நாடாளுமன்ற நியமன பதவி கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை என சேலம் வந்திருந்த இந்திய தடகள வீராங்கனை பி.டி.உஷா தெரிவித்துள்ளார். 


சேலம் மாவட்டத்தில் உள்ள விநாயக மிஷின் ஆராய்ச்சி நிறுவன நிகர் நிலை பல்கலைக்கழகத்தின் நிறுவனத் தலைவர் சண்முகசுந்தரம் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு "கோ கிரீன் இந்தியா" என்ற தலைப்பில் இன்று ஏழு கிலோ மீட்டர் தூர மாரத்தான் ஓட்ட பந்தயப் போட்டி நடைபெற்றது. சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியை தேசிய தடகள வீராங்கனை பத்ம ஸ்ரீ பி.டி. உஷா துவக்கி வைத்தார். 



இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “மாநிலங்களவை நியமன உறுப்பினர் பதவி எனக்கு வழங்கி இருப்பது இந்திய விளையாட்டு துறைக்கு அளிக்கப்பட்ட கௌரவம் ஆகும். குறிப்பாக தடகள வீரர்களுக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்” என பெருமிதம் தெரிவித்தார்.


“தற்போதுள்ள தடகள வீரர்களில் நீரஜ் சோப்ரா நம்பிக்கை அளிக்கும் விதமாக விளையாடி வருகிறார். இதேபோன்று தடை ஓட்டம் , 100 மீட்டர் ஓட்டங்களில் வீரர்கள் நல்ல எதிர்பார்ப்பை கொடுத்துள்ளனர். நாங்கள் விளையாடிய காலத்தில் பெரிய அளவில் நிதி ஒதுக்கீடு விளையாட்டு துறைக்கு செய்யப்படவில்லை. தற்போது மத்திய அரசு விளையாட்டு துறைக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. பாராளுமன்றத்தில் எனக்கு பேச வாய்ப்பளிக்கும் போது விளையாட்டு துறை சார்ந்தே கோரிக்கைகளை முன்வைப்பேன். விளையாட்டு துறைக்கு இந்திய பிரதமர் அவர்கள் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வீரர்களை ஊக்கமளித்து வருகிறார்” என்றார். 



மேலும் வீரர்களை அடிக்கடி சந்தித்து அவர்களின் விளையாட்டுத் திறன் எதிர்கால திட்டங்கள் குறித்து கலந்துரையாடி தொடர்ந்து உற்சாகப்படுத்தி வருகிறார். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற பிறகு நாடு திரும்பும் வீரர்களை சந்தித்து பேசி அவர்களை கௌரவப்படுத்தி வருகிறார். இது விளையாட்டு வீரர்களுக்கு மிகுந்த ஊக்கமளிப்பதாக உள்ளது. இது போன்ற நடவடிக்கைகளால் அடுத்த ஒலிம்பிக்கில் நமது வீரர்களிடம் இருந்து நிறைய பதக்கங்களை எதிர்பார்க்கலாம் என்றார்.


இதைத்தொடர்ந்து ஏபிபி நாடுவிற்கு பி.டி.உஷா அளித்த பிரத்யேக பேட்டியில், விளையாட்டு துறையில் மாநிலங்களவை நியமன உறுப்பினர்கள் செயல்படவில்லை. உங்களது நடவடிக்கை எவ்வாறு இருக்கும் என்ற கேள்விக்கு விளையாட்டுக்காக என்னால் முடிந்தவரை நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன் எனத் தெரிவித்துள்ளார்.  


இதன்பின் மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பி.டி.உஷா கவுரவப்படுத்தினார். இந்த நிகழ்ச்சியில் சேலம் மாவட்டம் காவல் துணை ஆணையாளர் மாடசாமி, விநாயகா மிஷின் குழுமத்தின் தலைவர் சரவணன் மற்றும் விளையாட்டு வீரர்கள் பலரும் கலந்து கொண்டனர்.