7ஆவது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் நாடுகளில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்தில் நடைபெற உள்ளது. இதனால், டி-20 உலககோப்பைக்கான அட்டவனை சமீபத்தில் வெளியானது. இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி, ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் செய்தி காத்திருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.


இந்த சர்ப்ரைஸ் செய்தி பற்றிய பதிவில், தாஜ் மஹால் படம் கொண்ட போஸ்டர் வெளியாகியுள்ளது. தாஜ் மஹாலை சுற்றி மின்னல் போன்ற லைட்டிங் டிசைனில் உலகக்கோப்பை வரையப்பட்டுள்ளது. படத்தை பதிவிட்டு, “முற்றிலும் எதிர்பார்க்காத ஒரு சர்ப்ரைஸ் செய்தி காத்திருக்கிறது. இன்று அந்த செய்தி வெளியிடப்படும்” என ஐசிசி தெரிவித்துள்ளது.






இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியிலும், குறிப்பாக இந்திய ரசிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரவல் காரணமாக இந்தியாவில் நடக்க இருந்த டி-20 உலககோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் இப்போது ஆப்கானிஸ்தானில் அசாதாரண சூழல் நிலவுவதால், அதனை ஒட்டியுள்ள ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே, மீண்டும் இந்தியாவுக்கு தொடர் மாற்றப்படலாம் என ரசிகர்கள் யூகித்து வருகின்றனர். இதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்றாலும், ஐசிசியின் அதிகாரப்பூர்வ தகவல் வரும் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. இது தவிர, டி-20 உலகக்கோப்பையின் ’மாஸ்காட்’ அறிவிக்கப்படலாம் அல்லது டி-20 உலகக்கோப்பையின் ‘தீம் சாங்’ அறிவிக்கப்படலாம் எனவும் யூகிக்கப்படுகிறது.


அக்டோபர் 17-ம் தேதி தொடங்கும் டி-20 உலகக்கோப்பை நவம்பர் 14-ம் தேதி வரை நடைபெறும் என ஐசிசி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சர்வதேச துபாய் மைதானம், அபு தாபியில் உள்ள ஷேக் சையத் மைதானம், ஷார்ஜா மைதானம், ஓமன் கிரிக்கெட் அகாடெமி மைதானம் ஆகிய நான்கு மைதானங்களில் போட்டிகள் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


2021 மார்ச் மாத முடிவில், சர்வதேச டி-20 தரவரிசை பட்டியலின் அடிப்படையில் டி-20 உலகக்கோப்பைக்கான அணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், க்ரூப் 1 மற்றும் 2 என இரு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளது.


சூப்பர் 12 க்ரூப் :1 இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், க்ரூப் ஏ வின்னர், க்ரூப் பி ரன்னர்.


சூப்பர் 12 க்ரூப்:2 இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆஃப்கானிஸ்தான், க்ரூப் ஏ ரன்னர், க்ரூப் பி வின்னர்.






இது தவிர, முதல் சுற்று போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த முதல் சுற்றில், இரு பிரிவுகளின் கீழ் 8 அணிகள் போட்டியிடுகின்றன. இதில் இருந்து ஒவ்வொரு பிரிவிலும், முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தேர்ச்சி பெறும். 


க்ரூப்:  ஏ இலங்கை, ஐயர்லாந்து, நெதர்லாந்து, நமிபியா


க்ரூப்: பி வங்கதேசம், ஸ்காட்லாந்து, பப்பா நியூ கினியா, ஓமன்.


இந்நிலையில், க்ரூப்:2-ல் இடம் பெற்றிருக்கும் அணிகளுக்கான போட்டிகள் அக்டோபர் 24-ம் தேதி நடைபெற உள்ளது. முதல் போட்டியில், இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. 


Also Read: World Photography Day: ‛காஸ்ட்லி’ போட்டோகிராபர் அஜித் குமார்... காதல் மன்னனின் கேமரா காதல்!