FIFA World Cup 2022: 22வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா கத்தாரில் நடைபெறவுள்ளது. போட்டிகளைக் காணவருபவர்களுக்கு ஃபிபா நிர்வாகம் சில கட்டுப்பாடுகளை விடுத்துள்ளது. அது குறித்து இந்த தொகுப்பில் காணலாம். 


உலகக் கோப்பை போட்டிகள் என்றாலே பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. அதுவும் பல நாள் கனவை நிறைவேற்ற களத்தில் விளையாடும் இரு அணியின் 22 வீரர்களும் வெற்றியை உயிராய் கருதி விளையாடுவர். இப்படியாக பரபரப்பாக உள்ள இந்த போட்டிகள் வரும் ஞாயிற்றுக்கிழமை தொடங்க இருக்கிறது. 


மொத்தம் 32 அணிகள் பங்குபெறும் இந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டியானது, 29 நாட்கள் நடைபெறவுள்ளன. இதில் மொத்தம் 64 போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முறை நடைபெறவுள்ள உலகக் கோப்பை கால்பந்து போட்டியானது முதல் முறையாக கத்தாரில் நடைபெறவுள்ளது. இதனால் அனைத்து அணிகளும் கத்தாருக்கு பயணம் மேற்கொண்டு வருகின்றன. போட்டிகள் இன்னும் மூன்று நாட்களில் தொடங்கவுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த உலகக் கோப்பை தொடரில் மொத்தம் 32 அணிகள் கலந்து கொண்டாலும், இந்த முறை கோப்பையை வெல்லும் அணி என ஒரு சில அணிகள் மீதே நம் எதிர்பார்ப்பு இருக்கும். இந்நிலையில் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளுக்கான அட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.


நவம்பர் மாதம் 20ஆம் தேதி தொடங்கி டிசம்பர் மாதம் 18ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டியானது நாளுக்கு நாள் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. போட்டியில் கலந்து கொள்ளும் 32 அணிகளுக்கும் குறைந்த பட்சம் 73 கோடி ரூபாய் ஃபிஃபா நிர்வாகத்தால் வழங்கப்படும். அதேபோல், முதல் இடத்தினைப் பிடித்து கோப்பையை வெல்லும் அணிக்கு, கோப்பையுடன் 342 கோடி ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்படவுள்ளது. இரண்டாவது இடத்தினைப் பிடிக்கும் அணிக்கு 244 கோடி ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மூன்றாவது இடம் பெறும் அணிக்கு 220 கோடி ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்படவுள்ளது. 


போட்டிகளைக் காண உலகம் முழுவதில் இருந்தும் தீவிரமான ரசிகர்கள் கத்தார் நாட்டிற்கு வருவார்கள். அவ்வாறு வருபவர்களுக்கு உலகக் கோப்பை கால்பந்து திருவிழாவை நடத்தும் ஃபிஃபா நிர்வாகம் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதாவது, கால்பந்து திருவிழாவை காண கத்தார் வரும் ரசிகர் மற்றும் ரசிகைகள், கவர்ச்சியான ஆடைகள் அணியத் தடை விதித்துள்ளது. மேலும், மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் அல்லது சிறைதண்டணை விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 



உலகக் கோப்பை கால்பந்துப் போட்டி ரசிகர்கள்


 


அதேபோல், ஃபிபா நிர்வாகம், ரசிகர்கள் மற்றும் ரசிகைகள் தங்கள் விருப்பப்படி ஆடைகளை அணியலாம், அதேநேரத்தில் கத்தார் நாட்டின் சட்டத்திற்கும் மதிப்பு கொடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் குறித்து உலகக் கோப்பை கால்பந்து திருவிழாவின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி நியாஸ் கூறுகையில், குறிப்பிட்ட இருக்கையில் உள்ள நபரை ‘ஜூம்’ செய்து பார்க்கும் அளவிற்கு மிகவும் அதிநவீன தொழில்நுட்பத் திறன் கொண்ட சிறப்புத் திறன் கொண்ட கேமராக்கள் இந்த முறை பயன்படுத்தப்படவுள்ளது. இதன் மூலம் மைதானம் முழுவதும் நடைபெறும் அனைத்து நடவடிக்கைகளும் பதிவு செய்யப்படும். இவ்வாறு பதிவு செய்வதன் மூலம் புகார்கள் எழும் போது விசாரணைக்கு பயன்படுத்த பயனுள்ளதாக இருக்கும் என தெரிவித்துள்ளார். 


ஆனால், இந்த கட்டுப்பாடு என்பது கால்பந்து ரசிகர்களிடத்தில் பெரும் ஏமாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது. கால்பந்து திருவிழா என்பது மைதானத்திற்குள் விளையாடும் 22 வீரர்களை மட்டும் உள்ளடக்கியது கிடையாது. அது மைதானத்தில் ஆர்ப்பரிப்புடன் வீரர்களை உற்சாகப்படுத்தும் ரசிகர்களையும் சேர்த்ததுதான். எனவே இந்த கட்டுப்பாட்டை ஃபிபா நிர்வாகம் திரும்பப் பெறவேண்டும் என பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.