தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் ரூபா குருநாத் மீது ஆதாயத்துடன் செயல்பட்டதாக இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நெறிமுறைகள் கண்காணிக்கும் அதிகாரி குற்றம் சுமத்தியுள்ளார். முன்னாள் ஐசிசி, இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் ஸ்ரீனிவாசனின் மகள் ரூபா குருநாத். இவர் தற்போது தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நெறிமுறைகளை கண்காணிக்கும் அதிகாரியாக உள்ள ஓய்வுபெற்ற நீதிபதி DK ஜெயின் ஆதாயத்துடன் ரூபா குருநாத் செயல்பட்டுள்ளார் என்று குற்றம் சுமத்தி உத்தரவு பிறப்பித்துள்ளார்.


ரூபா குருநாத் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் முழு நேர நிர்வாக இயக்குனராக பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில் அவரின் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் மறைமுகமாக சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெட்டுடன் நெருங்கிய தொடர்பு வைத்துக்கொண்டு ஆதாயம் அடைந்துள்ளது என்பதே ரூபா குருநாத் மீதான குற்றமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. 13 பக்க உத்தரவில் "சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெட், இந்தியா சிமெண்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் ஒரு பகுதியாக உள்ளது" என நீதிபதி ஜெயின் குறிப்பிட்டுள்ளார். ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெட் தான் நிர்வகிக்கிறது.


DK ஜெயின் வெளியிட்டுள்ள உத்தரவில் "இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் என்ற ஒரு குடையின் கீழ், சென்னை சூப்பர் கிங்ஸ் நேரடியாகவும் மறைமுகமாகவும் நிர்வகிக்கப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ், இந்திய சிமெண்ட்ஸ் ஒரே அலுவலகத்தில் இருந்து இயக்கியுள்ளன. 


இந்திய கிரிக்கெட் வாரியத்தின் விதிகளின் படி, பிசிசிஐ நிர்வாகத்தின் கீழ் உள்ள ஏதேனும் ஒரு பொறுப்பில் உள்ள நபர் (தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர்) தனக்கு நெருங்கிய நிர்வாகத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்வது, ( conflict of interest ) ஆதாயத்துடன் செயல்பட்டதற்கான குற்றமாகும். அந்த வகையில் இந்தியா சிமெண்ட்ஸ் நிர்வாக இயக்குனர் ரூபா குருநாத் மிக நெருங்கிய தொடர்பை சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெட் நிர்வாகத்துடன் வைத்துள்ளார்.


மேலும் அறிய : ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் : அடுத்தது என்ன ? பிசிசிஐ தீவிரம்!


இது போன்று 21 விவரங்களை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ள ஜெயின் "நெறிமுறை கண்காணிப்பு அதிகாரி என்ற முறையில் ஆதாயத்துடன் ரூபா குருநாத் செயல்பட்டுள்ளார் என்பதை உறுதி செய்கிறேன்" என தெரிவித்துள்ளார்.


இது குறித்து உரிய விளக்கம் அளிக்க ரூபா குருநாத் தவறும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளார். DK ஜெயின் ஒப்பந்தம் வரும் ஜூன் 7ம் தேதியுடன் நிறைவடையும் நிலையில், பிசிசிஐ ஒப்பந்தத்தை புதுப்பிக்குமா, தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் பொறுப்பிலிருந்து பதவி இறங்க செய்யுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் மிக விரைவில் இது குறித்து மேல் முறையீடு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.