டெஸ்ட், ஒரு நாள், டி-20 கிரிக்கெட்டின் இந்திய அணி கேப்டன் பதவிகளை பகிர்ந்தளிக்கும் திட்டம் இல்லை பிசிசிஐ பொருளாளர் அருண் துமால் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் 2021 தொடரின் இரண்டாம் கட்ட போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பர் 19-ம் தேதி தொடங்க உள்ளது. ஐ.பி.எல். போட்டிகளில் பங்கேற்பதற்காக இந்திய வீரர்கள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர். ஐ.பி.எல். தொடருக்குப் பிறகு இந்திய அணி டி-20 உலககோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ளது.
இந்நிலையில், டி-20 உலகக்கோப்பையில் இந்திய அணி கோப்பையை வெல்ல தவறினால், டி-20 மற்றும் ஒரு நாள் கிரிக்கெட்டின் கேப்டன் பொறுப்பில் இருந்து கோலி விலகிவிடுவார் என்றும், துணை கேப்டன் ரோகித் சர்மாவிடம் அந்த பொறுப்பை ஒப்படைக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. தனது பேட்டிங்கில் கவனம் செலுத்துவதற்காகவும், இழந்த தனது பார்மை மீட்பதற்காகவுமே கோலி இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், டி-20 உலககோப்பை போட்டித் தொடர் முடிந்த பிறகு விராட் கோலி இதை அறிவிப்பார் என்றும் கிரிக்கெட் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியானதாக தனியார் பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டது. இந்த செய்தி இன்று காலை முதல் சமூக வலைதளத்தில் டிரெண்டானது.
இந்த தகவலை முற்றிலுமாக மறுத்துள்ள பிசிசிஐ பொருளாளர் அருண் துமால், ”கேப்டன்சியை பகிர்ந்தளிக்கும் எந்தவொரு திட்டமும் இல்லை. டெஸ்ட், ஒரு நாள் மற்றும் டி-20 என மூன்று ஃபார்மாட்களிலும் இந்திய அணி கேப்டனாக விராட் கோலியே தொடர்வார்” என தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் கிரிக்கெட் வரலாற்றிலே கங்குலி, தோனிக்கு பிறகு வெற்றிகரமான கேப்டனாக வலம் வருபவர் விராட் கோலி. ஆனால், தற்போது அவர் தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக வெளியான தகவலால் அவரது ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சியடைந்தனர். இதுவரை எந்தவொரு உலககோப்பையையும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி கைப்பற்றாவிட்டாலும், விராட் கோலி அதிக வெற்றிகளை பெற்றுத் தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.