கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் முக்கியமான தொடர்களில் ஒன்று பிரஞ்சு ஓபன். இந்தத் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவின் காலிறுதிச் சுற்று நேற்று நடைபெற்றது. அதில் உலக தரவரிசையில் முதல் நிலை வீரரான நோவக் ஜோகோவிச்சை 5ஆம் இடத்திலுள்ள ரஃபேல் நடால் எதிர்த்து விளையாடினார். இரு பெரும் ஜாம்பவான்கள் காலிறுதியில் மோதியதால் யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்தது. 


இந்தப் போட்டி தொடக்கம் முதலே மிகவும் விறுவிறுப்பாக இருந்தது. முதல் செட்டை 6-2 என்ற கணக்கில் வென்றார். அதன்பின்னர் சுதாரித்து கொண்டு ஆடிய ஜோகோவிச் இரண்டாவது செட்டை 6-4 என வென்றார். மூன்றாவது செட்டில் மீண்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நடால் 6-2 என்ற கணக்கில் வென்றார். நான்காவது செட்டை வென்றால் அவர் போட்டியை வென்றுவிடலாம் என இருந்தது. 






அப்போது நான்காவது செட்டில் நோவக் ஜோகோவிச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அந்த செட்டில் இரு வீரர்களும் 6-6 என்று சமமாக இருந்தனர். இதனால் டைபிரேக்கருக்கு சென்றது. அதில் அசத்திய நடால் 7-6 என நான்காவது செட்டை வென்றார். அத்துடன் 6-2,4-6,6-2,7-6 என்ற கணக்கில் நோவக் ஜோகோவிச்சை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறி அசத்தினார். இதன்மூலம் 13 முறை பிரஞ்சு ஓபன் பட்டத்தை வென்றுள்ள நடால் 15வது முறையாக அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார். 


2021ஆம் ஆண்டு பிரஞ்சு ஓபன் தொடரின் இறுதிப் போட்டியில் ஜோகோவிச் இடம் அடைந்த தோல்விக்கு தற்போது நடால் பழி வாங்கியுள்ளார். இந்தத் தோல்வியின் மூலம் நடப்புச் சாம்பியனான ஜோகோவிச் காலிறுதி சுற்றுடன் வெளியேறியுள்ளார். ஆடவர் ஒற்றையர் பிரிவில் தற்போது 21 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை நடால் வென்று முதலிடத்தில் உள்ளார். வரும் வெள்ளிக்கிழமை தன்னுடைய 36வது பிறந்தநாளை கொண்டாட உள்ள நடால் 22வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்வாரா என்பதை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும். அவருடைய பிறந்த நாள் அன்று நடைபெறும் அரையிறுதி போட்டியில் ஜெர்மனி வீரர் ஸ்வெரவை எதிர்த்து நடால் விளையாட உள்ளார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண