இந்தியாவில் வேலை வாய்ப்பின்மை விகிதம் 8.3 ஆக உயர்ந்திருக்கிறது என்று இன்று காலை தான் செய்திகளில் வெளியாகியிருந்தது. இருந்து மூட்டையைக் கட்டிக்கொண்டு இந்தியாவிலிருந்து கிளம்புவதாக மதியம் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது பிரபல கார் நிறுவனமான ஃபோர்ட். இந்தியாவில் கிட்டத்தட்ட 12 ஆயிரம் பணியாளர்களை வைத்து இயங்கிக்கொண்டிருக்கும் ஒரு நிறுவனம் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டிருப்பது பலரது வயிற்றில் புளியை கரைத்திருக்கிறது. கடந்த 2017ல் தான் ஜெனரல் மோட்டார்ஸ் இந்தியாவை விட்டு கிளம்பியது. இப்போது ஃபோர்ட் நிறுவனம் கிளம்புகிறது.
ஃபோர்டுக்கும் இந்தியாவுக்குமான தொடர்பு 1926லேயே தொடங்குகிறது. ஃபோர்ட் மோட்டார் கம்பெனி ஆஃப் இந்தியாவின் துணைநிறுவனமாக செயல்பட்டது. 1953ல் இறக்குமதி விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டதால் கார் தயாரிப்பை ஃபோர்ட் கை விட்டது . அதன் பிறகு சென்னையை தலைமையிடமாகக் கொண்டு 1995 அக்டோபரில் இந்தியாவிற்குள் தடம் பதித்தது ஃபோர்ட் நிறுவனம். அப்போது இந்திய நிறுவனம் ஏதாவது ஒன்றுடன் இணைந்தே உற்பத்தி செய்யமுடியும் என்பதால் மகேந்திரா நிறுவனத்துடன் இணைந்து மகேந்திரா ஃபோர்ட் இந்தியா லிமிட்டெட் என்ற பெயரில் இயங்க ஆரம்பித்தது. ஆரம்பத்தில் 50-50 என்ற விகிதத்தில் இருந்த அதன் ஷேர்கள், பின்னர் 72% ஷேர்கள் ஃபோர்ட் நிறுவனத்திடம் போக நிறுவனத்தின் பெயரை ஃபோர்ட் இந்தியா ப்ரைவேட் லிமிடெட் என்று 1998ல் மாற்றியமைத்தது.
சுமார் 2 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் சென்னை மறைமலை நகரில் ஆண்டுக்கு ஒன்றரை முதல் இரண்டு லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் அளவிலான தொழிற்சாலை அமைக்கப்பட்டு அதன் உற்பத்தித் தொடங்கியது. ஃபோர்ட் இந்தியாவிற்குள் வந்த நேரத்தில் இந்திய கார் சந்தையை ஆக்கிரமித்து வைத்திருந்தது மாருதி சுசுகி நிறுவனம். ஃபோர்ட் வந்த நில மாதத்திற்குள்ளாகவே ஹூண்டாய், ஹோண்டா போன்ற நிறுவனங்களும் இந்தியாவின் கார் சந்தையை பங்குபோட்டுக்கொள்ள களமிறங்கின. அதிலும், ஹூண்டாய் நிறுவனம் தமிழ்நாட்டிலேயே அதன் உற்பத்தி மையத்தை அமைத்தது.
1997ல் ஃபோர்டு நிறுவனத்தின் கார் உற்பத்தித் தொடங்கியது. ஆரம்பத்தில் அவர்களது சக்ஸஸ்ஃபுல் மாடலான ஃபோர்ட் எஸ்கார்டை களமிறக்கியது. அதன்பிறகு ஃபோர்ட் ஐகான், மோண்டியோ, எண்டீவர், ஃப்யூசன், ஃபியஸ்டா க்ளாசிக், ஃபிகோ, இகோ ஸ்போர்ட், ஃபிகோ அஸ்பைர், மஸ்டாங், ஃப்ரீஸ்டைல் ஆகிய கார்களை இதுவரை இந்திய சந்தைகளில் உலாவ விட்டிருக்கிறது ஃபோர்ட். ஆனால், இந்திய வாடிக்கையாளர்களின் மனநிலையை சரியாக கணிக்காமல் விட்டதாலோ என்னவோ கார் விற்பனை மிகக் குறைவாகவே இருந்தது. 2009ல் 29 ஆயிரம் கார்கள் மட்டுமே விற்றிருந்த நிலையில், அதன் விற்பனைக்கு கை கொடுத்தது ஃபிகோ மாடல். 2010ல் அதிரடியாக அதன் விற்பனை 172% அளவிற்கு உயர்ந்தது. ஆனாலும் தொடர்ச்சியாக மாடல்களை அறிமுகப்படுத்தாததால் அடுத்த சில ஆண்டுகளில் வந்த இகோ ஸ்போர்ட், ஃபிகோ அஸ்பைர், ஃபியஸ்டா போன்ற கார்களே விற்பனையில் ஓரளவிற்கு கை கொடுத்தன. கார் தயாரிப்பைத் தொடங்கியதில் இருந்து இதுவரை ஒரு லட்சம் எண்ணிக்கையில் விற்பனை ஆனதே இல்லை.
