இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து சுற்றுப் பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என முன்னிலை பெற்றுள்ளது. கடைசியாக நடைபெற்ற நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் வென்று அசத்தியது. அந்தப் போட்டியில் இரு இன்னிங்ஸிலும் சேர்த்து இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் 14 விக்கெட் வீழ்த்தியிருந்தனர். 

சுழற்பந்துவீச்சுக்கு பெயர் போன இந்திய அணி வேகப்பந்துவீச்சிற்கு சாதகமாக எப்படி மாறியது? 

இந்திய கிரிக்கெட் அணி என்றாலே அனைவரின் நியாபகத்திற்கு வருவது சுழற்பந்துவீச்சாளர்கள் தான். ஏரப்பள்ளி பிரசன்னா, எஸ் வெங்கட்ராகவன்,சந்திரசேகர் மற்றும் பிஷன் சிங் பேடி, அனில் கும்ப்ளே,ஹர்பஜன் சிங், ரவிச்சந்திரன் அஸ்வின் போன்ற சுழற்பந்துவீச்சாளர்கள் தான் அதிகம் பேசப்படுவார்கள். குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஆசிய அணிகள் எப்போதும் சுழற்பந்துவீச்சுக்கு பெயர் போன அணிகள் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அப்படி இருக்கும் பட்சத்தில் இந்தியாவில் அவப்போது சில வேகப்பந்துவீச்சாளர்களும் முத்திரை பதித்துள்ளனர். கபில்தேவ், சேத்தன் சர்மா, மோகிந்தர் அமர்நாத்,ஜவகல் ஶ்ரீனாத்,ஜாகீர் கான், அஜித் அகர்கர் உள்ளிட்ட சிலர் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தியுள்ளனர். 


இவர்கள் அனைவரும் தங்களுடைய காலங்களில் பெரும்பாலும் தனியாக வேகப்பந்துவீச்சில் பிரகாசித்தவர்கள். ஆனால் அவர்களுக்கு சற்றும் மாறுபட்டு உள்ளது தான் தற்போதைய இந்திய அணி. காரணம் தற்போது இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் கூட்டணி ஒரு சிறப்பான கூட்டணியாக அமைந்துள்ளது. விராட் கோலி 2014ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய தொடரின் பாதியில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக பொறுப்பு ஏற்றார். அதன்பின்னர் இந்திய அணி உள்ளூர் டெஸ்ட் தொடரில் சிறப்பான வெற்றிகளை பெற்று வந்தது. 

அந்தசமயத்தில் வெளிநாட்டு டெஸ்ட் தொடர்களில் இந்தியா எப்படியும் தோல்வி அடைந்துவிடும் என்று அனைவரும் விமர்சனம் செய்தனர். குறிப்பாக கோலி இந்திய அணி கேப்டனாக பொறுப்பு ஏற்றவுடன் 2018ஆம் மிகவும் முக்கியமான ஆண்டாக கருதப்பட்டது. ஏனென்றால் அந்த ஒரே ஆண்டில் இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்கா,இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய மூன்று நாடுகளில் டெஸ்ட் தொடர்களில் பங்கேற்றது. அந்த தொடர்களுக்கு முன்பாக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, “வெளிநாடுகளில் நாங்கள் டெஸ்ட் போட்டியை வெல்ல வேண்டும் என்றால் எங்களுடைய பந்துவீச்சாளர்கள் 20 விக்கெட் எடுக்க வேண்டும்” எனக் கூறியிருந்தார். 

2018ல் முதல் இந்திய வேகப்பந்து வீச்சு: 

அதன்படி 2018ஆம் ஆண்டில் முதலாவதாக இந்திய அணி தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் செய்தது. 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட அந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி மூன்று போட்டிகளிலும் தென்னாப்பிரிக்க அணியை இரண்டு இன்னிங்ஸிலும் ஆல் அவுட் செய்தது. அதில் சிறப்பு அம்சம் என்னவென்றால் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டும் 50 விக்கெட் வீழ்த்தியிருந்தனர். அதைவிட இன்னொரு சிறப்பம்சமாக ஜோகானஸ்பேர்க் போட்டியை இந்திய அணி வென்றது. அந்தப் போட்டியில் இந்திய அணியில் ஒரு சுழற்பந்துவீச்சாளர் கூட இல்லை. அந்தத் தொடரில் பும்ரா இஷாந்த் சர்மா, ஷமி ஆகிய மூவரும் 37 விக்கெட் வீழ்த்தியிருந்தனர். 

