ஆகஸ்டு மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரர், வீராங்கனைகள் அறிவித்த ஐசிசி, மேலும் ஒரு சிறப்பு விருதை அறிவித்துள்ளது. அயர்லாந்தில் நடைபெற்ற மகளிர் கிரிக்கெட் போட்டியின்போது மைதானத்துக்குள் நுழைந்து ஃபீல்டிங் செய்த டாசில் என்ற நாய் குட்டிக்கு, ”இந்த மாதத்திற்கான ஐசிசியின் சிறந்த நாய்” என்ற விருதை வழங்கியுள்ளது டிரெண்டாகி வருகிறது.
போட்டி நடைபெற்று கொண்டிருக்கும்போது மைதானத்துக்குள் ரசிகர்கள் புகுந்துவிடும் சம்பபவங்கள் கிரிக்கெட்டில் வழக்கமாக நடப்பதுதான். ஆனால், கிரிக்கெட் போட்டியின் போது நாய் ஒன்று மைதானத்திற்குள் நுழைந்து அட்டகாசம் செய்த சம்பவம் சமீபத்தில் அரங்கேறியது.
அயர்லாந்து நாட்டில் மகளிருக்கான உள்ளூர் டி20 போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் பியர்டி மற்றும் சிஎன்எஸ்ஐ அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் சிஎன்.எஸ்.ஐ அணியின் பேட்டிங்கின் போது 9ஆவது ஓவரில் நாய் ஒன்று பாதியில் மைதானத்திற்குள் புகுந்தது. அந்த நேரத்தில் பந்தை வீக்கெட் கீப்பர் ஸ்டெம்பை நோக்கி வீசினார். அந்தப் பந்தை மைதானத்திற்குள் நுழைந்த நாய் சிறப்பாக தன்னுடைய வாயால் கவ்வியது.
அதன்பின்னர் அந்த நாயிடம் இருந்து பந்தை எடுக்க வீராங்கனைகள் சிறிது நேரம் முயற்சி செய்தனர். இறுதியில் அந்த நாய் பேட்டிங் செய்து கொண்டிருந்த வீராங்கனையிடம் சென்று தனது வாயில் இருந்த பந்தை கீழே கொடுத்தது. அதன்பின்னர் மீண்டும் அந்த நாய் வெளியே அனுப்பப்பட்டு போட்டி நடைபெற்றது. இந்த விவகாரம் தொடர்பாக அயர்லாந்து கிரிக்கெட் அணி தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவாக பதிவிட்டது நேற்றே வைரவலானது.
இந்நிலையில், இன்று சிறந்த வீரர், வீராங்கனைக்கான விருதுகளை அறிவித்த ஐசிசி, டாசில் என்ற அந்த நாய் குட்டிக்கும் விருது அறிவித்து ஆச்சர்யப்படுத்தி உள்ளது. அயர்லாந்து கிரிக்கெட்டின் சிறந்த ஃபீல்டர் எனவும், ப்ளேயர் ஆஃப் தி மொமண்ட் எனவும் குறிப்பிட்டு இந்த விருதை ஐசிசி அறிவித்துள்ளது. டாசில் நாய்க்கு, ரசிகர்கள் பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். இன்னொரு புறம், மீம்ஸ்களை தெறிக்கவிட்டு வருகின்றனர்.