Hockey Mens World Cup: 2023ஆம் இந்தியாவில் நடக்கவுள்ள ஆண்களுக்கான ஹாக்கித் தொடர் நடக்கவுள்ளது. ஏற்கனவே 2018ஆம் ஆண்டில் இந்தியாவின் ஒடிசாவில் உலககோப்பை ஹாக்கித் தொடர் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. 2018ஆம் ஆண்டு நடைபெற்ற அந்த உலகக்கோப்பைத் தொடரில், மூன்று முறை சாம்பியன் பட்டத்தினை வென்ற நெதர்லாந்து அணியை வீழ்த்தி பெல்ஜியம் அணி உலகச்சாம்பியன் பட்டத்தினை வென்றது. 


கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு நடக்கவுள்ள உலககோப்பைத் தொடர் என்பதால் இந்த உலககோப்பைக்கு உலகம் முழுவதும் உள்ள ஹாக்கி ரசிகர்களுக்கு பெரும் ஆர்வத்தினை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள 15வது ஆண்களுக்கான ஹாக்கி உலகக்கோப்பைத் தொடரில் பங்கேற்கும் அணிகள் இடம்பெற்றுள்ள பிரிவுகள் குறித்த அறிவிப்பினை சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது. மொத்தம் 16 அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டியில், ஒரு பிரிவுக்கு தலா நான்கு அணிகள் எனும் கணக்கில் மொத்தம் நான்கு பிரிவுகள் பிரிக்கப்பட்டுள்ளன. அதில் இந்திய அணி D பிரிவில் இடம் பெற்றுள்ளது. இதில், இந்திய அணியுடன், இங்கிலாந்து, ஸ்பெயின், வேல்ஸ் அணிகள் இடம்பெற்றுள்ளன. லீக் சுற்றில் இந்திய அணி D பிரிவில் இடம் பெற்றுள்ள மற்ற மூன்று அணிகளுடன் மோதும்.




அதேபோல் நடப்புச் சாம்பியன் பெல்ஜியம் B பிரிவில் இடம்பெற்றுள்ளது. இதில், பெல்ஜியம், ஜெர்மனி, கொரியா, ஜப்பான் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.  A பிரிவில் ஆஸ்திரேலியா, அர்ஜெண்டினா, ஃப்ரான்ஸ், தென் ஆப்பிரிக்கா அணிகள் இடம் பெற்றுள்ளன.   C பிரிவில், நெதர்லாந்து, சிலி, மலேசியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இடம் பெற்றுள்ளன. அதிக முறை உலகச்சாம்பியன் பட்டத்தினை வென்ற பாகிஸ்தான் அணி 2023ஆம் ஆண்டு இந்தியாவின், ஒடிசா மாநிலத்தில் நடக்கவுள்ள உலகக்கோப்பை ஹாக்கித் தொடரில் பங்கேற்கவில்லை. பாகிஸ்தான் அணி இதுவரை நடந்துள்ள 14 உலககோப்பை ஹாக்கித் தொடரில் நான்கு முறை (1971, 1978, 1982, 1994)  சாம்பியன் பட்டத்தினை வென்றுள்ளது.  இதனை அடுத்து நெதர்லாந்து அணி மூன்று முறை  (1973*, 1990, 1998*) உலகச் சாம்பியன் பட்டத்தினை வென்றுள்ளது.  இந்திய அணி இதுவரை ஒரே ஒரு முறை(1975) மட்டுமே சாம்பியன் பட்டத்தினை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 






2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 13 தேதி முதல் 29 தேதி வரையில் உலகக் கோப்பை ஹாக்கித் தொடர் இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் நடைபெற உள்ளது.  இந்த உலகக் கோப்பை ஹாக்கித் தொடர் இரண்டு விளையாட்டு அரங்கில்  நடைபெற உள்ளது. இந்த 15வது உலகக் கோப்பை ஹாக்கித் தொடரில்  இந்தியா தொடரை நடத்தும் அணியாக பங்கேற்கிறது. கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் உலகக் கோப்பை தொடர் சற்று தள்ளிப்போயுள்ளது குறிப்பிடத்தக்கது.