தஞ்சாவூர்: புதியவை படைக்கும் போதுதான் திறன் வளரும். எதையும் எதிர்கொள்ளும் தன்னம்பிக்கை பிறக்கும். வெற்றி என்பது எளிதானதல்ல. விடாத முயற்சியும், தளராத தன்னம்பிக்கையும் வார்ப்பு இரும்பு போல் இறுகி, வலுவாகும் போதுதான் வெற்றியின் சிகரம் நோக்கி நடை போட இயலும். தனித்திறன்கள் கூர்ந்து கவனித்தல், நினைவாற்றல் போன்றவற்றை வளர்க்கும்.

அதுபோல சிறுவயது முதல் ஏராளமான தடகளப் போட்டிகளில் பரிசுளை வென்றெடுத்த தஞ்சை முனிசிபல் காலனியில் இயங்கி வரும் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி (நீலகிரி) எட்டாம் வகுப்பு மாணவி விபீஷா (13) வின் அசத்தலான மிகப்பெரிய வெற்றிதான் வில்வித்தை போட்டியில் தேசிய அளவில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கத்தை தனதாக்கி தஞ்சைக்கும், பெற்றோருக்கும், பள்ளிக்கும், தன்னை பயிற்றுவித்த பயிற்சியாளருக்கும் பெரிய பெருமையை ஏற்படுத்தியது.

இம்மாணவியின் தந்தை குமார். தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். அம்மா இந்து. தங்கை மனிஷா. இம்மாணவி மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் பல தங்கப்பதக்கம், விருதுகள், சான்றிதழ்கள், கோப்பைகள் பெற்று அசத்தியவர். கடந்த ஓராண்டாக வில்வித்தையை கற்று வருகிறார். மிக குறுகிய காலத்தில் இந்த வில்வித்தை போட்டியில் தேசிய அளவில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் பெற்றுள்ளார் என்பதுதான் குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் சென்னையில் மாநில அளவில் நடந்த போட்டியில் வெண்கலப்பதக்கம் பெற்ற மாணவி விபீஷா, கடும் பயிற்சி எடுத்து சமீபத்தில் ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் தேசிய அளவில் நடந்த 13வது இளையோருக்கான (14 வயதுக்கு உட்பட்டவர்கள் பிரிவு) வில் வித்தை போட்டியில் 29 மாநிலங்களை சேர்ந்த 120 பேர் பங்கேற்றதில் தமிழக அணி சார்பில் சென்று முதலிடம் பெற்று தங்கப்பதக்கத்தை பெற்றுள்ளார்.

தேசிய அளவில் வில்வித்தை போட்டியில் தஞ்சை மாவட்டத்தில் தங்கப்பதக்கம் பெற்ற முதல் மாணவியாக விபீஷா திகழ்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒவ்வொருவரும் தம்மைப் பற்றி அறிந்துகொள்வது   அவசியம். நம்மைப் பற்றி பிறர் அறிந்து வைத்திருப்பதைவிட நாம் அதிகம் அறிந்திருக்க வேண்டும். அப்படி மாணவி விபீஷா வில்வித்தையில் தன்னை பற்றி நன்கு அறிந்து கொண்டு அதில் எடுத்த கடுமையான முயற்சிகள் இன்று தேசிய அளவில் சாதனை படைக்க வைத்துள்ளது.

மாணவியின் சாதனை குறித்து வில்வித்தை பயிற்சியாளர் முனைவர் பட்ட ஆய்வாளர் விஜய் கூறுகையில், “மிக குறுகிய காலத்தில் மாணவி விபீஷா இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளார். வரும் காலத்தில் ஏசியன், காமன்வெல் போட்டி போன்றவற்றில் நிச்சயம் சாதனை படைப்பார். வில்வித்தை போட்டியில் அடுத்தடுத்த லெவலில் முன்னேற்றம் கண்டு வரும் காலத்தில் ஒலிம்பிக்கில் இந்தியாவிற்காக விபீஷா தங்கப்பதக்கம் பெற வேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பம். இது நிச்சயம் நடக்கும். தமிழக அணிக்கும், ஆந்திரா அணிக்கும் இடையில் நடந்த இறுதிப் போட்டியில் தான் இந்த சாதனை நிகழ்ந்தது. தமிழக அணியில் தஞ்சை, திருச்சி, கோயம்புத்தூர், சென்னையை சேர்ந்த மாணவிகள் பங்கேற்றனர். இதில் தஞ்சையிலிருந்து சென்றவர்தான் விபீஷா. இம்மாணவி இன்னும் பல சாதனைகள் புரிந்து வீரமங்கையாக திகழ்வார். அதற்காக இப்போதிலிருந்தே தீவிர பயிற்சிகள் பெற்று வருகிறார்” என்றார்.


பயிற்சியாளர் விஜய் இந்திய வில்வித்தை சங்க தேர்வில் தேசிய அளவில் லெவல்-1 மற்றும் மாநில அளவில் லெவல் 2 பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.