பணபரிவர்த்தனை முதல் குழந்தைகளின் கல்வி வரை ஏராளமான விசயங்களுக்கு இணையம் உதவுகிறது.
ஆன்லைன் எனும் கருவியை சரியாக பயன்படுத்தும் போது சரியான வழியையும், தவறாக பயன்படுத்தும் போது தவறான பாதையை காட்டுகிறது. இதில் பொழுதுபோக்கு விளையாட்டும் விதிவிலக்கல்ல. வீடியோ கேம் விளையாட்டுக்கள் மனசோர்வு, மன அழுத்தம் என மனநலம் சார்ந்த நோய்களை உருவாக்கலாம் என உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது. அப்படியான ஆபத்துக்களை விளைவிக்கும் ஆன்லைன் விளையாட்டுக்கள் சமீப காலமாக மாணவர்களிடமும், இளைஞர்களிடமும் வேரூன்றி வருகிறது.
செல்போனில் ஆன்லைன் உதவியால் ஆயுதங்கள் ஏந்தி விளையாடப்படும் இந்த விளையாட்டு இளையோர்களை முடக்கி உள்ளது. நாள் முழுதும் இந்த விளையாட்டுக்களை விளையாடும் அளவிற்கு சூழ்நிலை மாறியுள்ளது. சில மாதங்களுக்கு முன் தொடர்ந்து 6 மணி நேரம் விளையாடிய வடமாநில சிறுவன் மாரடைப்பால் இறந்ததாகவும் செய்திகள் வெளியானது. பல மணி நேரம் தொடர்ந்து பேசிக் கொண்டே குழுவாக விளையாடும் இப்படியான விளையாட்டுக்கள் பல்வேறு சிக்கலை உருவாக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இது குறித்து நம்மிடம் மனநல ஆலோசகர் மற்றும் உளவியல் சிகிச்சையாளருமான ப.ராஜ சௌந்தர பாண்டியன் கூறுகையில்," கொரோனா காலகட்டத்தில் நோய் தொற்றைவிட மனநலம் சார்ந்த பிரச்னைகள் அதிகமாக வெளிவர ஆரம்பித்துள்ளது. இதில் சிறுவர்களின் நிலைமை பற்றி யோசிக்கும் போது சற்று கவலையாக உள்ளது. இன்று நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வரக்கூடிய செய்திகளில் யூடியூப் மதன் செய்தியும் ஒன்று. இவரைப்போல் பலபேர் இம்மாதிரியான செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். சிறுவர்கள் இவர்களை பெரிதும் ரசிக்கிறார்கள் மற்றும் கொண்டாடுகிறார்கள். உண்மையில் அவர்களுக்கு எது சரி தவறு என உணரும் அளவிற்கு சரியான மனநிலை இல்லை. ஆன்லைன் விளையாட்டின்போது கெட்ட வார்த்தை பேசுவது கெத்து என நினைத்துக் கொள்கிறார்கள்.
எது வாழ்வின் முன்னேற்றத்திற்கு தேவை என்பதை கூட அவர்களால் புரிந்து இருக்க முடியவில்லை. எதிர்மறையான விஷயங்கள் சிறுவர்களை எளிதாக சென்றடைகிறது. இதை பயன்படுத்தி பலரும் பெரிய அளவில் லாபம் சம்பாதித்து வருகிறார்கள். ஆனால் சிறுவர்களுக்கோ இது புரிவதில்லை. இதைப் புரிய வைக்க நினைக்கும் பெற்றோர்களுக்கும் பிரச்னைதான் ஏற்படுகிறது. உங்கள் பிள்ளை ஆன்லைன் விளையாட்டில் மூழ்கி கிடக்கிறானா? அவனை வெளிக் கொண்டுவர முடியவில்லை எனில் நல்ல மனநல ஆலோசகரிடம் கலந்துகொண்டு முடிவெடுங்கள். இவ்வாறன பிரச்னையில் உள்ள நபர்களுக்கு முறையான கவுன்சலிங் கொடுக்கப்படவேண்டும். அப்போது தான் அவர்களை விரைவாக மீட்க முடியும்” என்றார்.
இதை மிஸ் பண்ணாதீங்க பாஸ் -'' செந்தில் பாலாஜியின் அணில் பேச்சால் நான் தப்பித்தேன்’’ - செல்லூர் ராஜூ நிம்மதி !