கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் தற்போது வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் இந்தியாவில் இருந்து பிறநாடுகளுக்கு செல்லும் பயணிகளுக்கு சில நாடுகள் கடும் கட்டுபாட்டை விதித்துள்ளனர். அந்தவகையில் இந்தியாவில் இருந்து வரும் பயணிகளை ‘ரேட் லிஸ்டி’ செய்து பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது. 


 


இந்நிலையில் வரும் ஜூன் மாதம் சவுத்தாம்டன் நகரில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி குறித்து ஐசிசி கருத்து தெரிவித்துள்ளது. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “நாங்கள் தற்போது பிரிட்டன் அரசிடம் ரேட் லிஸ்ட் பட்டியல் தொடர்பாக பேசிக் கொண்டிருக்கிறோம். 


இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் மற்றும் பிற நாடுகள் பெருந்தொற்று காலத்தில் கிரிக்கெட் போட்டிகளை நடத்தி காட்டியுள்ளனர். அதேபோல் வரும் ஜூன் மாதமும் எந்தவித தடையும் இல்லாமல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடைபெறும்” எனத் தெரிவித்துள்ளது. 


 






பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பேசிய அந்நாட்டின் சுகாதார செயலாளர் மேட் ஹான்காக், “இந்தியாவில் இருந்து பரவிய கொரோனா வகை இங்கிலாந்தில் கண்டறியப் பட்டுள்ளது. இந்த வகையில் பரவிய மொத்த தொற்று எண்ணிக்கை தற்போது 103 ஆக உள்ளது. 


 


எனவே நாங்கள் மிகவும் கஷ்டமான முடிவை எடுத்துள்ளோம். அதாவது இந்தியாவை ரேட் லிஸ்ட் பட்டியலில் வைக்க முடிவு எடுத்துள்ளோம். அதன்படி பிரிட்டன் நாட்டைச் சேராத நபர்கள் யாரும் இந்தியாவிலிருந்து வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அத்துடன் கடந்த 10 நாட்களில் இந்தியாவிற்கு சென்று வந்த எந்த நாட்டைச் சேர்ந்த நபராக இருந்தாலும் இங்கிலாந்து வர தடை செய்யப்பட்டுள்ளது. 




அதேபோல் பிரிட்டன் நாட்டைச் சேர்ந்தவர்கள் இந்தியாவில் இருந்து வந்தால் அவர்கள் 10 நாட்கள் கட்டாயம் விடுதியில் தனிமைப்படுத்தப்படுவார்கள்” எனத் தெரிவித்துள்ளார். இந்தியாவிலிருந்து வருபவர்களுக்கு இனி இங்கிலாந்தில் கடும் கட்டுபாடு விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஐசிசி தற்போது இந்த விளக்கத்தை அளித்துள்ளது. 




உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு நியூசிலாந்து அணி முதலாவதாக தகுதிப் பெற்றது. இதனைத் தொடர்ந்து இந்தியாவில் நடைபெற்ற இங்கிலாந்து டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் வென்று இந்தியா தகுதிப் பெற்றது. வரும் ஜூன் மாதம் 18ஆம் தேதி இறுதிப் போட்டி நடைபெற உள்ளது. மேலும் ஜூன் 23ஆம் தேதி ரிசர்வ் நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்பதால் இந்த இறுதிப் போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு எழுந்துள்ளது. எனினும் கொரோனா பாதிப்பால் இந்தப் போட்டி திட்டமிட்டபடி நடைபெறுமா என்ற கேள்வி இன்னும் பலரிடம் எழுந்து கொண்டு தான் உள்ளது.