கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியை கட்டிப்பிடிக்க ஓடிவந்த ரசிகைகளை பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்து நிறுத்தும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் எந்த அளவிற்கு இருக்கிறார்களோ, அதை விட இரண்டு மடங்கு ரசிகர்கள் கால்பந்து விளையாட்டிற்கு உண்டு. கால்பந்து தொடரில் பல நாடுகளில் லீக் தொடர்கள் நடத்தப்பட்டாலும், ஃபிபா உலகக் கோப்பை என்றதும் ஒட்டுமொத்த உலக கால்பந்து ரசிகர்களும் உற்று நோக்கும் ஒரே தொடர் இந்த தொடர் மட்டும்தான்.
அந்தவகையில் ஃபிபா சர்வதேச கூட்டமைப்பு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகக் கோப்பை கால்பந்து தொடரை நடத்தி வருகிறது. தற்போது நடைபெற இருக்கும் இந்த தொடரானது வருகின்ற 20ம் தேதி கத்தார் நாட்டில் தொடங்குகிறது.
32 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் 8 குழுக்களாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றுகளில் விளையாட இருக்கின்றனர். முதல் போட்டியானது வருகின்ற 20ம் தேதி கத்தார்-ஈகுவடார் நாடுகளுக்கிடையே நடைபெற இருக்கிறது.
இந்த அதிகாரபூர்வ தொடர் தொடங்குவதற்கு முன்னதாகவும், உலகக் கோப்பை தொடருக்கு அணிகள் தயாராகும் வகையிலும் ஒவ்வொரு அணிகளும் பயிற்சி போட்டிகளில் விளையாடி வருகிறது. அந்த வகையில் நேற்று நள்ளிரவில் நடந்த பயிற்சி ஆட்டத்தில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா அணியும், ஐக்கிய அரபு அமீரக அணியும் மோதியது.
போட்டியின் தொடக்கம் முதலே பலம் வாய்ந்த அர்ஜெண்டினா அணி, ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது ஆதிக்கம் காட்டத் தொடங்கியது. போட்டி தொடங்கிய 17 வது நிமிடத்தில் அர்ஜெண்டினா வீரர் ஜூலியன் அல்வாரெஸ் கோல் அடித்து அசத்தினார். தொடர்ந்து, ஐக்கிய அரசு அமீரகத்திற்கு எதிராக நட்சத்திர வீரர் ஏஞ்சல் டி மரியா 25 வது நிமிடத்தில் வலை நோக்கி பந்தை தள்ள, மீண்டும் அடுத்த 8வது நிமிடத்தில் ஏஞ்சல் டி மரியா மீண்டும் ஒரு கோலை பதிவு செய்தார்.
இதன்மூலம், அர்ஜெண்டினா அணி போட்டி தொடங்கிய அரை மணிநேரத்திலேயே 3 - 0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. ஐக்கிய அரபு அமீரகம் தொடர்ந்து எத்தனையோ முறை வலையை நோக்கி கொண்டு சென்றாலும், அர்ஜெண்டினா வீரர்களின் கை மட்டுமே ஓங்கி இருந்தது.
அனைவரும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த அந்த தருணமும் இங்கு நிறைவேறியது. ஆம், இறுதிவரை உலக புகழ்பெற்ற மெஸ்ஸி கோல் அடிப்பாரா என்ற ஏக்கத்தை நேற்றைய போட்டியில் தீர்த்து வைத்தார். சரியாக 44வது நிமிடத்தில் மெஸ்ஸி தனது பங்கிற்கு பந்தை கோலாக மாற்ற, அதன் தொடர்ச்சியாக ஜூலியன் அல்வாரெஸ் மற்றும் 60 வது நிமிடத்தில் ஜோக்வின் கொரியா ஒரு சிறப்பான கோலை பதிவு செய்தனர்.
அடுத்த 30 நிமிடங்கள் ஐக்கிய அரபு அமீரகம் எவ்வளவு முறை முயற்சித்தும், அவர்களால் ஒரு கோலை கூட பதிவு செய்ய முடியவில்லை. இதன்மூலம் அர்ஜெண்டினா அணி 5-0 என்ற கணக்கில் ஐக்கிய அரபு அமீரகத்தை எளிதாக வீழ்த்தியது.
அர்ஜெண்டினா அணி சார்பில் அதிகபட்சமாக ஏஞ்சல் டி மரியா 2 கோல்களும், லியோனல் மெஸ்ஸி, ஜூலியன் அல்வாரெஸ் மற்றும் ஜோக்வின் கொரியா ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்தனர்.
இந்த போட்டியின் நடுவே லியோனல் மெஸ்ஸியின் தீவிர ரசிகைகள் இருவர் அடுத்ததுத்து ஓடிவந்து அவரை கட்டிப்பிடிக்க முயன்றனர். ஆனால் அதற்குள் மைதானத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த அதிகாரிகள், மெஸ்ஸியை நோக்கி ஓடிவந்த ரசிகைகளை மடக்கிப் பிடித்து மைதானத்தில் இருந்து அப்புறப்படுத்தினர். ஆனால் கால்பந்து வீரர் மெஸ்ஸி தனது ரசிகைகள் இருவரையும் கட்டிப்பிடிக்க தயாராவது போல உடல்மொழியை வெளிப்படுத்தினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
குரூப் சி-யில் உள்ள அர்ஜெண்டினா வருகின்ற 22ம் தேதி சௌதி அரேபியாவையும், 27ம் தேதி மெக்ஸிகோ மற்றும் டிசம்பர் 1ம் தேதி போலந்து அணியையும் சந்திக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.