தமிழ்த்திரையுலகம் தொடர்த்து திடீர் இழப்புகளை சந்தித்துவருகிறது. நடிகர் விவேக் மரணமடைந்த அதிர்ச்சியில் இருந்தே இன்னும் மீளாத திரையுலகம் அடுத்து இயக்குநர் கே.வி. ஆனந்தை இழந்திருக்கிறது.


இதழ் ஒன்றில் புகைப்படக் கலைஞராக தனது பயணத்தை தொடங்கிய கே.வி. ஆனந்த், சினிமாவுக்குள் ஒளிப்பதிவாளராக நுழைந்து பின்னர் இயக்குநராக மாறியவர்.  பிரித்விராஜ், ஶ்ரீகாந்த் நடித்த 'கனா கண்டேன்' எனும் படத்தை முதன்முதலாக இயக்கியவர் அதன் பிறகு தொடர்ந்து 'அயன்', 'மாற்றான்', 'காப்பான்' எனப் பல ஹிட்  படங்களை நடிகர் சூர்யாவை ஹீரோவாக வைத்து இயக்கினார். இயக்குனர் சங்கரை போன்றே தனது படங்களிலும் பிரமாண்டங்கள் சிறிதும் குறையாமல் பார்த்துக் கொண்டவர் கே.வி.ஆனந்த். 




கொரோனாவோ வேறு எந்த நோய் அறிகுறிகளும் இல்லாத நிலையில் கே.வி.ஆனந்துக்கு நேற்று நள்ளிரவில் அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டிருக்கிறது. வேறு யார் உதவியும் நாடாமல் உடனடியாக அவரே காரை ஓட்டிக்கொண்டு மருத்துவமனையில் போய் அட்மிட் ஆகியிருக்கிறார். ஆனால், அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும் அவரது உயிரை யாராலும் காப்பாற்றமுடியவில்லை. அதிகாலை 3 மணிக்கு  மாரடைப்பால் கே.வி.ஆனந்த் இறந்ததாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. 


தற்போது மருத்துவமனையில் இருக்கும் அவரது உடல், முறைப்படி குடும்பத்தாரிடம் காலை 9 மணிக்கு மேல் ஒப்படைக்கப்பட உள்ளது. அதன் பின்னர் அவரது இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு திரையுலகினரின் அஞ்சலிக்கு பின் இறுதிச்சடங்குகள் நடைபெற உள்ளன.