பும்ரா,இஷாந்த்,ஷமி இணைந்து எடுத்த விக்கெட்கள்:

டெஸ்ட் தொடர்  மூவர் எடுத்த விக்கெட்கள் 
தென்னாப்பிரிக்கா 2018 37
இங்கிலாந்து 2018 48
ஆஸ்திரேலியா 2018-19 48
நியூசிலாந்து 2020 16

இதைத் தொடர்ந்து இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்த இந்திய அணி அங்கு டெஸ்ட் தொடரை 4-1 என்ற கணக்கில் இழந்தது. தொடரை  இந்திய அணி இழந்து இருந்தாலும்  வேகப்பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். குறிப்பாக பும்ரா,ஷமி மற்றும் இஷாந்த் சர்மா ஆகிய மூவரும் 48 விக்கெட் வீழ்த்தி அசத்தியிருந்தனர். அதைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் செய்த இந்திய அணி அந்த தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது. அந்தத் தொடரில் இந்திய வெற்றிக்கு வித்திட்டதும் வேகப்பந்து வீச்சு தான். அதில் பும்ரா,இஷாந்த்,ஷமி ஆகிய மூவரும் சேர்ந்து 48 விக்கெட் வீழ்த்தி அசத்தியிருந்தனர். 

இதைத் தொடர்ந்து 2020ஆம் ஆண்டு மீண்டும் இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அதில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இழந்தது. இந்தத் தொடரில் இந்தியாவின் பும்ரா,ஷமி மற்றும் இஷாந்த் சர்மா ஆகிய மூவரும் 16 விக்கெட்கள் எடுத்தனர். இந்தியாவின் திடீர் மாற்றத்திற்கு காரணம் வேகப்பந்துவீச்சில் புதிய பந்தில் இஷாந்த் சர்மா விக்கெட் வீழ்த்துவதும், இரண்டாவது இன்னிங்ஸ் என்றால் ஷமி தனது அசாத்திய விக்கெட் வேட்டையை காட்டுவதும், இவர்கள் இருவருக்கும் பக்க பலமாக பும்ரா புதிய மற்றும் பழைய பந்துகளில் விக்கெட் வீழ்த்துவதுமாக அமைந்தது. 


பும்ராவின் டெஸ்ட் பந்துவீச்சு:

இந்திய வேக்கப்பந்து வீச்சாளர்கள் முக்கியமானவரான ஜஸ்பிரீத் பும்ரா 2018ல் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகினார். அப்போது முதல் தற்போது வரை 24 போட்டிகளில் பங்கேற்று உள்ள பும்ரா 101 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். அதில் குறிப்பாக ஆஸ்திரேலியா,இங்கிலாந்து,நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் மட்டும் இவர் 88 விக்கெட் வீழ்த்தியுள்ளார். 

அந்நிய நாடு பும்ரா எடுத்த டெஸ்ட் விக்கெட்கள்
ஆஸ்திரேலியா 32
இங்கிலாந்து 36
நியூசிலாந்து  6
தென்னாப்பிரிக்கா 14

புதுமுகங்களின் வருகை:

அதன்பின்னர் ஆண்டின் இறுதியில் இந்திய அணி மீண்டும் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அதில் முகமது ஷமி காயம் காரணமாக இரண்டாவது டெஸ்ட் உடன் விலகினார். அதேபோல் காயம் காரணமாக இஷாந்த் சர்மாவும் பங்கேற்கவில்லை. ஆனால் பும்ரா மட்டும் இருந்தார். அவர் 11 விக்கெட் வீழ்த்தினார். மாற்று வேகப்பந்து வீச்சாளர்களாக களமிறங்கிய சிராஜ் 13 விக்கெட் வீழ்த்தினார். அதேபோல் ஷர்துல் தாகூர் 7 விக்கெட் வீழ்த்தினார். உமேஷ் யாதவ் மற்றும் செய்னி ஆகிய இருவரும் தலா 4 விக்கெட் வீழ்த்தினர். 


அப்போது முதல் தற்போது வரை முகமது ஷமி,பும்ரா,இஷாந்த் சர்மா ஆகிய மூவருக்கும் போட்டியாக வந்துள்ள சிராஜ் 9 டெஸ்டில் 30 விக்கெட் வீழ்த்தியுள்ளார். மேலும் ஆல்ரவுண்டராக ஜொலிக்க தொடங்கியுள்ள ஷர்துல் தாகூர் 4 டெஸ்டில் 14 விக்கெட் வீழ்த்தியுள்ளார். ஆகவே பும்ரா,ஷமி மற்றும் இஷாந்திற்கு போட்டியாக வந்துள்ள வேகப்பந்துவீச்சாளர்களும் சிறப்பாக பந்துவீசி வருவதால் இந்திய அணி வேகப்பந்துவீச்சிற்கு சாதகமான அணியாக மாறியுள்ளது. அத்துடன் இந்தியாவின் தலைச்சிறந்த சுழற்பந்துவீச்சாளர் அஸ்வினை இந்திய அணி 4 டெஸ்ட் போட்டிகளிலும் களமிறக்கவில்லை. ஆகவே முக்கியமான சுழற்பந்துவீச்சாளர் இல்லாமல் இந்திய அணி கிட்டதட்ட 2 போட்டிகளில் வெற்றி கண்டுள்ளது. அதுவும் சிறப்பான ஒன்றாக அமைந்துள்ளது. 

மேலும் படிக்க:நீலாம்பரியாக மாறிய இங்கி., கிரிக்கெட் போர்டு: தோற்ற வீடியோவை பதிவிட்டு ரிபீட் வாட்சிங்!