இதற்கிடையில் குஜராத் மாநிலத்தின் சனானந் பகுதியில் 2 லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் வகையில் ஒரு பில்லியன் டாலர்கள் முதலீட்டில் மற்றொரு தொழிற்சாலையையும் அமைத்தது. தமிழ்நாட்டிலும் அதன் தொழிற்சாலையை விரிவு படுத்தியது. இந்த தொழிற்சாலைகள் ஆண்டுக்கு சுமார் 6 லட்சம் என்ஜின்களையும், 4 லட்சம் கார்களையும் உற்பத்தி செய்யும் திறன் வாய்ந்தவை. இங்கு உற்பத்தியாகும் கார்களில் 25 சதவீதத்தையும், கார் என்ஜிகளில் 40 சதவீதத்தையும் ஏற்றுமதி செய்துவந்தது. ஆனால் உள்ளூர் மார்க்கெட்டில் விற்பனையை கோட்டைவிட்டது ஃபோர்ட்.
இந்திய மக்களின் பட்ஜெட் மனநிலையை புரிந்துகொண்ட சுசுகி, ஹூண்டாய் நிறுவனங்கள் விலை குறைவான அதே நேரத்தில் சொகுசான மாடல்களை அடுத்தடுத்து களமிறக்கின. ஆனால் ஃபோர்ட் புதிய மாடல்களை அறிமுகப்படுத்தாததோடு பட்ஜெட்டுக்கேற்ற வகையில் கார்களை தயாரிக்கவில்லை என்பதும் ஒரு காரணம். மொத்தமாகவே 12 மாடல்களை மட்டுமே இதுவரை அறிமுகப்படுத்தியுள்ள ஃபோர்ட் தற்போது 5 மாடல்களை மட்டுமே விற்பனை செய்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாகவே தொடந்து நஷ்டத்தில் இயங்கி வந்த இந்த நிறுவனம், கொரோனாவால் மேலும் சரிவை சந்தித்தது. சரிவை கட்டுப்படுத்த இணைந்து செயல்படலாம் என்ற நோக்கத்தில் மகேந்திரா நிறுவனத்துடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால், முயற்சிகள் தோல்வியில் முடிய இந்தியாவை விட்டு வெளியேறும் முடிவை எடுத்திருக்கிறது ஃபோர்ட். அடுத்த ஆண்டின் பிற்பகுதியில் இந்தியாவில் இருந்து வெளியேறுவதாகவும், ஆனால் வாடிக்கையாளர்களுக்கான அதன் சேவைகள் தொடரும் என்று தெரிவித்துள்ளது.
ஃபோர்ட் நிறுவனத்தை சார்ந்து நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பை பெற்றிருப்போர் எண்ணிக்கை சுமார் 20ஆயிரத்தைத் தாண்டும். இந்தியாவிலிருந்து வெளியேறுவதால் 4ஆயிரம் பணியாளர்களுக்கு தான் பாதிப்பு என்றிருக்கிறது. ஆனால் அப்படி இருக்கப்போவதில்லை என்கிறார்கள் பணியாளர்கள். ஏற்கனவே பணியாளர்களை மாதாமாதம் கட்டம் கட்டி அனுப்பி வந்த நிலையில் தற்போது மொத்தமாக கட்டம் கட்டியிருக்கின்றனர் என்று வருந்துகின்றனர் பணியாளர்கள்.
உலகின் மிகப்பெரிய ஆட்டோ மொபைல் சந்தையான இந்தியாவில் இருந்து ஜெனரல் மோட்டார்ஸ், ஹார்லே டேவிட்சன், ஃபியாட் இப்போது ஃபோர்ட் என்று தொடர்ச்சியாக நிறுவனங்கள் வெளியேறுவது இந்தியாவின் வளர்ச்சிக்கு நல்லதல்ல என்று எச்சரிக்கின்றனர் வல்லுநர்கள்.
மேலும், வாசிக்க:
Ford India : நாங்க என்ன செய்வது? நிர்கதியாய் நிற்கும் சென்னை ஃபோர்டு ஊழியர்கள்.. கோரிக்கை இதுதான்!