நடிகர் என்கிற ஒரு வட்டத்தில் அடைக்கப்படுபவர் இல்லை அஜித். தல என்று தமிழ் திரையுலகம் தலையில் வைத்து கொண்டாடினாலும், அதை சற்றும் தலையில் ஏற்றாதவர்.




பிரபலமாவதற்கு முன்பிருந்தே ரேஸ் பிரியர். ரேஸ் மோகத்தில் உடம்பில் போடாத தையல் இல்லை. ஆனாலும் இன்றும் ரேஸ் பிரியர்.  ஒரு நடிகர் உச்சபட்சமாக தன்னை கவுரவவாதியாக காட்டிக்கொள்ளும் இந்த காலகட்டத்தில், சக கலைஞர்களுக்கு பிரியாணி சமைத்து, அன்போடு அதை அவரே பரிமாறும் பண்பும், அதை உண்டு சிலாகிப்பவர்களும் ஏராளம். அதனால் அஜித் ஒரு பிரியாணி மாஸ்டர். அதே போல ஹெலிகாப்டர் பயிற்சி. சத்யபாமா பல்கலையின் தொழில்நுட்ப மாணவர்களின் தக்ஷா குழுவுக்கு ஆலோசனை வழங்கும் அளவிற்கு அதில் கை தேர்ந்தார். அத்தோடு இப்போது துப்பாக்கிச் சுடும்பயிற்சி. அதிலும் மனிதர் சீரியஸாகவே பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார்.




இந்த வரிசைகளில் போட்டோகிராபர் அஜித்தையும் மறந்துவிட முடியாது. படப்பிடிப்பில் ஒளிப்பதிவாளர் கையில் கேமரா இருப்பதை விட, அஜித் கையில் தான் அதிக நேரம் கேமரா இருக்குமாம். அந்த அளவில் சகுட்டுமேனிக்கு யாரையும் விட்டு வைக்காமல் கிளிக்கி... கொண்டே இருப்பாராம். இன்று உலக போட்டோகிராபி தினம், சிறந்த போட்டோக்களும், போட்டோ கிராபர்களும் பேசப்பட வேண்டியவர்கள். அந்த வரிசையில் நடிகர் அஜித்... இல்லை இல்லை.... போட்டோ கிராபர் அஜித்தும் பேசப்பட வேண்டியவரே. இதோ அவரது படைப்புகளும் அதன் தாக்கமும்...


ஸ்ருதிஹாசன்...




வேதாளம் படப்பிடிப்பில் ஸ்ருதிஹாசனை அஜித் எடுத்த புகைப்படங்கள் பெரிய அளவில் பேசப்பட்டது. குறிப்பாக ஸ்ருதிக்கு பெரிய அளவில் மார்க்கெட்டிங் இல்லாத அந்த நேரத்தில், அஜித் எடுத்த அழகான புகைப்படங்கள் அவரை வேறு ஒரு இடத்திற்கு கொண்டு சென்றது. அந்த போட்டோக்களை அப்போது ஸ்ருதி சிலாகித்தார்.


அப்புக்குட்டி...




வீரம் படத்தில் தன்னுடன் நடந்த அப்புக்குட்டிக்கு பிரத்யேக போட்டோகிராபராக மாறிய அஜித், அவரின் தோற்றத்தை வைத்து அடையாளப்படுத்துவதை நீக்க முடிவு செய்தார். கோர்ட் சூட் போட்டு டிப்டாப் ஆசாமியாக அப்புக்குட்டியை போட்டோ ஷூட் எடுத்த அஜித், அப்புகுட்டி என்கிற கேரக்டர் பெயரை எடுத்துவிட்டு சிவபாலன் என்கிற பெயரில் அவரை அறிமுகம் செய்து, துணை நடிகருக்கு ஒரு மாஸ் ஹீரோ அம்பாசிடராக செயல்பட்டதின் சான்று தான் இந்த போட்டோக்கள்!


யோகிபாபு... மொட்டை ராஜேந்திரன்!




வேதாளம் படப்பிடிப்பில் காமெடி நடிகர்கள் மொட்டை ராஜேந்திரன் மற்றும் யோகி பாபுவை மேடையில் அமர வைத்து தரையில் அமர்ந்து அஜித் எடுத்த போட்டோ இது. மொட்டை ராஜேந்திரன்-யோகிபாபு இணைந்த போட்டோ வெளியான போது அதை யார் எடுத்தார் என்பது தெரியாது. ஆனால் அதை எடுக்கும் போது வேறொருவர் கிளிக் செய்த இந்த போட்டோ தான், பின்னர் அதை எடுத்தவர் அஜித் என்பதற்கான அத்தாட்சி. போட்டோ கிராபரின் கைவண்ணம் என்பதை தாண்டி, அஜித்தின் சிம்பிள்சிட்டிக்கு இந்த போட்டோவும் ஒரு சான்று. ஒரு போட்டோவுக்கு அவர் எடுத்த மெனக்கெடலும் குறிப்பிடத்தக்கது.


காஸ்ட்லி போட்டோகிராபர்...




எல்லோரும் நடிகருடன் போட்டோ எடுத்துக் கொள்ள விரும்புவார்கள். ஒரு நடிகர் அனைவரையும் போட்டோ எடுக்க முன்வந்தார் என்றால் அது அஜித் மட்டும் தான். போட்டோகிராபி அவரது அடையாளம் அல்ல. ஆனாலும் அதனால் பிறருக்கு அடையாளம் கிடைக்கும் என மெனக்கெடுகிறார் அஜித். உண்மையில் அஜித் ஒரு காஸ்ட்லி போட்டோகிராபர். அவர் கிளிக் செய்து ஏதாவது ஒரு போட்டோ விற்பனைக்கு வருமேயானால், அதன் விலை வேறு விதமாக இருக்கும். ஒளிப்பதிவாளர் வெற்றி, இயக்குனர் சிவா, உறவினர் நடிகை ஷாமிலி இப்படி அஜித்தின் கேமராவில் ஸ்டோர் ஆனவர்கள் எக்கச்சக்கம். அவர்களுக்கு போட்டோக்கள் புதிதல்ல. ஆனாலும் அஜித் எடுத்த போட்டோ என்று பெருமையாக பதிவிடும் போது தான் அவர்கள், அந்த காஸ்ட்லி கேமராமேனை வெளியே கொண்டு வருகிறார்கள். அஜித் எடுத்த பல போட்டோக்கள் அற்புதமானவை, ஆச்சரியமானவை என இதற்கு முன் அவருடன் பணியாற்றியவர்கள் சிலாகித்திருக்கிறார்கள். வழக்கம் போல அவற்றையும் வெளியே விடாமல், தன்னை போலவே தனக்குள் வைத்திருக்கிறார் இந்த போட்டோகிராபர் அஜித். நடிகராக நிகழ்ச்சிகளை தவிர்க்கிறீர்கள் அது உங்கள் உரிமை, போட்டோகிராபராக உங்கள் படைப்புகளை வெளியில் விடுங்கள், அதை காண பல கோடி கண்கள் காத்திருக்கிறது.