கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த ஐசிசி உலகக் கோப்பை தொடர் கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கியது. அதன்படி, நவம்பர் 19 ஆம் தேதி இந்த தொடர் முடிவுற்றது. முன்னதாக இந்த தொடரில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.


19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை:


இச்சூழலில், இலங்கையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த ஐசிசி 19 வயதிற்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடர் அந்த நாட்டிலிருந்து தென்னாப்பிரிக்காவிற்கு மாற்றப்பட்டுள்ளது.  முன்னதாக, இந்த உலகக் கோப்பையில் இலங்கை அணியின் தொடர் தோல்விகளால் ஏமாற்றம் அடைந்த இலங்கை விளையாட்டுத் துறை தங்களுடைய கிரிக்கெட் வாரியத்தை கலைத்து உத்தரவிட்டது.


முதலில் இலங்கை அணியை வளர்ச்சி பாதைக்கு அழைத்துச் செல்லாத நிர்வாகிகள் மட்டும் கலைக்கப்பட்ட நிலையில் வங்கதேசத்துக்கு எதிரான தோல்வியால் அந்நாட்டு வாரியமே மொத்தமாக கலைக்கப்படுவதாக அந்நாட்டு விளையாட்டு அமைச்சம் அறிவித்திருந்தது.


அதற்கு இலங்கை வாரியத்தின் நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், இலங்கை கிரிக்கெட் அணியை விரைவில் வளர்ச்சி பாதைக்கு அழைத்துச் செல்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம் என்று உறுதியளித்தனர். இச்சூழலில், நீதிமன்றம் விளையாட்டு அமைச்சகத்தின் தடையை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தது.


இலங்கை அணிக்கு தடை:


இந்நிலையில், தான் கடந்த நவம்பர் 10 ஆம் தேதி முதல் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு இலங்கை அணிக்கு தடை விதிக்கப்படுவதாக ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.


இது தொடர்பாக ஐசிசி வெளியிட்ட அறிக்கையில், ”ஒரு வாரியத்தின் செயல்பாடுகளில் அந்நாட்டின் அரசு அல்லது அரசியல்வாதிகள் அல்லது அரசாங்க நடவடிக்கைகள் தலையிடக்கூடாது என்பது ஐசிசியின் முக்கியமான விதிமுறையாகும். ஆனால் அதை இலங்கை அரசு மீறி இலங்கை வாரியத்தை கலைத்து தலையிட்டதால் இந்த தடை விதிக்கப்படுகிறது. இலங்கை அரசு தலையீடுகள் இல்லாமல் இலங்கை வாரியம் சுதந்திரமாக செயல்படும் வரை இந்த தடை நீடிக்கும்” என்றும் ஐசிசி கூறியது.


தென்னாப்பிரிக்காவில் நடத்தப்படும்:



முன்னதாக, இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் ஐசிசி 19 வயதிற்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டிகளை இலங்கை அணி நடத்தும் என்று அறிவிக்கப்பட்டிருந்த சூழலில், தற்போது இந்த போட்டிகள் இலங்கையில் நடக்காது என்றும் தென்னாப்பிரிக்காவில் நடத்தப்படும் என்றும் ஐசிசி அறிவித்துள்ளது. இந்த தொடர் இலங்கையில் நடத்தப்படும் என்று அந்நாட்டு ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த சூழலில் இந்த அறிவிப்பு இலங்கை ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
 


அதேநேரம், இந்த 19 வயதிற்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 2024 ஆம் ஜனவரி 13 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 4 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், திறமையான இளம் வீரர்களை உருவாக்கும் இந்த தொடருக்கு இப்பொழுதே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.


 


மேலும் படிக்க: IND vs AUS Final: ஏன்ப்பா இப்படி! 2023ம் ஆண்டில் மட்டும் இரண்டு முறை.. ஐசிசி பட்டத்தை இந்தியாவிடம் பறித்த டிராவிஸ் ஹெட்..!


மேலும் படிக்க: Australian Cricket Team: உலகக் கோப்பை வெற்றி! சபர்மதி ஆற்றில் சவாரி செய்த ஆஸ்திரேலிய அணி - வீடியோ உள்ளே!