திருவாரூர் மாவட்டத்தில் நெல்சாகுபடிக்கு அடுத்தபடியாக பருத்தி சாகுபடியை விவசாயிகள் நம்பியுள்ளனர். பருத்திசாகுபடியானது திருவாரூர் மாவட்டத்தில் சம்பா அல்லது தாளடி அறுவடைக்குப் பின்னர் பருத்தியை ஜனவரி, பிப்ரவரி (தை, மாசி பட்டங்களில்) மாதங்களில் பயிரிடுவார்கள். பயிரிட்ட 100 நாட்களுக்குப் பின்னர் காய்ப்புக்கு வந்து சுமார் 5 சுற்றுகள் வரை பருத்தி பஞ்சு எடுக்கும் அளவுக்கு காய்ப்பு இருக்கும். சிலருக்கு 6 சுற்றுகள் வரை எடுக்க முடியும். திருவாரூர் மாவட்டத்தில் நிகழாண்டில் 41 ஆயிரத்து 49.5 ஏக்கர் பருத்தி சாகுபடி நடைபெற்றது.  அதன்படி, திருவாரூர் 3557.5 ஏக்கர், நன்னிலம் 8792.5, குடவாசல் 10937.5, வலங்கைமான் 113 4 5, மன்னார்குடி 2142, நீடாமங்கலம் 1380, கூத்தாநல்லூர் 2145  ஏக்கர், திருத்துறைப்பூண்டி 750 ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடியை விவசாயிகள் மேற்கொண்டனர். தொடக்க நிலையிலேயே அதிகபட்சமாக ரூ.12129, குறைந்த பட்சமாக ரூ.8419 வரை விலை கிடைத்தது. இது கடந்தாண்டைவிட சுமார் ரூ. 4 ஆயிரம் அதிகம் என்பதால் விவசாயிகள் அடுத்தடுத்த பருத்தி அறுவடையின்போது கூடுதலாக லாபம் கிடைக்கும் என்று விவசாயிகள் மகிழ்ச்சியுடன் எதிர்பார்த்திருந்தனர். இந்நிலையில், கடந்த ஜூலை 22ம் தேதி தொடங்கிய மழை நேற்று முன்தினம் வரை  அவ்வப்போது  பரவலாக மழை  பெய்துக்கொண்டேதான் இருந்தது. அதாவது ஜூலை மாதத்தில் மாவட்டத்தில் பெய்த சராசரி மழையளவு 25.45 மி.மீ, 23ம் தேதி 20.7 மி.மீ, 24ம் தேதி 9.06, 26ம் தேதி 12.77, 27ம் தேதி 50.06, 29ம் தேதி 5.13, 31ம் தேதி 14.78 மி.மீ, அதேபோல்  ஆகஸ்ட் 4ம் தேதி 25.66 மி.மீ, 19ம் தேதி 7.77 மி.மீ, 23ம் தேதி 34.21, 24ம் தேதி 49.22, 29ம் தேதி 30.18 மி.மீ, செப்டம்பர் 1ம் தேதி 17.44 மி.மீ மழை மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இதுதவிர அவ்வப்போது சாரல் மழை பெய்வதும், குளிர்ந்த சீதோஷ்ண நிலையும் இருந்துவந்தது. 




இவை அனைத்துமே, பருத்தி பயிருக்கு ஏற்றதல்ல. இதனால் இரண்டாவது சுற்றில் காய்த்திருந்த பருத்திக் காய்கள் முற்றிவிட்டாலும் காய்ந்து வெடிக்க முடியாமல் பருத்தி பஞ்சு எடுப்பதற்கான பக்குவத்துக்கு, காய்கள் வராமல் வெம்பிவிட்டன. இதனால் மகசூல் குறைந்துவிட்டது. இதுகுறித்து வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகளிடம் கேட்டபோது… கடந்தாண்டு மாவட்டம் முழுவதுமே சுமார் 15 ஆயிரம் ஏக்கர் மட்டுமே பருத்தி சாகுபடி நடைபெற்றாலும், இதே நாள் வரை (2021 செப்டம்பர் 5ம்தேதி)  4085 டன் பருத்தியை ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தின் மூலம் விவசாயிகள் விற்பனை செய்து பயனடைந்தனர். ஆனால் நிகழாண்டில் மாவட்டம் முழுவதும் சுமார் 41 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி நடைபெற்றது. விவசாயிகள் எதிர்பார்ப்பைவிட கூடுதல் விலையும் கிடைத்தது. ஆனாலும் இன்றைய தேதியில் சுமார் 5265 டன் மட்டுமே பருத்தி விற்பனைக்கு வந்துள்ளது. முதல் சுற்றைவிட 2வது சுற்றில் மழை காரணமாக பருத்தி பஞ்சு வரத்தும் வெகுவாக குறைந்துவிட்டது. உதாரணத்துக்கு முதல் சுற்றின்போது திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு சுமார் 4000 சாக்கு மூட்டைகளில் விற்பனைக்கு வந்த பருத்தி, 2வது சுற்றின்போது இதைவிட கூடுதலாக விற்பனைக்கு வரும் என எதிர்பார்த்தோம். ஆனால், 800 சாக்குகள் மூட்டைகள் மட்டுமே விற்னைக்கு வந்தது. இதே நிலைதான் மாவட்டம் முழுவதும் நீடிக்கிறது. இருப்பினும் ஒழுங்கு முறை விற்பனைக் கூடாமானது பருத்திகொள்முதலுக்காக வரும் அக்டோபர் முதல்வாரம் வரை திறந்து வைக்க  வாய்ப்புள்ளதாக தெரிவித்தனர். 




இதுபற்றி கானூர் விவசாயி அழகர்ராஜ், தேவங்குடி சசிக்குமார் கூறியதாவது, மழைகாரணமாக பருத்தி சாகுபடி இந்தாண்டு தோல்வியடைந்துவிட்டது. சுமார் 1 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான நிலப்பரப்பு கொண்ட திருவாரூர் மாவட்டத்தில் சுமார் 40 ஆயிரம் ஏக்கர் பரப்பில்தான் கோடைகாலத்தில் பருத்தி சாகுபடி செய்கின்றோம். கோடைகாலத்தில் தரிசு நிலமாக மற்ற நிலங்கள் கிடக்கும்போது, எங்களது பருத்தி வயல் மட்டும் அங்கொன்றும் இங்கொன்றுமாக சாகுபடி நடைபெறும். அதனால் தரிசு நிலத்தில் மேய்ந்து வருகின்ற கால்நடைகளிலிருந்து பருத்திச்செடியை பாதுகாக்க வேலி அமைத்தல் போன்ற பணிகளுக்காக பெருந்தொகை செலவிடுவோம். அந்த செலவை முதல் சுற்று பருத்தி விற்பனை ஈடுகட்டும். தொடர்ந்து 2வது சுற்று பருத்தி எடுப்பது தொடங்கிதான் எங்களது லாபம் கிடைக்கும். தொடர்ந்து 6 சுற்றுவரை பருத்தி எடுக்க முடியும். இது அனைத்துமே எங்களது லாபம்தான். இந்தாண்டு கூடுதலாக பருத்திக்கு விலை கிடைத்தநிலையில்  மகிழ்ச்சியும், எதிர்பார்ப்பும் எங்களுக்கு இருந்தது. அதனை மழை பெய்து கெடுத்துவிட்டது. பருத்தி பயிர் இனி தேராது. அதனை அழித்துவிட்டு சம்பா பயிரிட வேண்டியதுதான் என்றார்.