மகேந்திர சிங் தோனி இன்று தன்னுடைய 41வது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார். இந்த வீடியோவை அவரது மனைவியான சாக்ஷி தோனி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி இன்று தன்னுடைய 41வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த பிறந்தநாளை அவர் கேக் வெட்டி கொண்டாடியிருக்கிறார். இந்த வீடியோ பதிவை அவரது மனைவியான சாக்ஷி தோனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். இந்தப் பதிவை பார்த்த தோனியின் ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை அவருக்கு தெரிவித்து வருகின்றனர்.
கிரிக்கெட் களத்தில் தோனி களமிறங்கும் போது ரசிகர்கள் பட்டாளம் தோனி, தோனி என்று ஆரவாரம் செய்து இவரை வரவேற்பார்கள். அடர்ந்த முடியுடன் அதிரடியாக ஆட தொடங்கிய தோனி பின்னர் தன்னுடைய பொறுப்பை உணர்ந்து சமார்த்தியமாக விளையாட தொடங்கினார். கிரிக்கெட் விளையாட்டில் மிகச் சிறந்த ஃபினிசராக வலம் வந்து அசத்தினார்.
சென்னையும் தோனியும்:
மகேந்திர சிங் தோனிக்கும் சென்னைக்கும் எப்போதும் சிறந்த பந்தம் ஒன்று உள்ளது. சென்னை ஆடுகளம் எப்போதும் தோனியாக ராசியான ஒன்றாகவே அமைந்துள்ளது. 2008ஆம் ஆண்டு முதல் சிஎஸ்கே அணியில் தோனி விளையாடி வருகிறார். இவருக்கு சென்னையில் எப்போதும் உற்சாக வரவேற்பு இருந்து வருகிறது. இந்தச் சூழலில் தோனிக்கு சென்னையை மிகவும் பிடிக்க காரணம் என்ன? சென்னை வரும்போது எல்லாம் தோனி ஒரு பைக் எடுத்து கொண்டு சென்னை சுற்றி பார்த்துள்ளதாக கூறப்படுகிறது.
சென்னையிலுள்ள பல்வேறு இடங்களுக்கு பைக் மூலம் சுற்றி பார்த்துள்ளதாக தெரிகிறது .அப்போது முதல் அவருக்கு சென்னை மீது மிகுந்த காதல் ஏற்பட்டுள்ளது. அது தான் அவருக்கு நாளடைவில் சென்னை மிகவும் பிடிக்க முக்கிய காரணமாக அமைந்துள்ளது. 2013ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிராக சென்னையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் தோனி இரட்டை சதம் விளாசி அசத்தினார். அதுவும் அவருக்கு சென்னையில் தான் நடந்தது. சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானம் அவருக்கு ஒரு உள்ளூர் ஆடுகளம் போல் மாறியது. சென்னைக்கு எப்போதும் எல்லாம் தோனி வருகிறாரோ அப்போது அவருடைய ரசிகர்கள் பெரிய திருவிழா தான்.
அவர் கிரிக்கெட் விளையாட்டிற்காகவோ அல்லது படப்பிடிப்பிற்கோ அல்லது நிகழ்ச்சிக்காவோ வந்தால் அது ரசிகர்கள் கொண்டாட்டமாகவே அமைந்திருக்கும். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக சென்னையில் நடைபெற்ற இந்தியா சிமிண்ட்ஸ் விழாவில் தோனி பங்கேற்று இருந்தார். அதில் அவர் என்னுடைய கடைசி ஐபிஎல் போட்டி சென்னையில் தான் நடைபெறும் என்று கூறினார். மேலும் அவர் தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை எப்போதும் தீர்மானிப்பாதகவும் தெரிவித்திருந்தார். தோனி களத்தில் மட்டுமல்லாமல் ஓய்வு அறிவிப்பதிலும் தனக்கு என்று ஒரு தனி பாணியை வைத்துள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலிய தொடருக்கு நடுவில் திடீரென்று ஓய்வை அறிவித்தார். அதேபோல் ஒருநாள் போட்டிகளிலிருந்து திடீரென்று கடந்த 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி ஓய்வை அறிவித்தார். அந்த வகையில் தற்போது ஐபிஎல் போட்டியிலும் அவர் அதே பாணியை கடைப்பிடிப்பார் என்று கருதப்படுகிறது. தோனி என்பவர் இந்திய கிரிக்கெட்டில் ஒரு சகாப்தம். அவருடைய சகாப்தம் ஒரு முடிவு அல்ல அது பல புதிய சகாப்தங்களின் தொடக்கமாக இருக்கும் என்பதில் எந்தவித மாற்றமுமில்லை. பிறந்தநாள் வாழ்த்துகள் தல தோனி...!