ஆட்சி என்பது மாறி மாறி வரும், அதற்காக முந்தைய ஆட்சியில் கொண்டு வந்த சட்டத்தை மாற்ற வேண்டாம் என, விழுப்புரம் ஜெயலலிதா பல்கலைக்கழகம் தொடர்பான வழக்கில் தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு அறிவுறுத்தியுள்ளது.
முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தொடர்ந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு முன்பு விசாரணைக்கு வந்தபோது, ஜெயலலிதா பல்கலைகழகத்தின் அதிகார வரம்பு பகுதியில் முதுகலை படிப்புகளுக்கு வெளியிடப்பட்ட அறிவிப்பு மற்றும் வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் அறிவிப்பையும் ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில், ஜெயலலிதா பல்கலைக்கழகம் அமைக்க பிறப்பிக்கப்பட்ட சட்டத்தை ரத்து செய்ய அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று கூறிய தலைமை நீதிபதி அமர்வு, அதுவரை சட்டவிதிகளை பின்பற்ற வேண்டும் என கூறி வழக்கை முடித்து வைத்து. அதேநேரத்தில், ஆட்சி என்பது மாறி மாறி வரும், அதற்காக முந்தைய ஆட்சியில் கொண்டு வந்த சட்டத்தை மாற்றாதீர். முந்தைய ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சட்டத்தை அரசு பின்பற்ற வேண்டும் என்று அரசு அறிவுறுத்தினர்.
ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை செயல்படுத்தக்கோரி சி.வி.சண்முகம் தொடர்ந்த வழக்கு:
விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாட்டங்களைச் சேர்ந்த மாணவர்களின் நலனுக்காக அதிமுக் ஆட்சிக் காலத்தில் விழுப்புரத்தை தலைமையிடமாகக் கொண்டு டாக்டர் ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை மூட முயற்சிகள் நடப்பதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறிவந்தார். இந்நிலையில் டாக்டர் ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகத்திற்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்யவும், பதிவாளரை நியமிக்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், “விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்ட மாணவர்களின் நலனுக்காக, வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தைப் பிரித்து, விழுப்புரத்தைத் தலையிடமாகக் கொண்டு டாக்டர்.ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது. துணைவேந்தர் நியமிக்கப்பட்டு, பல்கலைக்கழக கட்டுமானத்திற்காக விழுப்புரம் மாவட்டம், செம்மேடு கிராமத்தில், 70 ஏக்கர் நிலம் அதிமுக அரசால் ஒத்துக்கப்பட்டது. நிலம் ஒதுக்கப்பட்ட நிலையில் தற்போதைய அரசின் புறக்கணிப்பால் பல்கலைக்கழகம் இன்னும் பழைய தாலுக்கா அலுவலகத்தில் செயல்படுகிறது. இதுவரை பல்கலைக்கழகத்திற்குப் பதிவாளரும், போதுமான பணியாளர்களும் நியமிக்கப்படாததால், பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் பதிவாளர், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அதன் முதுகலை மையத்தில் முதுகலைப் படிப்பில் சேர விண்ணப்பங்களை வரவேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது சட்டத்தை மீறிய செயல். அந்த அறிவுப்புக்குத் தடை விதிக்கவேண்டும்” என மனுவில் கோரியிருந்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற