இந்திய அணியின் கேப்டனாக தோனி தலைமை வகித்த 2016-ம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமானவர் ஹர்திக் பாண்டியா. இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரராகவும், ஐபிஎல் போட்டியில் மும்பை அணியின் நம்பிக்கை நட்சத்திரமாகவும் விளங்கும் ஹர்திக், டி-20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற்றிருக்கிறார். இந்த உலகக்கோப்பையில் தோனி இந்திய அணியின் ஆலோசகராக செயல்பட்டு வரும் நிலையில், தோனி குறித்து ஹர்திக் பகிர்ந்த அனுபவங்கள் கிரிக்கெட் ரசிகர்களை உணர்ச்சிவசப்பட வைத்துள்ளது. 


இந்நிலையில், அவர் அளித்த பேட்டியில், ”என்னைப் பற்றி அவருக்கு நன்றாக தெரியும். நான் அவரோடு மிக நெருக்கம். அவரால் மட்டுமே என்னை சாந்தப்படுத்த முடியும். என்னுடைய கிரிக்கெட்டிங் கரியரில் ஏற்பட்ட எதிர்பாராத சம்வங்களின்போது எனக்கு ஒரு ஆதரவு வேண்டும் என்பதை உணர்ந்து என்னை வழிநடத்தியவர் அவர். மாஹி பாய் ஒரு ஆகச்சிறந்த கிரிக்கெட்டராக நான் பார்க்கவில்லை. அவர் என்னுடைய சகோதரர். எனக்கு தேவையான சமயங்களில் எனக்கு மாஹி பாய் துணை நின்றிருக்கிறார் என்பதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன், அதை மிகவும் மதிக்கிறேன்.


T-20 WC: ஒரே நாளில் 6 போட்டிகள்... என்ன நடந்தது நேற்று... 6 மேட்ச்... 60 நொடிகளில் விபரம்!


தொடக்கத்தில் இருந்தே என்னை மாஹி பாய் கவனித்து வருகிறார். நான் எப்படியான நபர், என்னுடைய நடவடிக்கைகள் எப்படி இருக்கும் என்பது அவருக்கு தெரியும். நியூசிலாந்தில் இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, எனக்கு அறை ஒதுக்கப்படவில்லை. அப்போது, திடீரென ஒரு அழைப்பு வந்தது. அதில், ‘ஹர்திக்கை என்னுடைய அறைக்கு வரச் சொல்லுங்கள். நான் மெத்தையில் உறங்க மாட்டேன். அவர் என்னுடைய மெத்தையில் உறங்கட்டும். நான் தரையில் உறங்கி கொள்வேன்’ என தெரிவிக்கப்பட்டது. இப்படி, எனக்காக எப்போதுமே மாஹி பாய் இருந்திருக்கிறார்” என ஹர்திக் பகிர்ந்திருக்கிறார்.


முன்னதாக, நேர்காணல் ஒன்றுக்கான படப்பிடிப்பில் ஹர்திக் இருந்தபோது அவரது மகன் அகஸ்தியா ‘உள்ளே’ புகுந்த வீடியோ வைரலாகி வருகின்றது. பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பதிவிட்டுள்ளது. படப்பிடிப்பு அறைக்குள் நுழைந்துவிட்ட குழந்தை அகஸ்தியா, கேமராவை பார்த்து கைநீட்ட, ஹர்திக் அது கேமரா என சொல்லி கொடுத்து கொஞ்சி கொண்டிருந்தார். அகஸ்தியாவின் வருகையில் படப்பிடிப்பு பாதியில் நிற்க, சிறிது நேரத்திற்கு பிறகு மீண்டும் நேர்காணலை தொடர்ந்துள்ளனர்.






ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண