தினம் தினம் சொன்னாலும், இந்த முன்னுரை தான் முதலில் வருகிறது. முன்னாள் டிக்டாக் பிரபலங்களின் உலகமே அலாதியானது. அவர்களின் எண்ணமும், செயலும் அன்றாடவாசிகளிடமிருந்து முற்றிலும் மாறுபட்டவை. அவர்களுக்கான உலகம், மூன்றாம் உலகம். ஏற்கனவே ஒரு உலகத்தில் நாம் இருக்கிறோம். செல்வராகவனின் இரண்டாம் உலகத்தை நாம் பார்த்துவிட்டோம். அதனால் தான் பார்க்காத இவர்களின் உலகத்தை மூன்றாம் உலகம் என்கிறேன். சரி... மூன்றாவது உலகம் என்பதாலேயே என்னவோ... அவர்களே அந்த உலகின் ராஜா, ராணியாக நினைத்துக் கொண்டார்கள் போலும். இன்றைய மூன்றாம் உலகத்தின் முக்கிய பிரதிநிதியான சூர்யாதேவி பற்றிய செய்தி தான் இது.


சிக்காவை செருப்பால் அடித்தது, அதற்கு அவர் மீது சிக்கா புகார் கொடுத்தது, கொடுத்த புகார் மீது நடவடிக்கை இல்லை என்றால் மீசையை எடுப்பேன் என சிக்கா கெடு விதித்திருப்பதெல்லாம் ஒருபுறம் நடந்து கொண்டிருக்கிறது. சூர்யா தேவி மீதான புகார் மீது  நடவடிக்கை வேண்டும் என சிக்கா புலம்பிக் கொண்டிருக்க, ஊரில் உள்ளவர்களின் புகார்கள் மீது புலன்விசாரணை செய்து கொண்டிருக்கிறார் சூர்யா தேவி. அதிலும் போலீஸ்காரர் மீதான புகாரை நேரடியாக களத்தில் இறங்கி விசாரிக்கும் அளவிற்கு மூன்றாம் உலகத்தினர் அதிகாரத்தை கைப்பற்றிவிட்டார்கள் போலும். சரி வாங்க... அது என்ன பிரச்னைனு பார்க்கலாம்.




சென்னை புளியந்தோப்பு ராமசாமி தெருவில் வசிக்கும் ஒரு இஸ்லாமிய பெண்ணின் வீட்டிற்கு வந்த நுண்ணறிவு பிரிவு போலீஸ்காரர் விமல் என்பவர், அவரிடம் தவறாக நடந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் எல்லாம் இருப்பதாக கூறப்படுகிறது. போலீஸ்காரர் மீது கொடுத்த புகாரில் நடவடிக்கை இல்லையாம். எங்கு சுற்றியும் எதுவும் நடக்காத நிலையில், கடைசியில் சூர்யா தேவியிடம் முறையிட்டிருக்கிறார் அந்த பெண். அவ்வளவு தான்... நாயகன் படத்தில் வரும் வேலுநாயக்கர் போல, தன்னிடம் வரும் புகார்களுக்கு உடனடி தீர்வு தர புறப்பட்டுள்ளார் சூர்யா தேவி. சென்னை ராமசாமி தெருவிற்கு சென்ற அவர், சம்மந்தப்பட்ட வீட்டின் வெளியே நின்று தன்னுடைய விசாரணையை துவக்குகிறார். எங்கு போலீஸ்காரர் வந்தார், எங்கு நின்றால், எங்கு லைட் எரிந்தது, எங்கு அமர்ந்தார், நீங்க எவ்வளவு தூரத்தில் நின்னீங்க... போலீஸ்காரர் போதையில் வந்தாரா... பாக்கு போட்டாரா... எங்கு துப்பினார்... எப்படி துப்பினார்... என..சீனியர் ஏட்டைய்யா என்குயரி செய்வது போல, அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டு, அதற்கு அவரே பதிலும் கூறி விசாரணை செய்யும் காட்சியை அப்படியே பதிவு செய்து, அதை தனது யூடியூப் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார். என்ன தான் மூன்றாம் உலகின் முக்கிய ராணியாக இருந்தாலும், வேலுநாயகியாக மாறினாலும்... அந்த கேரக்டராகவே மாறியதால், சம்மந்தப்பட்ட போலீஸ்காரரை அவன், இவன் என ஏகத்துக்கும் தனது பாணியில் சாடியிருக்கிறார் சூர்யா தேவி. வழக்கமாக நாம் அவன், இவன் என்கிற ஏகவசனத்தை உபயோகிப்பதில்லை. இருந்தாலும் சூர்யா தேவியின் விசாரணை வளையத்தை அப்படியே உங்கள் கண் முன் கொண்டு வர, இன்று ஒருநாள் மட்டும் அதற்கு விதிவிலக்கு அளித்து அதை அப்படியே பதிவு செய்கிறோம். இருந்தாலும் அதிலும் சில சென்சார் செய்யப்பட்டுள்ளது.


