றும் பிரதமர் மோடியின் அரசு திட்டங்கள் பற்றி விளக்கங்கள் கொடுத்துக்கொண்டிருந்தேன், பெண்களுக்கு விரைவான நீதி கிடைக்கும் விரைவு நீதிமன்றங்களின் அமைப்பும் உள்ளது என்று நான் சொன்னேன். யோகி அரசாங்கமும் பிரதமர் மோடி தலைமையிலான அரசாங்கமும் பெண்களின் பாதுகாப்பு மற்றும் தன்னம்பிக்கைக்காக தொடர்ந்து பணியாற்றி வருகின்றன. எதிர்க்கட்சிகள் எனது பேச்சை வேண்டுமென்றே திரித்து என் பெயருக்கும் கட்சிக்கும் களங்கம் விளைவிக்கிறார்கள்" என்று மௌரியா மேலும் கூறினார்.