தற்போது 30 வயதுக்குள் இருப்பவர்களுக்கு ரிக்கி பாண்டிங் என்றால் அவர் ஒரு கிரிக்கெட் வீரர் என்பதை தாண்டி பெரிய நினைவு இருக்காது. பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை இவரது காலத்தில் மேலும் பலமாக்கினார். இவரிடம் இருந்து கற்றுக்கொள்ள பல விஷயங்கள் உள்ளன.


1999-ம் ஆண்டு உலக கோப்பையை வென்று கொடுத்தவர் ஸ்டீவ் வாஹ். தவிர அப்போது ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி பல தொடர் வெற்றிகளை அடைந்தது. இந்த நிலையில் 2002-ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டார். 2003 மற்றும் 2007-ம் ஆண்டு உலககோப்பையை ரிக்கி வென்றுகொடுத்தார்.




டிராவிட்,  குக் போன்றவர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தினார்கள். ஜெய சூர்யா, ஜெயவர்த்தனே, கங்குலி உள்ளிட்டவர்கள் ஒரு நாள் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தினார்கள். ஆனால் இரு வடிவங்களிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர்கள் சச்சின், ரிக்கி பாண்டிங், சங்ககரா, காலிஸ் உள்ளிட்ட சிலரே.


சச்சினுக்கு பிறகு டெஸ்ட், ஒரு நாள் என இரு வடிவங்களிலும் தலா 13,000 ரன்களுக்கு மேல் எடுத்தவர் ரிக்கி பாண்டிங்.  ஆரம்ப காலங்களில் ஐபிஎல் தொடரில் விளையாடியர்கள் அதன் பிறகு மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் தற்போது டெல்லி அணிக்கும் பயிற்சியாளராக இருக்கிறார்.


அணியில் ஒரு வீரராக இருக்கும்போது நான் எண்ணை கேப்டனாக உணர்வேன். அப்போதுதான், ஒரு முடிவு ஏன் எடுக்கப்படுகிறது என்பதை புரிந்துகொள்ள முடியும். முடிவுகள் ஏன் மாற்றி  எடுக்கப்படுகிறது என்பதை புரிந்துக்கொள்ள முடியும். பிற்காலத்தில் நான் கேப்டனாக நியமனம் செய்யும்போது இது எனக்கு பயனுள்ளதாக இருந்தது. நீங்கள் ஒரு குழுவில் ஒரு அங்கமாக இருக்கலாம். ஆனால் ஒரு கேப்டனாக யோசிக்க கற்றுக்கொண்டால்தான் ஒரு டீமின் அவசியம் புரியும் என பாண்டிங்  பல ஆண்டுகளுக்கு முன்பான ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார்.




நான் கேப்டனாக நியமனம் செய்த போது ஸ்டீவ் வாஹ் சொன்ன ஒரு யோசனை முக்கியமானது. கேப்டனாக பொறுப்பேற்றுக்கொண்ட சமயத்தில் சிறிய தவறு செய்தாலும் ஒரு வீரராக உங்களின் செயல்பாடு பாதிக்கும் என வாஹ் கூறினார். அதனால் பேட்டிங் செய்யும்போது நான் கேப்டன் எனபதையே மறந்துவிடுவேன் என குறிப்பிட்டிருக்கிறார்.


கேப்டனாக இல்லாத போது கேப்டனாக உணர்வது, கேப்டனாக இருக்கும்போது ஒரு வீரராக மட்டுமே உணர்வதும் நாம் அனைவருமே கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்.


ரிக்கி பாண்டிங் குறித்து ரோஹித் சர்மா கூறும்போது, ஒரு கேப்டனாக இருக்கும்போது நீங்கள் யோசிக்கவே தேவையில்லை. அனைவரின் கருத்தையும் கேட்டு அதனை ஆராய்ந்து முடிவெடுத்தால்போதும். தவிர ஒரு குழுவில் 20 நபர்கள் இருக்கும்போது கேப்டனை தவிர்த்து 10 நபர்கள் மட்டுமே விளையாட முடியும். ஆனால் அனைவருமே ஒரு டீமுக்கு முக்கியம் என்பதை தொடர்ந்து உணர்த்த வேண்டும் என்பதை ரிக்கி பாண்டிங் தொடர்ந்து வலியுறுத்துவார் என ரோஹித் கூறியிருக்கிறார். தவிர ரிஷப் பந்த், அமித் மிஸ்ரா ஆகியோரும் ரிக்கி பாண்டிங் குறித்து வெகுவாக பாராட்டி இருக்கிறார்கள்.




இதை விட நாம் கற்றுக்கொள்ள வேண்டியு பாடம் ஒன்று இருக்கிறது.  உங்களுடைய வெற்றிக்கு காரணம் என்னும் கேள்விக்கு அவர் அளித்த பதில் முக்கியமானது.


ஒவ்வொரு வீரரும் பேட்டிங் செய்யும் போது பீல்டர்கள் எங்கு இருப்பார்கள் என்பது மனதில் பதிந்திருக்கும். ஆனால் என்னுடைய மனதில் பீல்டர்கள் எங்கு இருப்பார்கள் என்பதை பதிய வைத்துகொள்வதில்லை. எங்கு `கேப்` (இடைவெளி) இருக்கிறது என்பது மட்டுமே எனக்கு தெரியும். அங்கு பந்தை செலுத்துவதற்கு முயற்சி செய்வேன் என தெரிவித்திருக்கிறார்.


இதுவேதான் நமக்கும். நாம் ஒவ்வொருவரும் எங்கு தடை இருக்கிறது என்பதை மட்டுமே நாம் பார்க்கிறோம், வாய்ப்புகளை, தீர்வுகளை கவனிப்பதில்லை. தீர்வுகளை குறித்து மட்டுமே சிந்திக்க தொடங்கிவிட்டால் பிரச்சினைகள் குறித்து நாம் யோசிக்கபோவதில்லை.


பீல்டர்கள் எங்கு இருப்பார்கள் என்பது உங்கள் கையில் இல்லை. ஆனால் தீர்வுகள் உங்கள் கையில் இருக்கிறது.


IPL 2021: ஐபிஎல் தொடரில் இருந்து வாஷிங்டன் சுந்தர் விலகல்..ஆர்சிபிக்கு பின்னடைவு..!