ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல் 2021 -ன் இரண்டாம் பாதியில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக பெங்கால் வீரர் வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப், சேர்க்கப்பட்டுள்ளார்


ஐபிஎல் 2021-ன் முதல் பாதியில் வாஷிங்டன் ஆறு போட்டிகளில் விளையாடி, 32.11 சராசரியுடன் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். விராட் கோலி தலைமையில் ஆர்சிபி அணிக்காக 2018 ஐபிஎல் தொடரில் இருந்து விளையாடி வரும் சுந்தர் 32 போட்டிகளில் 19 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார்.


 






24 வயதான  ஆகாஷ் தீப், 2021 சையது முஷ்டாக் அலி டிராபியில் 5 போட்டிகளில் விளையாடி இரண்டு விக்கெட் எடுத்துள்ளார். சராசரி 19.28. 15 டி20 போட்டிகளில் விளையாடி 21 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சராசரி 16.85. 


அணியில் ஏற்பட்ட மாற்றம் குறித்து ராயல் சேலஞ்சர்ஸ் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், ‘ஆர்சிபி இளம் வீரர்களை மேம்படுத்துவது மற்றும் வளர்ப்பதில் கவனம் செலுத்துகிறது. அணி தொடர்ந்து தனித்துவமான திறமைகளை வளர்த்து வருகிறது. இளம் திறமையாளர்கள் ஐபிஎல் மற்றும் இந்திய கிரிக்கெட்டில் நுழைவதற்கான பாதையை உருவாக்குகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்சிபி இந்த சீசனில் செய்த  ஐந்தாவது மாற்றமாகும்.


 






முன்னதாக,  ஆஸ்திரேலிய லெக்ஸ்பின்னர் ஆடம் ஜாம்பாவுக்குப் பதிலாக இலங்கையின் வனிந்து ஹசரங்கா,  நியூசிலாந்தின் ஃபின் ஆலனுக்குப் பதிலாக சிங்கப்பூர் வீரர் டிம் டேவிட் அணியில் சேர்க்கப்பட்டனர். இதேபோல், ஆஸ்திரேலியாவின் டேனியல் சாம்ஸ் மற்றும் கேன் ரிச்சர்ட்சன் ஆகியோருக்கு பதிலாக துஷ்மந்த சமீரா மற்றும் ஜார்ஜ் கார்டன் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டனர். தனிப்பட்ட காரணங்களால் தலைமை பயிற்சியாளர் சைமன் கேடிச்சின் பதவி விலகலுக்கு பிறகு, மைக் ஹெசான் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். அணியின் பயிற்சியாளர், வீரர்கள் மாற்றம் செய்யப்பட்டு வருவது அணியை எந்தளவிற்கு முன்னேற்றத்துடன் கொண்டு செல்லும் என்பதை போக போகத்தான் பார்க்க முடியும்.