கூட்டுறவு வங்கிகளில் தொடர்ந்து கடன் பெறுவது, பணத்தை திருப்பிச் செலுத்துவதுமாக இருந்தால் தான் சங்கங்கள் வளரும், லாபமும் கிடைக்கும் என கூட்டுறவு வார விழாவில் கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் பேசினார்.


 




கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தாந்தோன்றிமலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கூட்டுறவுத் துறை சார்பில் மாவட்ட அளவிலான 70வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதில் 4,732 பயனாளிகளுக்கு 36 கோடியே 51 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.


 




 


அப்போது ஆட்சியர் தங்கவேல், கூட்டுறவுத் துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து பேசினார். நகைக்கடனில் துவங்கி தற்போது கல்விக் கடன்கள் வரை கொடுக்கும் அளவிற்கு கூட்டுறவுத் துறை செயல்பட்டு வருகிறது. கூட்டுறவு சங்கங்கள் வளர வேண்டுமானால் கடன்களை பெற்றும், அதனை திருப்பி தர வேண்டும். அப்போது தான் கூட்டுறவு சங்கங்கள் நல்ல முறையில் செயல்படும் என தெரிவித்தார். அனைவரும் கூட்டுறவு சங்கங்களுடன் தொடர்பில் தொடர்ந்து இருக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.