சூர்யா, விஜய் சேதுபதி, சித்தார்த் , அதர்வா , ரேவதி உள்ளிட்ட பல முக்கிய மற்றும் முன்னணி நடிகர்களின் நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் ஆந்தாலஜி வெப் தொடர் ‘நவரசா’. இந்த வெப் தொடரை மணிரத்தினம் மற்றும் ஜெயேந்திரா பஞ்சாபகேசன் இணைந்து தயாரித்துள்ளனர். மனிதனின் ஒன்பது குணங்களை வெளிப்படுத்தும் விதமாக , காதல், கோவம், நகைச்சுவை உள்ளிட்ட 9 குறும்படங்களின் தொகுப்பாக வெளியாகியுள்ளது நவரசா. இந்த ஆந்தாலஜி தொடரை  கெளதம் மேனன், அரவிந்த்சாமி, பிரியதர்ஷன், கார்த்திக் நரேன், வஸந்த் சாய், கார்த்திக் சுப்புராஜ், பிஜோய் நம்பியார், சர்ஜூன், ரதீந்திரன் பிரசாத் என 9 இயக்குநர்கள் இயக்கியிருந்தனர். மேலும் ஒவ்வொரு ரசத்திற்கும் ஏற்ற மாதிரியான இசைகளை வழங்க ஏ.ஆர்.ரஹ்மான், டி.இமான், ஜிப்ரான், அருள்தேவ், கார்த்திக் உள்ளிட்ட 9 இசையமைப்பாளர்கள் களம் இறங்கியுள்ளனர்.






படம் இன்று வெளியாகியுள்ள சூழலில், படத்தின் புரமோஷன் வேலைகளை தடபுடலாக செய்து வருகின்றனர் நவரசா குழுவினர். குறிப்பாக  உலகின் மிக உயரமான கட்டிடம் என அழைக்கப்படும் புர்ஜ் கலிஃபாவிலும் நவரசா படத்தின் டைட்டில் விளம்பரங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி  பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இவ்வளவு செலவு செய்து புர்ஜ் கலிபா கட்டிடத்தில் விளம்பரம் செய்வதற்கு பதிலாக அந்த பணத்தை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கலாமே என பலரும் சர்ச்சையான கேள்விகளை முன்வைத்து வருகின்றனர். முன்னதாக ஆந்தாலஜி தொடரில் பணிபுரிந்த எந்தவொரு கலைஞரும் சம்பளம் பெறவில்லை என கூறப்படுகிறது. காரணம் கொரோனா முதல் அலையில் பாதிக்கப்பட்ட திரைத்துறையினருக்கு பூமிகா என்ற அறக்கட்டளை மூலம்  நிதி திரட்டவே இந்த ஆந்தாலஜி உருவாக்கப்பட்டதாக படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.இந்நிலையில்  இவ்வளவு செலவு செய்து புரமோஷன் செய்வதற்கான காரணம் என்ன என்பது குறித்தும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆந்தாலஜியில் இடம்பெற்ற 9 படங்கள் குறித்த விவரங்கள்:


1. ’கிட்டார் கம்பி மேல நின்று ’  


காதலை மையமாக வைத்து இயக்கப்பட்டுள்ள குறும்படத்திற்கு ’கிட்டார் கம்பி மேல நின்று ’ என பெயர் வைத்துள்ளனர். இதனை கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ளார். சூர்யா கதாநாயகனாகவும், ப்ரக்யா கதாநாயகியாவும் நடித்துள்ளனர்.


2. ’எதிரி' 


கருணையை அடிப்படையாக  வைத்து உருவாக்கப்பட்ட கதைக்கு ’எதிரி’ என பெயரிட்டுள்ளனர். இதனை பிஜாய் நம்பியார் இயக்கியுள்ளார். படத்தில் விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ், அசோக் செல்வன், ரேவதி உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர்.


3.’ரௌத்திரம்' 


கோபத்தை மையப்படுத்திய கதைக்கு ’ரௌத்திரம் ’என பெயரிடப்பட்டுள்ளது. அரவிந்த் சாமி இயக்கத்தில் ரித்விகா, ஸ்ரீராம், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


4.  'பாயசம்' 


அருவருப்பை மையப்படுத்தி உருவாகியுள்ள படத்தை வஸந்த் சாய் இயக்கியுள்ளார். இதற்கு 'பாயசம்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் டெல்லி கணேஷ், ரோகினி, அதிதி பாலன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


5.'துணிந்த பின்'  


துணிவை  மையப்படுத்தி உருவாகியுள்ள கதைக்கு . 'துணிந்த பின்' எனப் பெயரிடப்பட்டுள்து . இந்தப்  குறும்படத்தில் அதர்வா, அஞ்சலி, கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதை  சர்ஜுன் இயக்கியுள்ளார். 


6.'இன்மை'


பயத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள தொகுப்பை ரதீந்திரன் பிரசாத் இயக்கியுள்ளார். இதற்கு 'இன்மை' எனப் பெயரிடப்பட்டுள்ளது . இதில் சித்தார்த், பார்வதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


7. ‘பீஸ்’ 


அமைதியை மையாக வைத்து எடுக்கப்பட்டுள்ள பகுதிக்கு ‘பீஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது. இதை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இதில் இயக்குநர்  கெளதம் வாசுதேவ் மேனன், பாபி சிம்ஹா, சனந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


8.'ப்ராஜெக்ட் அக்னி' 


ஆச்சரியத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த பகுதியை கார்த்திக் நரேன் இயக்கியுள்ளார்.  இந்தப் படத்தில் அரவிந்த் சாமி, பிரசன்னா, பூர்ணா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


9. 'சம்மர் ஆஃப் 92' 


முழுக்க முழுக்க காமெடி கதைக்களம் கொண்ட இந்த குறும்படத்தை பிரியதர்ஷன் இயக்கியுள்ளார்.  இந்த பகுதியில் யோகி பாபு, ரம்யா நம்பீசன், நெடுமுடி வேணு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.