விளையாட்டு மூலம் இந்தியா முழுவதும் ஒற்றுமையை பரப்ப வேண்டும் என்ற நோக்கத்தில் ஆண்டுதோறும் இந்தியா முழுவதும் விளையாடப்படும் பல்வேறு விளையாட்டுகளையும் ஒருங்கிணைத்து விளையாட்டுத் தொடராக நடத்தப்படுவது வழக்கம்.
தேசிய விளையாட்டுப் போட்டிகள் தொடராக நடத்தப்படும் இந்த தொடர் கடைசியாக 2015ம் ஆண்டு கேரளாவில் நடத்தப்பட்டது. அதன்பின்னர், பல்வேறு காரணங்களால் இந்த போட்டித் தொடர் நடத்தப்படாமலே இருந்தது. இந்த நிலையில், 7 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் தேசி விளையாட்டுப் போட்டிகள் தொடரை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்திய ஒலிம்பிக் கமிட்டி ஏற்கனவே தேசிய விளையாட்டு போட்டிகள் தொடர் குஜராத்தில் நடைபெறும் என்று அறிவித்திருந்தது.
இதன்படி, 36வது தேசிய விளையாட்டுப் போட்டிகள் தொடர் குஜராத்தில் இந்த மாதம் 29-ந் தேதி தொடங்க உள்ளது. இந்த போட்டித் தொடர் அடுத்த மாதம் 12-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான விழா கடந்த சில தினங்களுக்கு முன்பு குஜராத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் நடைபெற்றது. குஜராத்தில் நடைபெற உள்ள 36வது தேசிய விளையாட்டுப் போட்டிகள் தொடரில் மொத்தம் 37 வகை விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளது.
இந்த தொடரில், குத்துச்சண்டை, மல்யுத்தம், ஜூடோ, லாவ்ன் பவுல்ஸ், பேட்மிண்டன், ஜிம்னாஸ்டிக்ஸ், சைக்கிளிங், துப்பாக்கிச்சுடுதல், தடகளம், டேபிள் டென்னிஸ், டென்னிஸ், ஹாக்கி, கோகோ, ஸ்குவாஷ், வாலிபால், கபடி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட உள்ளது. இந்த போட்டிகள் குஜராத்தில் உள்ள அகமதாபாத், காந்திநகர், சூரத், வதோரா, ராஜ்கோட் மற்றும் பாவ்நகரில் நடைபெற உள்ளது.
மேலும் படிக்க : World Wrestling Championships 2022 : உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் இன்று தொடக்கம்! பதக்க வேட்டை நடத்துமா இந்தியா?