கேப்டன் தோனி தலைமையிலான இந்திய அணி 2013-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராஃபியை வென்று கோப்பையை கொண்டு வந்த நாளான இன்றைய தினத்தை ரசிகர்கள் நினைவுகூர்ந்து வருவதுடன் பிசிசிஐ ஒரு சிறப்பு பதிவை வெளியிட்டு மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளது.


ஐசிசி கோப்பை வென்று 10 ஆண்டுகள்


பொதுவாகவே பிறந்தநாள் வரும்போது எல்லோருமே மகிழ்ச்சியுடன் இருப்பார்கள். கொஞ்சம் வயதான பிறகும் பிறந்தநாள், பிறந்தநாள் தான். ஆனால் வயதாகிறதே என்ற சிறு உறுத்தல் உள்ளே தொற்றிக்கொள்ளும். அல்லது அந்த வயதில் செய்து முடிக்க திட்டமிட்டிருந்த திருமணமோ, வீடு கட்டுவதோ போன்ற விஷயங்கள் இன்னும் நடக்கவில்லையே என்ற வருத்தம் இருக்கும். அதே மனநிலையில் தான் இந்திய கிரிக்கெட் அணியும், ரசிகர்களும் இன்றைய நாளை கடக்கின்றனர். இன்று சாம்பியன்ஸ் டிராஃபி வென்று 10-வது ஆண்டு என்ற பெருமகிழ்வு இருந்தாலும், அதன் பின் ஒரு ஐசிசி டிராஃபி கூட வெல்லவில்லையே என்ற வருத்தம் எல்லோர் மனதின் ஓரத்திலும் இருக்கத்தான் செய்கிறது. இருப்பினும் இந்த ஆண்டு இந்தியாவில் உலகக்கோப்பை நடக்க உள்ளது என்பதால் பல ரசிகர்கள் மனதை தேற்றிக்கொண்டு 10 ஆண்டை கொண்டாடி வருகின்றனர்.






2013 சாம்பியன்ஸ் டிராபி


ஜூன் 23, 2013 அன்று, எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில், தொடரை நடத்தும் இங்கிலாந்தை ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இந்திய கிரிக்கெட் அணி 2013 ஆம் ஆண்டில் இரண்டாவது ஐசிசி சாம்பியன்ஸ் டிராஃபி பட்டத்தை வென்றது. இந்த நாள் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் பல சாதனைகளைக் குறித்தது, அவற்றில் ஒன்று மகேந்திர சிங் தோனியின் மூன்று ஐசிசி முக்கிய போட்டிகளையும் வென்ற முதல் கேப்டன் என்ற சாதனையாகும். தோனி 2007 இல் ஐசிசி டி20 உலகக் கோப்பையை முதலில் வென்றார். அதைத் தொடர்ந்து 2011 இல் உலகக் கோப்பை மற்றும் கடைசியாக 2013 இல் சாம்பியன்ஸ் டிராபி வென்று கோப்பைகளை குவித்தார். 






பிசிசிஐ டிவிட்டர் பதிவு


இந்த நிலையில் இந்த 10-வது ஆண்டில், அதனை நினைவு கூறும் வகையில், பிசிசிஐ ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டது, 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நாளில் சாம்பியன்ஸ் டிராபியை வென்றதற்காக இந்தியாவை வாழ்த்தி, டிவிட்டரில் எழுதியதாவது, "#இந்த நாளில் 2013-இல், தோனி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து அணியை வென்று ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வென்றது! லிமிட்டட் ஓவர் கிரிக்கெட்டில் மூன்று விதமான ஐசிசி கோப்பைகளையும் வென்ற முதல் கேப்டன் ஆனார் எம்எஸ் தோனி!" என்று எழுதினர். பல ரசிகர்களும் இந்த தினத்தில் பல செய்திகளை பகிர்ந்து வருகின்றனர்.






தோனி தலைமையிலான இந்திய அணி 


ஐசிசி கோப்பைகளை வெல்வது அவ்வளவு சுலபம் அல்ல, தோனி அப்படி செய்து காட்டியதால் அதனை எளிது என்று எண்ணிவிட்டோம் என்பதை அடுத்த பத்தாண்டுகள் நமக்கு புரிய வைத்துள்ளன. இருப்பினும், 10 ஆண்டுகளுக்கு முன் அந்த கோப்பையை வென்ற தருணங்கள் இன்னும் பலர் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளன. கோலி வென்றதும் துள்ளி குதித்தது, புஷ்-அப்ஸ் செய்தது, கோப்பையை வாங்கி அணியினரிடம் கொடுத்துவிட்டு தோனி ஓரமாக நின்றது என எல்லாம் நம் கண் முன்னே தோன்றி மறைகின்றன. அந்த நேரத்தில் ஷிகர் தவான் அசுர ஃபார்மில் இருந்தார். அவர் அந்த தொடரில் 363 ரன்கள் குவித்து இருந்தார். 170 ரன்களுக்கு மேல் கோலி, ரோகித் அடிக்க, இறுதிப்போட்டியில் கோலி அடித்த முக்கியமான 43 ரன்கள், அதே போட்டியில் ஜடேஜா வந்து அதிரடியாக அடித்த 33 ரன்கள் மற்றும் தொடர் முழுவதும் எடுத்த 12 விக்கெட்டுகள், அஷ்வினின் 8 விக்கெட்டுகள், இஷாந்த் சர்மாவின் 10 விக்கெட்டுகள் என எல்லோருடைய பங்களிப்பும் இந்திய அணியை அந்த இடத்திற்கு செல்ல உதவியது. ஒட்டுமொத்தமாக அந்த கப்பலை வழி நடத்தி சென்ற கேப்டன் தோனி.