பாரீஸ் நகரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பிரெஞ்ச் ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ஜெர்மனியின் யுவோன் லியிடம் தோல்வியடைந்து இந்திய வீராங்கனை சாய்னா நேவால் வெளியேறினார்.
பிரெஞ்சு ஓபன்
பிரெஞ்சு ஓபன் பேட்மிட்டன் போட்டிகள் பாரிஸ் நகரில் நேற்று துவங்கி நடைபெற்று வருகிறது. இந்தியர்கள் தொடர்ச்சியாக ஏமாற்றம் அளித்து வந்த நிலையில், இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை மீது நம்பிக்கையோ வைத்திருந்தனர் ரசிகர்கள். ஆனால் அவரும் தற்போது தோல்வியுற்று மகளிர் ஒற்றையர் பிரிவில் இருந்து வெளியேறி உள்ளார். முதல் செட்டை வலுவாக துவங்கிய சாய்னா அதன் பிறகு ஆட்டத்தை விட்டதால், அவர் 21-13, 17-21, 19-21 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார். முதல் செட்டில் ஆதிக்கம் செலுத்திய சாய்னாவை அடுத்த செட்டில் போராடி தோற்கடித்தார் யுவோன் லி. அதன் பிறகு இந்திய வீராங்கனை சாய்னா இறுதி ஆட்டத்தில் 19-21 என்ற கணக்கில் மீண்டும் போராடி தோல்வியடைந்தார். இந்த தோல்வியின் மூலம் சாய்னா நேவால் பிரெஞ்சு ஓபனின் மகளிர் ஒற்றையர் பிரிவில் இருந்து வெளியேறி உள்ளார்.
ரங்கிரெட்டி - சிராக் ஷெட்டி ஜோடி
முன்னதாக, நேற்று துவங்கி நடைபெற்று வரும் பிரெஞ்ச் ஓபன் 2022ல், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பாட்மிண்டன் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி, வெற்றி பெற்று 16-வது சுற்றுக்கு முன்னேறியது. 19-21, 21-9, 21-13 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது. இவர்கள் மட்டுமே இதுவரை நடைபெற்ற இந்திய அணி வீரர்களுக்கான போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளனர்.
ட்ரீசா ஜாலி - காயத்ரி கோபிசந்த் ஜோடி
முன்னதாக, இந்திய மகளிர் இரட்டையர் ஜோடியான ட்ரீசா ஜாலி மற்றும் காயத்ரி கோபிசந்த் ஜோடி, நடந்து வரும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றிலேயே தாய்லாந்தின் ஜோங்கோல்பன் கிடிதரகுல் மற்றும் ரவிந்தா பிரஜோங்ஜாய் ஜோடியிடம் தோல்வியடைந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது. இருவரும் 21-23, 20-22 என்ற நேர் செட் கணக்கில் தாய்லாந்து அணியிடம் தோல்வியை சந்தித்தனர். ஜாலியும் கோபிசந்தும் கடைசி வரை போராடியும் இரண்டு செட்டையும் நேர் செட்டில் இழந்தனர்.
இஷான் பட்நாகர் - தனிஷா க்ராஸ்டோ ஜோடி
மேலும் கலப்பு இரட்டையர் பிரிவில், இந்திய ஜோடியான இஷான் பட்நாகர் மற்றும் தனிஷா க்ராஸ்டோ ஜோடியும் ஜப்பானின் கியோஹெய் யமாஷிதா மற்றும் நரு ஷினோயா ஜோடியிடம் தோல்வியடைந்து முதல் சுற்றிலேயே போட்டியிலிருந்து வெளியேறியது. பட்நாகர் மற்றும் க்ராஸ்டோ 13-21, 16-21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்தனர். ஒற்றையர் பிரிவில் வெளியேறி இருந்தாலும், இன்று இரவு நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் கலப்பு இரட்டையர் பிரிவில் களமிறங்குகிறார். பிரெஞ்சு ஓபன் 2022 அக்டோபர் 25 அன்று பாரிஸில் தொடங்கி அக்டோபர் 30 வரை நடைபெறுகிறது.