"அதிமுகதான் பிரதான எதிர்க்கட்சி என்பதை ஐடி விங் நிரூபிக்கவேண்டும் என்று முன்னாள் அமைச்சரும் அதிமுக அமைப்பு செயலாளருமான பொன்னையன் பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார்.


புரட்சித்தலைவி அம்மா பேரவை அணி செயலாளர் ஆர்.பி.உதயகுமார் ஏற்பாட்டில், பேரவை நிர்வாகிகளுக்கு செயல்திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் ராயப்பேட்டை அஇஅதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த பயிற்சி முகாமின் இரண்டாம் நாளான இன்று அஇஅதிமுக மூத்த தலைவரும் அக்கட்சியின் அமைப்பு செயலாளருமான பொன்னையன் கலந்துகொண்டார்.


அப்போது அவர் பேசுகையில், பாஜக  அதிமுகவின் கூட்டணி கட்சிதான் என்றாலும், அக்கட்சி தமிழகத்தில் வளர்வது அதிமுகவுக்கு- திராவிட கொள்கைகளுக்கு- தமிழக நலனுக்கு நல்லதல்ல என்று கூறிய அவர், தமிழக உரிமைகளுக்கு எதிராக பிஜேபி தொடர்ந்து செயல்படுகிறது என்று குற்றம்சாட்டினார். மேலும் பேசிய அவர் காவிரி நதிநீர் - முல்லை பெரியாறு விவகாரத்தில்  தமிழக பாஜக இரட்டை வேடம் போடுகிறது. கர்நாடக பாஜக தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை கொடுக்கக்கூடாது என போராடுகிறது. ஆனால் தமிழக பாஜக வாய்மூடி மவுனம் காக்கிறது என்று குற்றம்சாட்டினார். 




இந்த பயிற்சி முகாமில் அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி, முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், கே.பி.அன்பழகன் மற்றும் பொன்னையன்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளையும், பயிற்சியையும் வழங்கினர். 




தங்கமணி பேசியபோது அதிமுகவை ஒழிக்க வேண்டும் என்பதே திமுகவின் எண்ணம். அதிமுகவிற்காக உழைக்கும் நபர்கள் மீது போலி வழக்குகளை பதிவு செய்து வருகின்றனர். இளைஞர்களுக்கு அதிமுகவில் புதிய பொறுப்புகளை வழங்க வேண்டும் என்று அதிமுக செயல்படுகிறது. சிறப்பாகப் பணியாற்றினால் 2026ல் நிச்சயம் ஆட்சியமைப்போம் என்றார்.


முன்னாள் அமைச்சர் வேலுமணி பேசிய போது, திமுக அரசு சாதனையை அல்ல வேதனையை மட்டுமே தமிழக மக்களுக்கு கொடுத்துக் கொண்டிருக்கின்றது. அதிமுகவின் திட்டங்களுக்கு லேபிள் ஒட்டி திமுக திறந்து வருகிறது. திமுகவின் மோசமான ஆட்சியை ஓராண்டாக மக்கள் பார்த்து வருகிறார்கள். இந்த அரசு விளம்பரத்தில் மட்டும் தான் ஓடிக்கொண்டிருக்கிறது என்று குற்றம்சாட்டிய அவர், 2024ல் வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றிபெறும் என்றார்.


இப்பயிற்சி முகாமில் அமைச்சர்கள் பலரும் திமுகவை தாக்கி பேசியிருந்த நிலையில் பொன்னையன் பாஜகவை கடுமையாக விமர்சித்திருப்பது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.