ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணியில் கே.எல்.ராகுல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 91 ரன்கள் குவித்ததால் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 179 ரன்கள் எடுத்தது.
இதனைத் தொடர்ந்து களமிறங்கிய பெங்களுரு அணியில் படிக்கல் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ராஜாட் பட்டிதார் கோலியுடன் ஜோடி சேர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். ஆட்டத்தின் 11ஆவது ஓவரில் விராட் கோலி ஹர்பிரீத் சிங் பிரார் இடம் விக்கெட்டை பறிகொடுத்தார். அத்துடன் அடுத்த பந்தில் பிரார் மேக்ஸ்வெல் விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தினார். அதை தொடர்ந்து அடுத்த ஓவரில் இவர் டிவில்லியர்ஸ் விக்கெட்டையும் எடுத்து பெங்களூரு அணியை திக்குமுக்காட வைத்தார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியின் மூன்று முக்கியமான வீரர்களை அவுட் செய்து பிரார் அசத்தினார். இதனைத் தொடர்ந்து வந்த வீரர்கள் பெரிதாக சொபிக்கவில்லை. பெங்களூரு அணி 20 ஓவர்களில் 145 ரன்கள் குவித்து 34 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியிடம் தோல்வியடைந்தது. இந்தப் போட்டியில் சிறப்பாக பந்துவீசிய ஹர்பிரீத் சிங் பிரார் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
இந்நிலையில் யார் இந்த ஹர்பிரீத் சிங் ? எவ்வாறு பஞ்சாப் கிங்ஸ் அணியில் இடம்பிடித்தார்?
பஞ்சாப் மாநிலத்தின் மோகா பகுதியில் பிறந்தவர் ஹர்பிரீத் சிங் பிரார். இவர் பஞ்சாபின் ரோபர் பகுதியில் தனது கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கினார். அங்கு நடைபெற்ற மாவட்ட அளவிலான உள்ளூர் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்தி வந்தார். எனினும் அங்கு சரியாக கிரிக்கெட் விளையாட்டில் இவரால் வளர முடியவில்லை. எனவே குர்கீரத் சிங் அளித்த அறிவுரையை ஏற்று இவர் மொஹாலிக்கு குடிபெயர்ந்து அங்கு தனது கிரிக்கெட் பயணத்தை தொடர்ந்துள்ளார்.
அதன்பின்னர் 23 வயதுக்குட்பட்டோருக்கான பஞ்சாப் அணியில் இவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனை சரியாக பயன்படுத்தி கொண்ட பிரார் 5 போட்டிகளில் 18 விக்கெட் சாய்த்தார். இதனைத் தொடர்ந்து இவருக்கு பஞ்சாப் மாநில அணியில் வாய்ப்பு கிடைத்தது. அதிலும் சிறப்பாக செயல்பட்டார். இந்தச் சூழலில் 2011ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஐபிஎல் தொடருக்கு முன்பு நடைபெறும் வீரர்கள் தகுதி தேர்வில் பங்கேற்று வந்தார். 8வருடங்களாக இவருக்கு ஐபிஎல் அணியில் சேர வாய்ப்பு கிடைக்கவில்லை.
2018ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதில் பஞ்சாப் கிங்ஸ் அணி 20 லட்ச ரூபாய்க்கு இவரை ஏலத்தில் எடுத்தது. 2019ஆம் ஆண்டில் 2 போட்டிகளில் இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதில் சரியாக விளையாடவில்லை. 2020ஆம் ஆண்டு தொடரில் ஒரு போட்டியில் இவர் களமிறங்கினார். அதிலும் இவரால் சிறப்பாக செயல்பட முடியவில்லை.
இந்தச் சூழலில் நேற்று நடைபெற்ற போட்டியில் 4ஆவது வாய்ப்பு கிடைத்தது. இதனை சிறப்பாக பயன்படுத்தி கொண்ட பிரார் கோலி,டிவில்லியர்ஸ்,மேக்ஸ்வெல் என மூன்று பெரிய விக்கெட்களை வீழ்த்தி அசத்தியுள்ளார். அவரின் விடா முயற்சிக்கு கிடைத்த வெற்றி இந்த மூன்று விக்கெட்டுகள் ஆகும். இவருடைய சிறப்பான பந்துவீச்சை பலரும் தங்களின் ட்விட்டர் பக்கத்தில் பாராட்டி வருகின்றனர்.