பாகிஸ்தானுக்கு எதிரான டி20 உலகக்கோப்பைப் போட்டியில் கடைசி ஓவர் வரை சீட் நுணியில் அமர வைத்து பார்வையாளர்களுக்கு ஹார்ட் பீட் எகிர வைத்து வெற்றியைத் தேடிக்கொடுத்துள்ளது இந்திய அணி. விராட்கோலி, ஹர்திக் பாண்டியா பார்ட்னர்ஷிப்பில் கடைசி சில ஓவர்கள் வரை ரன்களைக் குவித்த இந்திய அணி மிகக் குறைவான ரன்களே எடுக்க வேண்டிய நிலையில் கடைசி ஓவரில் முக்கிய ஆட்டக்காரரான தினேஷ் கார்த்திக் விக்கெட்டை பறிகொடுத்தது. மறுமுனையில் இருந்த அஸ்வின் சாதுர்யமாக விளையாடி வெற்றிக்கான இறுதி ரன்னை எடுத்தார். இதுகுறித்து ஓபனாகப் பேசியுள்ள தினேஷ் கார்த்திக், “தேங்ஸ்டா..என்னுடைய மானத்தைக் காப்பாத்திட்ட” எனக் கூறியுள்ளார். அதற்கு பதிலளிக்கும் விதமாக கலாய்க்கும் தொனியில் அஸ்வின், “இவர் இப்படிதான் கருத்தா பேசுவாப்ல” எனக் கூறியிருந்தார். 






”ஒருவேளை நாம் தோற்றிருந்தால் ரன் அடிக்காமல் நான் தான் வாய்ப்பைத் தவறவிட்டதாகச் சொல்லுவார்கள். ஆனால் அதிலிருந்துஅஸ்வின் என்னைக் காப்பாற்றி விட்டார்” என தினேஷ் கார்த்திக் அஸ்வினை ஓபனாகப் பாராட்டியதை கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் ரசித்து வருகின்றனர்.  அஸ்வின் கடைசி பாலை வைட் ஆக்கி ரன் எடுத்துக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


 


ஞாயிற்றுக்கிழமை நடந்த 2022 டி20 உலகக் கோப்பை தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக நான்கு விக்கெட் வித்தியாசத்தில் பரபரப்பான வெற்றியை பதிவு செய்த இந்திய அணி உலகக்கப்பையில் ஒரு மறக்கமுடியாத தொடக்கத்தை தந்துள்ளது. மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் இந்தியாவின் ஸ்டார் பேட்ஸ்மேன் விராட் கோலி அதிரடி காட்டி 82 ரன்கள் குவித்து அணியை வெற்றிக்கு வழி நடத்தி சென்று அனைவரையும் கவர்ந்தார்.


மேலும், புவனேஷ்வர் குமார் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் கொடுத்த அட்டகாசமான பவுலிங் துவக்கமும் வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களை பவர்பிளேக்குள் ஆட்டமிழக்கச் செய்து இந்திய அணிக்கு பாசிட்டிவ் எனர்ஜி கொடுத்தனர். அக்டோபர் 23ம் தேதியன்று மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 159/8 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஷான் மசூட் 52* ரன்களும் இப்திகார் அகமது 51 ரன்களும் எடுத்தனர்.


 


160 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா, ராகுல், சூரியகுமார் என 3 துருப்பு சீட்டு வீரர்கள் ஆரம்பத்திலேயே சொற்ப ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுக்க, ஹர்திக் பாண்டியா - விராட் கோலி இணைந்து 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் உருவாக்கி பாகிஸ்தான் பவுலர்களை திக்குமுக்காட வைத்தனர். ஆட்டம் பெண்டுலம் முள் போல இருபுறமும் மாறி மாறி ஆட, கடைசியில் இந்திய அணி தனது குழு முயற்சியால் வென்றது.