சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் தலைசிறந்த வீரர்களில் ஒருவர் ரோகித் சர்மா. இவர் சர்வதேச கிரிக்கெட்டில் பல சாதனைகளை படைத்துள்ளார். ஒருநாள் போட்டியில் ஒரு போட்டியில் அதிக ரன்கள் அடித்த வீரர் மற்றும் அதிக முறை 200 ரன்களை கடந்த வீரர் என்று அவரது சாதனைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். சர்வதேச கிரிக்கெட் மட்டுமல்லாமல் ஐபிஎல் தொடரிலும் மிகவும் வெற்றிகரமான வீரர் என்றால் அது ரோகித் சர்மா தான்.
2008ஆம் ஆண்டு ரோகித் சர்மா ஐபிஎல் தொடரில் முதல் முறையாக டெக்கன் சார்ஜர்ஸ் அணிக்காக களமிறங்கினார். 2009ஆம் ஆண்டு அந்த அணி ஐபிஎல் கோப்பையை வெல்ல இவர் முக்கிய பங்கு ஆற்றினார். அதன்பின்னர் 2011ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பிடித்தார். 2013,2015,2017,2019,2020 என ஐந்து முறை கேப்டனாக ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளார். ஐபிஎல் கோப்பையை ஒரு வீரராக 6 முறை வென்றவர் என்ற சாதனையையும் ரோகித் சர்மா படைத்துள்ளார். அத்துடன் கேப்டனாக ஐபிஎல் தொடரை 5 முறை வென்ற ஒரே வீரரும் இவர் தான். சென்னை கேப்டன் தோனி 3 முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளார்.
இந்நிலையில் இன்று ரோகித் சர்மா தனது 34ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்தச் சூழலில் அவரின் டாப் -5 ஐபிஎல் இன்னிங்ஸ் என்னென்ன?
5. 32* ரன்கள் (2009):
2009 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் ரோகித் சர்மா டெக்கன் சார்ஜர்ஸ் அணிக்காக களமிறங்கி 362 ரன்கள் விளாசினார். அத்துடன் பந்துவீச்சில் ஒரு ஹாட்ரிக் உட்பட 11 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்தத் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான லீக் போட்டியில் டெக்கன் அணிக்கு கடைசி ஓவரில் 21 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது களத்தில் இருந்த ரோகித் சர்மா 2 சிக்சர் மற்றும் 2 பவுண்டரி அடித்து டெக்கன் அணியை வெற்றிப் பெற செய்தார். நெருக்கடியான சூழலில் எளிதாக அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார். இது அவரின் சிறப்பான ஆட்டங்களில் ஒன்றாக அமைந்தது.
4. 50* ஐபிஎல் இறுதிப் போட்டி(2015):
2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னை-மும்பை அணிகள் மோதின. இந்தப் போட்டியில் மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா 26 பந்துகளில் 50 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்தப் போட்டியை மும்பை இந்தியன்ஸ் அணி வெல்ல முக்கிய காரணமாக அமைந்தார். மேலும் 2ஆவது முறையாக மும்பை அணியை கோப்பைக்கு வழிநடத்தி சென்றார்.
3. 94(2018):
2018 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் மும்பை-பெங்களூரு அணிகள் மும்பை வான்கடே மைதானத்தில் மோதின. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய மும்பை அணிக்கு ரோகித் சர்மா சிறப்பான தொடக்கம் கொடுத்தார். இப்போட்டியில் இவர் 54 பந்துகளில் 94 ரன்கள் விளாசினார். அத்துடன் இந்தப் போட்டியில் மும்பை அணி வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்தார்.
2. 98*(2015):
2015ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய மும்பை கேப்டன் ரோகித் சர்மா 65 பந்துகளில் 95 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த ஆட்டத்தின் போது ஐபிஎல் தொடரில் 3000 ரன்களுக்கு மேல் கடந்த இரண்டாவது வீரர் என்ற சாதனையையும் படைத்தார். எனினும் இந்தப் போட்டியில் மும்பை அணி தோல்வி அடைந்தது.
1.109*(2012):
2012ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் ரோகித் சர்மா 17 போட்டிகளில் 433 ரன்கள் குவித்தார். இந்தத் தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா அணியின் பந்துவீச்சை திணறடித்தார். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித் சர்மா ஐபிஎல் வரலாற்றில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். இப்போட்டியில் 60 பந்துகளில் 109 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். தற்போது வரை ரோகித் சர்மா ஐபிஎல் தொடரில் அடித்த ஒரே சதம் இதுதான்.