இதோ அந்த வீடியோ விசாரணை உரையாடல்...




‛‛ஒரு போலீஸ்காரன் வந்து பிரச்னை செய்திருக்கிறான்....  அவங்க வீட்டுக்கு தான் வந்திருக்கேன். அவன் மீது புகார் அளித்தும் எந்த ஆக்ஷனும் இல்லை. போலீஸ் ஐஎஸ்., விமல் தான் அவன். நேரடியா அவங்க வீட்டுக்கு விசாரிக்க வந்தேன். தெருவில் உள்ளே வந்து, கதவை சாத்திட்டு, இந்த லைட்டை ஆப் செய்துவிட்டு, இந்த இடத்தில் உட்கார்ந்து பேசியிருக்கான். அப்போ இவங்கட்ட தவறாக பேசியிருக்கான். இந்த அம்மாவுக்கு இரு குழந்தைகள் இருக்காங்க. ஒரு பெண்ணுக்கு கல்யாணம் ஆகப் போவுது. 10 ஆண்டுகளுக்கு முன் கணவரை பிரிந்தவர் என்பதால் தவறான பெண் என நினைத்து அவன் இங்கே வந்திருக்கான்.




ஓட்டேரியில் புகார் கொடுத்து நடவடிக்கை இல்லை. இப்போ என்னமோ பெரியார் நகரில் விசாரணைக்கு வரச்சொல்லியிருக்கிறாங்க. ஆண்கள் இங்கு அடிக்கடி வந்து போவதாக வீட்டை காலி செய்யச் சொல்லியிருக்கிறார்கள். அதற்கு ஏதாவது ஆதாரம் இருக்கா. ஒரு பெண் தவறானவரா இருந்தால், மகளிர் போலீசுடன் வர வேண்டும். அது தான் சரி. மேலோட்டமா பார்த்துட்டு வரக்கூடாது. தவறான தொழில் செய்பவர்களாக இருந்தால் கூட, அதற்கு போலீஸ் வர ஒரு முறை உள்ளது. ஒரு ஆம்பள போலீஸ், பாக்கு போட்டுட்டு, போதையில வந்து நாட்டாமை பண்ணிருக்கான் அந்த விமல். இதுல ஐஎஸ்.,னு சொல்லி மிரட்டியிருக்கான். போலீஸ்காரங்கள்ல இருந்து சுத்தி இருக்கவங்க வரை இந்தம்மாட்ட பகையா இருக்கிறாங்க. இதுக்கு கண்டிப்பா ஆக்ஷன் எடுக்க சொல்லி நான் போராடுவேன். இவங்களுக்கு ஒரு நியாயம் கிடைக்கனும். இதை கேட்டு மனசு கஷ்டமானதால தான் வீடியோ போடுறேன். அடுத்தடுத்து அப்டேட் தர்றேன். மத்ததுக்கு எல்லாம் சப்போர்ட் பண்றீங்கள்ள... இதுக்கும் பண்ணுங்க டாட்டா,’’ என வீடியோ முடிகிறது. 




இன்னும் என்ன கொடுமையெல்லாம் பார்க்கப்போறோம் என தெரியவில்லை. ஆனாலும் பார்த்து தான் ஆக வேண்டும். நீங்கள் பார்க்க மறுத்தாலும், சமூக வலைதளம் உங்கள் கண் முன் அனைத்தையும் கொண்டு வரும். 


சூர்யா தேவி புலன்விசாரணை செய்த வீடியோ இதோ.....(நன்றி: சூர்யா தேவி யூடியூப் சேனல்)