பெண்கள் ஹாக்கி பயிற்சியாளர் ஜான்னேக் ஸ்கோப்மேன் பதவி விலகிய மூன்று நாட்களுக்குப் பிறகு, ஹாக்கி இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து எலினா நார்மன் ராஜினாமா செய்துள்ளார்.
எலினா நார்மன் கடந்த 13 ஆண்டுகளுக்கு மேலாக ஹாக்கி இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், யாரும் எதிர்பார்க்காத வேளையில் தனது பதவியை விட்டு விலக முடிவு செய்துள்ளார். எலினா நார்மன் பதவியில் இருந்த காலத்தில், இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் ஹாக்கி அணிகள் குறிப்பிடத்தக்க வகையில் விளையாடி புதிய உச்சத்தை தொட்டது. இவரது, பதவியின்போது இந்திய ஹாக்கி அணி சிறந்த உலக தரவரிசையை அடைந்தது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆண்கள் அணி 41 ஆண்டுகளுக்குப் பிறகு வெண்கல பதக்கம் வென்றது. அதே சமயம் இந்திய மகளிர் அணி நான்காவது இடத்தை பிடித்தது.
எலினா நார்மனின் பதவிக்காலம் எப்படி இருந்தது..?
இந்தியா ஹாக்கி கூட்டமைப்பு எலினா நார்மன் தலைமையில் 2018 மற்றும் 2023 ம் ஆண்டுகளில் ஆண்கள் ஹாக்கி உலகத் கோப்பையை தொடர்ச்சியாக இரண்டு பதிப்புகளை இந்தியாவில் நடத்தியது. இது தவிர, 2016 மற்றும் 2021ல் இரண்டு ஜூனியர் ஆண்கள் உலகக் கோப்பைகள் நடத்தப்பட்டன. அதன்படி, ஹாக்கி இந்தியா லீக்கின் ஐந்து பதிப்புகளையும் வெற்றிகரமாக நடத்தியது.
மேலும், எலினா நார்மன் பதவிக் காலத்தில் ஹாக்கி இந்தியா FIH சாம்பியன்ஸ் டிராபி, 2015 மற்றும் 2017 இல் FIH உலக லீக் இறுதிப் போட்டிகள், 2019 மற்றும் 2024 இல் FIH ஒலிம்பிக் தகுதிப் போட்டிகள் மற்றும் FIH ஹாக்கி புரோ லீக் உள்நாட்டு விளையாட்டுகள் உட்பட பல சர்வதேச ஹாக்கி போட்டிகளை நடத்தியது. பெண்கள் ஹாக்கியை ஊக்குவிப்பதில் நார்மன் முக்கிய பங்கு வகித்தார்.
மேலும், பெண்களுக்கு சமமான வசதிகள் மற்றும் அங்கீகாரம் கிடைக்க உறுதி செய்தார். அதாவது, ஹாக்கி இந்தியா ஆண்டு விருதுகள் மூலம் சர்வதேச நிகழ்வுகளில் சிறப்பான ஆட்டத்தை அங்கீகரித்து ரொக்கப் பரிசுகள் உட்பட, ஆண்கள் அணியைப் போலவே அவர்களுக்கும் வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தார். 36 ஆண்டுகளுக்குப் பிறகு, 2016 இல் ஒலிம்பிக்கிற்குத் தகுதிபெறும் மகளிர் அணியில் நார்மன் முக்கியப் பங்காற்றினார்.
ஹாக்கி இந்தியா தலைவர் திலீப் டிர்கி என்ன சொன்னார்?
எலினா நார்மன் ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட ஹாக்கி இந்தியா தலைவர் திலிப் டிர்கி கூறியதாவது: “எலினாவின் நேரம் மற்றும் அர்ப்பணிப்புக்காக எனது நன்றியை தெரிவிக்க விரும்புகிறேன். ஹாக்கி இந்தியாவின் தலைவராக மட்டுமின்றி, முன்னாள் வீரர் மற்றும் தீவிர ஹாக்கி பிரியர் என்ற முறையிலும், கடந்த 12-13 ஆண்டுகளில் அவர் ஆற்றிய குறிப்பிடத்தக்க பங்களிப்பை முறையாக அங்கீகரித்து எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். அவரது எதிர்கால முயற்சிகள் அனைத்திலும் பெரும் வெற்றியடைய வாழ்த்துகிறேன். ” என பேசினார்.
பெண்கள் ஹாக்கி பயிற்சியாளர் ஜான்னேக் ஸ்கோப்மேன் பதவி விலகல்:
ஹாக்கி இந்தியா அதிகாரிகளால் தானும் அவரது குழுவும் ஆண்களைப் போல சமமாக நடத்தப்படவில்லை என்றும் மதிப்பளிக்கப்படவில்லை என்றும் கூறி ஷாப்மேன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.