நியூயார்க்கில் உள்ள இரட்டைக் கோபுரம் தாக்குதல் சம்பவத்தின் இருபதாவது ஆண்டின் நினைவுத் தினத்தை முன்னிட்டு அமெரிக்கா மக்கள் துயரஞ்சலி செலுத்தி வருகின்றனர். அல்கொய்தா பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட இந்த கொடூரத் தாக்குதல் உலகளாவிய வரலாற்று சம்பவமாக கருதப்படுகிறது. மேலும், இதை உலகளாவிய வராலாற்று சம்பவமாக மாற்றியதில் அமெரிக்கா முக்கிய பங்கும் வகிக்கிறது. இந்த தாக்குதலில் 3000-க்கும் அதிகமான மக்கள் மாண்டார்கள் என்பதைத் தாண்டி, பன்னாட்டு உறவுகளில் உள்ள அடிப்படை அரசியலை 9/11 கேள்வி கேட்பதாய் அமைந்தது. இந்த தாக்குதலை அமெரிக்கா மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்களும் தங்களுடைய அஞ்சலியை பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் இந்தச் சம்பவம் தொடர்பாக தன்னுடைய நினைவலைகளை பகிர்ந்துள்ளார். அதில், "அமெரிக்காவில் வர்த்தக மையத்தின் மீது தாக்குதல் நடைபெற்ற போது நான் விமானத்தில் பயணம் செய்து கொண்டு இருந்தேன். ஜெர்மனியின் ஃபராங்க்போர்டு விமான நிலையத்தில் எங்களுடைய விமானம் தரையிரங்கிய உடன் மிகப்பெரிய அளவில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். நான் உட்பட அனைத்து பயணிகளும் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டோம். அப்போது நான் அந்த அதிகாரிகளும் எதற்காக இப்படி ஒரு சோதனை என்று கேட்டேன்.
அதற்கு அந்த அதிகாரிகள் என்னை அழைத்துச் சென்று தொலைக்காட்சியில் அமெரிக்க வர்த்தக மையம் தாக்குதல் நடத்தப்பட்ட காட்சியை காட்டினார்கள். நான் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். அதற்கு ஒரு நாள் முன்பாகத்தான் நான் அந்த வர்த்தக மையத்தின் முதலாவது டவரில் இருந்தேன். என்னால் நம்ப முடியவில்லை. எங்களுடைய விமானம் அமெரிக்காவில் இருந்து வந்ததால் அந்த சோதனை நடத்தப்பட்டது. அதன்பின்னர் நான் இணைப்பு விமானத்தை பிடித்து மீண்டும் இந்தியா வந்தடைந்தேன்" எனக் கூறியுள்ளார்.
செப்டம்பர் மாதம் அமெரிக்க ஓபன் தொடர் டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் தொடர் நடைபெற்று முடிந்தது. அந்தத் தொடரில் பங்கேற்பதற்காக லியாண்டர் பயஸ் அமெரிக்கா சென்று இருந்தார். அந்த ஆண்டு யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரில் பயஸ்-மகேஷ் பூபதி ஜோடி முதல் சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க வர்த்தக மையம் இடிக்கப்பட்டு இன்றுடன் 20 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இன்னும் எத்தனை ஆண்டுகள் முடிந்தாலும் இந்தச் சம்பவம் மனித குலத்தை எப்போதும் தீவிரவாதம் அச்சுறுத்தும் ஒரு நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது. இந்தத் தாக்குதல் பல்வேறு நாடுகளும் கடுமையாக கண்டனம் தெரிவித்தது. இந்தத் தாக்குதல் தான் ஆஃப்கானிஸ்தான் நாட்டிற்குள் அமெரிக்க படைகள் நுழைய முக்கிய காரணமாக அமைந்தது.
மேலும் படிக்க:மறக்க முடியாத தாக்குதலும்.. வேறு கோணத்தில் பார்த்த கண்களும்.. இது வடுவின் வலி!