இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா. கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களில் இருந்தும் ஓய்வு பெற்றுவிட்ட ரெய்னா லெஜண்ட்ஸ் கிரிக்கெட், வெளிநாட்டு கிரிக்கெட் தொடர்களில் மட்டும் அவ்வப்போது ஆடி வருகிறார்.


இந்த நிலையில், சுரேஷ் ரெய்னா நெதர்லாந்து நாட்டில் உள்ள ஆம்ஸர்டம் நகரில் உணவகம் ஒன்றை புதியதாக தொடங்கியுள்ளார். சுரேஷ் ரெய்னா புதியதாக உணவகம் தொடங்கியிருப்பதற்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


ரெஸ்டாரண்ட் தொடங்கிய ரெய்னா:


புதியதாக தொடங்கியுள்ள உணவகத்தின் புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சுரேஷ் ரெய்னா கூறியிருப்பதாவது, “ ஆம்ஸ்டர்டாமில் உள்ள ரெய்னா இந்தியன் உணவகத்தை அறிமுகப்படுத்துவதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அங்கு சமையல் மற்றும் உணவில் எனது ஆர்வம் உள்ளது. கடந்த ஆண்டுகளில் உணவின் மீதான எனது ஆர்வத்தை பார்த்திருப்பீர்கள். எனது சமையல் சாகசங்களையும் பார்த்து இருப்பீர்கள். தற்போது, இந்தியாவின் மிகவும் உண்மையான சுவையை ஐரோப்பியாவின் இதயப்பகுதிக்கு எடுத்துச்  செல்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.






நாங்கள் ஒன்றாக சுவையான சாகசத்தை மேற்கொள்ளும்போது என்னுடன் சேருங்கள்.” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். மேலும், உணவகத்தில் சமையல் கலைஞர் உடையில் ரெய்னா சமைக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். சுரேஷ் ரெய்னாவின் மனைவி ஆம்ஸ்டர்டாம் நகரில் உள்ள பிரபல நிறுவனத்தில் பெரிய பொறுப்பில் பணியாற்றி வருகிறார். இந்த சூழலில், சுரேஷ்ரெய்னா தன்னுடைய புதிய உணவகத்தை ஆம்ஸர்டாமிலே தொடங்கியுள்ளார்.


முன்னாள் கிரிக்கெட் வீரர்


இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக உலா வந்த ரெய்னா, சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் இன்றளவும் தோனிக்கு பிறகு அதிகளவில் ரசிகர்களால் நேசிக்கப்படும் வீரராக உலா வருகிறார். இந்திய அணிக்காக 2005ம் ஆண்டு அறிமுகமான சுரேஷ் ரெய்னா இதுவரை 18 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 1 சதம், 7 அரைசதங்களுடன் 768 ரன்களும், 226 ஒருநாள் போட்டிகளில் ஆடி 5 சதம், 36 அரைசதங்களுடன் 5 ஆயிரத்து 615 ரன்களும், 78 டி20 போட்டிகளில் ஆடி 1 சதம் 5 அரைசதங்களுடன் 1604 ரன்களும் எடுத்துள்ளார்.


சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் நாடித்துடிப்பாக இருந்த சுரேஷ் ரெய்னா 205 ஐ.பி.எல். போட்டிகளில் ஆடி 1 சதம், 39 அரைசதங்களுடன் 5 ஆயிரத்து 528 ரன்களை விளாசியுள்ளார். கிரிக்கெட் வீரராக அசத்திய சுரேஷ் ரெய்னா தற்போது சமையல் கலைஞராக, உணவக உரிமையாளராக வெற்றி பெறவும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


மேலும் படிக்க: IND vs WI India Squad: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடர்.. டெஸ்ட் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு..!


மேலும் படிக்க: Champions Trophy 2013: இன்றோடு 10 வருடம்… 2013-இல் தோனி தலைமையில் சாம்பியன்ஸ் டிராஃபி வென்ற இந்திய அணி..